புதன், 6 மார்ச், 2013

கர்நாடக மடத்தை வாங்குகிறார் நித்யானந்தா! மக்கள் போர்க்கொடி

பெங்களூரு: கர்நாடகாவில், மகாலிங்கேஸ்வரர் மகா பீடத்துக்கு, நித்யானந்தாவை மடாதிபதியாக நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது. கடைகளை அடைத்து, மக்கள் போராட்டம் நடத்தியதால், மடாதிபதி ராஜேந்திர சுவாமிகள் மடத்திலிருந்து வெளியேறினார்.
மகாலிங்கேஸ்வரர் மகா பீடம் என்ற சித்த சமஸ்தான மடம், 700 ஆண்டு பழமை வாய்ந்தது. 100 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களை உடைய, இந்த மகா பீடத்தின், மடாதிபதியாக, தற்போது, ராஜேந்திர சுவாமிகள் உள்ளார். இவர், சமீபத்தில், பெங்களூருவில் உள்ள, நடிகை ரஞ்சிதா புகழ், நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு நித்யானந்தாவிற்கு சால்வை அணிவித்து, ஆசிவழங்கி கவுரவித்தார். அப்போது, மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மடாதிபதியாக, நித்யானந்தாவை நியமனம் செய்வது தொடர்பாக அவர், பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், வரும், ஆகஸ்ட்டில், மகாலிங்கபுரத்தில் நடக்கவுள்ள, மகாலிங்கேஸ்வரர் விழாவின் போது, புதிய மடாதிபதி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது என, முடிவு செய்ததாகவும், செய்திகள் வெளியாகின. இதனால், மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மடாதிபதியாக, நித்யானந்தாவை நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராஜேந்திர சுவாமிகளின் முடிவுக்கு எதிராக, மடத்தின் பக்தர்களும், மகாலிங்கபுரம் பொதுமக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 
மகாலிங்கபுரத்தில், கடைகளை அடைத்து போராட்டமும் நடத்தினர். உடன், மடத்திலிருந்து வெளியேறிய ராஜேந்திர சுவாமிகள், முக்கிய பிரமுகர்களுடன், ரகசிய இடத்தில், ஆலோசனை நடத்தியுள்ளார். பின், அனைவரின், நெருக்கடிக்கு பணிந்து, நித்யானந்தாவை மடாதிபதியாக்கும் முடிவை, அவர் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ராஜேந்திர சுவாமிகளிடம் தொலைபேசி மூலம் கேட்ட போது, "பிரச்னை முடிந்து விட்டது. இது தொடர்பான விரிவான விபரங்களை, ஊர் முக்கியஸ்தர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்' என்று மட்டும் கூறினார். அதேநேரத்தில், நித்யானந்தா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "நான், மகாலிங்கேஸ்வரர் மடாதிபதியாக ஆர்வம் காட்டவில்லை. மடத்துக்கு வரும்படி, ஒரு முறை ராஜேந்திர சுவாமிகள் அழைப்பு விடுத்தார்; அங்கு நடக்கும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றேன். மடாதிபதியாகும் எண்ணம் எனக்கில்லை' என, குறிப்பிட்டுள்ளார்.

லிங்காயத்து மடங்கள் மீது நித்திக்கு, "கண்':

கர்நாடகாவின் லிங்காயத்து மடங்கள் மீது, நித்யானந்தா, "கண்' வைத்துள்ளதால், லிங்காயத்து சமூகத்தினரும், கன்னட அமைப்புகளும் கொந்தளித்துள்ளனர். பாகல்கோட்டை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான தாலுகாக்களில், லிங்காயத்து மடங்கள் இயங்கி வருகின்றன. இந்த மடங்களுக்கு, மாநிலத்தை ஆளும், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான, பா.ஜ., அரசு தேவையான நிதியுதவிகளை செய்து வருகிறது. தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நித்யானந்தாவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், கர்நாடகாவில் பலம் வாய்ந்த, லிங்காயத்து மடங்கள் மீது, "கண்' வைத்தார். இதில், பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்தின் மீது, ஆர்வம் காட்டினார். இதையறிந்த மற்ற லிங்காயத்து மடாதிபதிகள் அதிர்ச்சிஅடைந்தனர். நித்யானந்தாவை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். உதாரணமாக, சித்ரதுர்கா மடாதிபதி முருக ராஜேந்திர சுவாமிகள், தொலைபேசி மூலம், நித்யானந்தாவை தொடர்பு கொண்டு, "மதுரை ஆதீனம் போன்று நினைத்து, மகாலிங்கேஸ்வரர் மடத்துக்குள் நுழையக் கூடாது. அப்படி ஏதாவது செய்தால், விபரீத விளைவுகள் ஏற்படும்' என, எச்சரித்துள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: