புதன், 6 மார்ச், 2013

சினிமா துறைதான் பாலியல் வன்முறைகளை கற்றுத் தரும் ,,

த்ரிஷா: கருத்து காயத்ரிக்களின் அறச்சீற்றம்!"
த்ரிஷா டுவிட்டர்த்ரிஷாவைப் போன்ற நடிகைகளை வேட்டையாடி தமது காதலை ஏற்றே ஆக வேண்டும்’ என்பதுதான் தமிழ் சினிமா நாயகர்கள் நடிக்கும் படங்களின் கதை. இதே வேட்டையாடல்தான் டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திலும் இருக்கிறது. 
இந்த உலகின் சர்வரோக பிரச்சினைகளுக்கும் ரைட் ராயலாக தீர்வு சொல்லும் ஒரே உரிமை கருத்து கந்தசாமிகளுக்கு மட்டும்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. கருத்து காயத்ரிக்களுக்கும் அப்பேர்ப்பட்ட தன்னைத்தானே தத்துவஞானியாக நியமித்துக் கொள்ளும் ரைட் நிச்சயம் உண்டு. அதிலும் அந்த காயத்ரிக்கள் விஐபிகளாக இருந்தால் இன்னும் சிறப்பு.
பாலியல் வன்முறையால் டெல்லி மருத்துவ மாணவி கொல்லப்பட்டது குறித்து உதட்டுச் சாயம் தவிர்த்து வேறு எதற்கும் வாய்திறக்காதவர்களையும் பேசவைத்து அழகு பார்க்கின்றன ஊடகங்கள்! பரபரப்பிலும் கொஞ்சம் விஐபிகளை காக்டெய்லாக கலந்து விட்டால் செய்திக்கு செய்தி, கவர்ச்சிக்கு கவர்ச்சி. அந்த வகையில் 13.2.2013 தேதியிட்ட குமுதத்தில் த்ரிஷாவின் அதிரடி என்னும் செய்தி ஹீரோயின் வாய்ஸ் எனும் கொசுறு உட்தலைப்புடன் வெளியாகியிருக்கிறது.

அந்த செய்தியை அப்படியே படியுங்கள்:
“டெல்லி மாணவி கற்பழிப்பு விஷயத்தில் பாதிக்கப்பட்ட த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மருத்துவ விஞ்ஞானிகள் புதிய மருந்துகளை பரிசோதனை செய்வதற்காக விலங்குகளைப் பயன்படுத்துகிறார்கள். அதற்குப் பதிலாக சிறையில் இருக்கும் கற்பழிப்புக் குற்றவாளிகளையும், குழந்தைகளிடம் செக்ஸ் வன்முறையில் ஈடுபட்டவர்களையும் இந்த சோதனைக்குப் பயன்படுத்த வேண்டும்’ என்று அதிரடி அறிவிப்பை வெளியிட, பதிலுக்கு த்ரிஷாவுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்து விட்டன. த்ரிஷாவிடம் ஒரு மினிபேட்டி.
“டுவிட்டரில் என்னோட கருத்தைப் பார்த்துவிட்டு நானே எதிர்பார்க்காத அளவுக்கு ஆதரவுக் குரல்கள் வந்தது எனக்கே ஆச்சரியமா இருக்கு. அந்த அளவுக்கு டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவம் எல்லோரையும் பாதிச்சிருக்கு. வாய் பேசாத விலங்குகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது என்பது மனிதாபிமானமல்லாத செயல். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. உயிர்வதை கூடாதுங்கறதைப் பற்றி தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்திக்கிட்டே இருக்கேன். விலங்குகள் வதைக்கப்படுவதை தாங்க முடியாது. அப்படியிருக்கும் போது ஒரு பெண்ணை மிருகத்தனமா சிதைச்சது எவ்வளவு பெரிய கொடுமை. சம்பவத்தைக் கேள்விப்பட்டு நான் தூங்கவே இல்லை. அந்த ஆதங்கத்துலதான் மருத்துவப் பரிசோதனைக்கு கற்பழிப்புக் குற்றவாளிகளை உட்படுத்தணும்னு சொன்னேன், அவங்களால நாட்டுக்கும் நல்லது. அவங்களுக்கு தண்டனை கொடுத்த மாதிரியும் இருக்கும்”.
முதலில் இதே பிரச்சினைக்கு அம்மா சொன்ன ஆண்மை நீக்கம் என்பதை இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள்! இது தற்செயலா இல்லை பாசிச ஜெயாவின் வாரிசாக வரும் தகுதி கொண்டவர் கலையுலகில் இருக்கிறாரா? நல்லவேளை இதுவரை த்ரிஷா அரசியலில் இல்லை. இருந்திருந்தால் ஒரு ஜெயலலிதாவையே தாங்காத தமிழகம் மற்றுமொரு ஜெயலலிதாவின் வருகையால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கும்.
பாலியல் வன்முறை குறித்து பேசும் நடிகை த்ரிஷா முதலில் தனது துறை குறித்து சுயவிமரிசனம் செய்து விட்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் நேர்மை. அதிலும் தென்னிந்திய தேவதை த்ரிஷாவின் சினிமா துறைதான் பாலியல் வன்முறைகளை கற்றுத் தரும் என்சைக்ளோபீடியோவாக இருக்கிறது. அதற்கு உடன்பட்டுத்தான் த்ரிஷாவும் ஏனைய நடிகைகளும் கதைகளிலும், கவர்ச்சிகளிலும் நடித்து விட்டு கோடிகளில் ஊதியம் வாங்குகின்றனர்.
பாடல் வெளியீட்டு விழாக்கள் மற்றும் படம் குறித்த சந்தை நிகழ்ச்சிகளில் வேண்டுமென்றே கவர்ச்சி எனும் ஆபாச உடை அணிந்துதான் த்ரிஷாவும் அவரது திரையுலக தோழிகளும் காட்சியளிக்கிறார்கள். இவையனைத்திற்கும் திட்டமிட்ட ஒரு நோக்கம் உண்டு. அது பெண்ணுடலை வெறி கொண்டு பார்க்கும் ஒரு மலிவான ரசனையை ஆண்களிடம் உருவாக்கி, கதையாக்கி, ரசிக்க வைத்து காசு பார்ப்பது. வண்ணத்திரையிலோ, சினிக்கூத்திலோ, டைம்பாசிலோ இந்த நடிகைகளின் ஆபாசப்படங்கள்தான் பாடநூல்களில் ஆரம்பிக்கும் இறைவணக்கம் போல இடம்பெறுகின்றன. மேலாக ஒரு நடிகை தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு இத்தகைய கவர்ச்சிப் பட ஆல்பங்களை தொழில்முறை கலைஞர்களை வைத்து தயாரித்துத்தான் வெளியிடுகிறார்கள். அந்த வகையில் ஆபாசம் என்பதுதான் ஒரு நடிகைக்கு மூலதனம்.
அதே நேரம் ஒரு பெண் கவர்ச்சி உடை அணிவதுதான் பாலியல் வன்முறையைத் தூண்டுகிறது என்று மதவாதிகள் சொல்வதை நாம் ஏற்கவில்லை. இல்லையெனில் பாலியல் வன்முறைகளுக்கு உடைகள்தான் காரணம் என்று அயோக்கியர்களின் குற்றம் நியாயப்படுத்தப்படும். ஒரு பெண் நிர்வாணமாகக் கூட நடந்து செல்லட்டும். அதனால் தனக்கு ‘கற்பழிப்பு’ எண்ணம் ஏற்படுகிறது என்று யாராவது சொன்னால் நாம் ஏற்போமா? அல்லது முழு சாக்கு போட்ட பெண்கள் என்பதால் அவர்கள் அனைவரும் வன்புணர்ச்சி செய்யும் மிருகங்களிடமிருந்து தப்பிவிட்டார்களா?
இது ஒருபுறமிருக்க மதவாதிகளின் பிற்போக்கு கருத்துகளை வைத்து சினிமா உலகம் தன்னை நியாயப்படுத்த முடியாது. இங்கே ஆணின் பிடியிலிருந்து பெண்ணுடலை விடுவிக்கும் நோக்கம் இல்லை. மாறாக ஆணின் காமவெறி உலகிற்கு மட்டும் பெண்ணுடல் பயன்பட வேண்டும் என்ற பச்சையான நோக்கம் இருக்கிறது. இது கவர்ச்சி, ஆபாசம் என்று மட்டுமல்ல, எது அழகு என்று உருவாக்கப்படுவதிலும் இருக்கிறது.
‘த்ரிஷாவைப் போன்ற நடிகைகளை வேட்டையாடி தமது காதலை ஏற்றே ஆக வேண்டும்’ என்பதுதான் தமிழ் சினிமா நாயகர்கள் நடிக்கும் படங்களின் கதை. இதே வேட்டையாடல்தான் டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திலும் இருக்கிறது. அங்கே ‘கற்பழிப்பு’ என்றால் இங்கே வன்முறையாக காதல், கல்யாணம் என்று அளவு மட்டும் வேறுபடுகிறது. நிஜமான இளையோர் உலகிலும் இப்படித்தான் ஆண்கள் காதல் என்ற பெயரில் பெண்களை வேட்டையாடுகின்றனர். அமில வீச்சினால் விநோதினி கொல்லப்பட்டதற்கும் இதுவே அடிப்படை.
டெல்லி சம்பவத்திற்காக தூக்கம் வரவில்லை என்று துக்கப்படும் த்ரிஷா இத்தகைய கதைகளில் ஜாலியாக நடிப்பதற்கு என்ன காரணம்? கொள்கை வேறு, தொழில் வேறு என்பதா? இவரது கொள்கைப்படி மற்றவர்களை தண்டிக்கலாமென்றால் இவரது தொழில் நமது கொள்கைகளுக்கு எதிரானது என்று இவரை நாம் தண்டிக்க த்ரிஷா ஒத்துக் கொள்வாரா? ஆகவே நபருக்கு நபர் கொள்கை வேறுபடலாம் என்றால் என்ன பொருள்? அதிலும் பாலியல் வன்முறை குறித்து ஆளாளுக்கு ஒரு கொள்கை என்று வேறுபட்டு பார்க்க முடியுமா? அந்த வகையில் த்ரிஷாவின் தொழிலும், அந்த தொழிலை நடத்தும் சினிமாவும் டெல்லி குற்றவாளிகளின் அணிவரிசையில்தான் நிற்கின்றார்கள்.
மாடலிங், சினிமா, டி.வி போன்ற துறைகளில் பெண்களுக்கு சமத்துவம் கிடைப்பதில்லை என்று சில பெண்ணியவாதிகள் அசட்டுத்தனமாக ஆவேசப்படுவதுண்டு. அதாவது த்ரிஷா நடிக்கும் படங்களில் நாயகனுக்கு இணையாகவோ அதிகமாகவோ நாயகியின் பாத்திரம் இருப்பதில்லை. வயதான நடிகர்கள் போல வயதான நடிகைகளுக்கு மார்கெட் இருப்பதில்லை. கூடுதலாக சினிமாவின் எந்தத் துறையிலும் பெண்கள் முன்னேற முடியாமல் ஆணாதிக்கம் நிலவுகிறது என்றும் அவர்கள் கவலைப்படுவதுண்டு.
என்றாலும் அத்தகைய கவலையின் அடிப்படையில் த்ரிஷா, அசின், காஜல், முதலான நடிகைகள் பெண்ணுரிமை காவலர்களாக பதவி உயர்வு பெறும் காட்சியினை சகிக்க முடியவில்லை. சினிமாவே ஒரு குப்பை என்றும், ரசிகர்களின் அதுவும் ஆண்ரசிகர்களின் வக்கிரத்தை விசிறி விடுவதினூடாக வர்த்தகம் செய்யும் தொழில் என்று தெரிந்த பிறகும் மலத்தில் யாராவது அரிசியை தேடுவார்களா என்ன? அதன்படி தமிழ் சினிமாவில் பெண்களுக்கு வாய்ப்பில்லை என்று பேசுபவர்கள் உண்மையில் பெண்களுக்கு எதிரானவர்கள் என்கிறோம்.
அது போல ஒரு நடிகை சில படங்களில் நடித்து நட்சத்திரமாவது என்பது வெறும் திறமையின் அடிப்படையில் மட்டுமல்ல. மேலதிகமாக கவர்ச்சி காட்டுவது என்பதைத் தாண்டி அங்கே திறமைக்கு வேலையில்லை. இந்நிலையில் தயாரிப்பாளர், இயக்குநர், நட்சத்திர நடிகர்கள் ஒத்துக் கொண்டால்தான் ஒரு பெண் நடிகையாக இடம்பெற முடியும். வளர முடியும். ஒரு சில விதிவிலக்குகளைத் தாண்டி இந்த ஒத்துக் கொள்ளலில் பல துணை நடிகைகள் உள்ளிட்டு பெரும் நட்சத்திரங்கள் வரை ஆணாதிக்கத்தால் வேட்டையாடப்படுகின்றனர். உண்மையில் இதை எதிர்த்து எந்த நடிகையும் வாய் திறப்பதில்லை. இவையும் அதிகபட்சம் ஊடகங்களின் கிசுகிசுவாக, அதையும் ரசிப்பது என்ற அளவிலேதான் வெளிவருகின்றன.
ஆகவே த்ரிஷா முதலான நடிகைகள் டெல்லி கயவர்களை தண்டிப்பது இருக்கட்டும், தங்கள் துறையில் அத்தகைய நபர்களை தண்டிக்க வேண்டாம், அடையாளமாவது காட்டுவார்களா? நிச்சயம் காட்டமாட்டார்கள். ஏனெனில் கோடிகளில் கொழிக்கும் அவர்களது நட்சத்திர வாழ்வின் அஸ்திவாரத்தை இழப்பதற்கு அவர்கள் கனவிலும் விரும்பமாட்டார்கள். அந்த வகையில் சினிமாவில் பெண்கள் பாலியல் ரீதியின் துன்பறுத்தப்படுவதற்கு இவர்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள்.
இதை த்ரிஷாவின் ஆரம்பகால வாழ்க்கையில் இருந்தே சொல்ல முடியும். அப்போது மிஸ் சென்னையோ இல்லை மிஸ் திருவல்லிக்கேணியோ என்று பட்டம் பெற்ற த்ரிஷாவை ஆனந்த விகடன் முதலான பத்திரிகைகள் அட்டைப்படத்தில் போட்டு உதவின. மாடலிங் உலகில் இருந்த அவருக்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து ஆளாகி வருகிறார். அப்போது விளம்பர நடிகையாக இருந்த ஒரு பெண் மாடலிங் உலகில் சக்தி வாய்ந்த ஒரு நபர் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டுகிறார். வழக்கம் போல பத்திரிகைகள் சென்சேஷனாக போட்டு காசு பார்க்கின்றன.
த்ரிஷாவும் மாடலிங் துறை என்பதால் அவரிடமும் கருத்து கேட்கிறார்கள். அப்போது அவர் என்ன சொன்னார்? ‘குற்றம் சாட்டிய பெண்ணும், குற்றம் சாட்டப்பட்ட ஆணும் தனக்கு தெரியும் என்பதோடு இருவரும் தொழில் நிமித்தம் வேண்டியவர்கள் என்பதால் இருவருக்கு எதிராகவும் கருத்து சொல்ல மாட்டேன்’ என்றார் த்ரிஷா.
நல்லது, ‘கற்பழிப்பு’ குற்றவாளிகளை சோதனைச்சாலை எலிகளாக பயன்படுத்தலாம் என்ற த்ரிஷாவின் யோசனைப்படி த்ரிஷாவுக்கும், அவரது சினிமா துறையினருக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம், நீங்களே சொல்லுங்கள்! vinavu.com

கருத்துகள் இல்லை: