திங்கள், 4 மார்ச், 2013

இசுலாமிய மதவெறியர்களை எதிர்த்து வங்கதேச எழுச்சி!


ஷாபாக் சதுக்கம்ரஜீப் ஹைதர்டந்த 4 வாரங்களாக இஸ்லாமிய மத வெறியர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் வங்கதேசத்தில் (பங்களாதேஷ்) நடந்து வருகிறது.
1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் இணைந்திருந்த அப்போது கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பங்களாதேச மக்கள் வங்காள தேசியத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக போராடினர்.
அந்த போராட்டங்களை அடக்குவதற்கு பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் இறக்கி விடப்பட்டனர். அவர்களுடன் உள்ளூர் மத வெறியர்களும் சேர்ந்து கொண்டனர். லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். ரஜாக்கர்கள் என்று அழைக்கப்படும் உருது பேசும் பாகிஸ்தானிய ஆதரவு இஸ்லாமிய மத வெறியர்கள் விடுதலை போராட்டத்தை நசுக்குவதற்காக நாடெங்கிலும் வன்முறையை அவிழ்த்து விட்டனர். ரஜாக்கர்கள் என்ற சொல் பங்களாதேஷில் துரோகிகள் என்ற பொருள் உடையதாக மாறி விட்டது.
சுமார் 10 லட்சம் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் வந்தனர். இதை சாக்காக வைத்து இந்திய அரசு பாகிஸ்தானை தனிமைப்படுத்தி இராணுவ நடவடிக்கை மூலம் பங்களேதேஷ் தனி நாடாக வழி வகுத்தது. வங்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட ஷேக் முஜிபூர் ரஹ்மானின் தலைமையில் அவாமி லீக் கட்சியின் ஆட்சி அமைக்கப்பட்டது.
ராணுவ தளபதிகளால் ஷேக் முஜிபூர் ரஹ்மான் கொலை செய்யப்பட்டு ராணுவ ஆட்சி, ராணுவ தளபதி ஜியா உர் ரஹ்மான் பொறுப்பேற்று பங்களாதேஷ் தேசியக் கட்சியை உருவாக்குதல், ராணுவத தளபதிகளால் ஜியா உர் ரஹ்மான் கொலை செய்யப்பட்டு 1982ல் ஹூசைன் முகமது எர்ஷாத் என்ற இராணுவ தளபதி இராணுவ ஆட்சியை ஏற்படுத்துதல் என்று வன்முறை நிறைந்த வரலாறு தொடர்ந்தது.
1991ல் இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டு முஜிபூர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா பேகம் தலைமையில் அவாமி லீகும், ஜியா உர் ரஹ்மானின் மனைவி பேகம் கலீடா ஜியா தலைமையில் பங்களாதேஷ் தேசியக் கட்சியும் மாறி மாறி தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகின்றனர்.
2008ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 1971ல் போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் மீதான சிறப்பு விசாரணை ஆணையம் நியமிப்பதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்தார் ஹசீனா பேகம். அதன்படி 2010ம் ஆண்டு 3 உறுப்பினர்கள் கொண்ட பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்றம், 7 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழு, 12 உறுப்பினர்கள் கொண்ட வழக்கறிஞர்கள் குழு ஆகியவை உருவாக்கப்பட்டன.

1971 போர்க் குற்றவாளிகளான ரஜாக்கர்களில் பலர் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இசுலாமிய மதவாத கட்சியின் மூலம் அரசியலில் வளர்ந்தனர். 2001ம் ஆண்டு தேசியக் கட்சி கூட்டணி ஆட்சியில் ஜமாத்-இ-இஸ்லாமியும் பங்கு பெற்றிருந்தது. ‘மீர்பூரின் கசாப்பு கடைக்காரர்’ என்று அழைக்கப்படும் அப்துல் காதர் முல்லா இப்போது ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவராக உள்ளார்.
போர்க்குற்ற நீதிமன்றம், பாகிஸ்தானுக்கு ஓடிப் போய் விட்ட அப்துல் கலாம் ஆசாத் என்ற போர்க்குற்றவாளிக்கு ஜனவரி மாதம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பிப்ரவரி 5ம் தேதி அப்துல் காதர் முல்லாவின் குற்றங்களை உறுதி செய்து மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது போர்க்குற்ற நீதிமன்றம். அப்துல் காதர் நீதிமன்றத்திலிருந்து வெளி வரும் போது ஆணவமாக சிரித்துக் கொண்டே வெற்றிக் குறியீடாக இரண்டு விரல்களை காட்டினார். ‘அவர் செய்த குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை மிகவும் குறைவானது’ என்று பெரும்பான்மை மக்கள் கொதித்தனர்.
பங்களாதேஷின் ஒவ்வொரு குடும்பமும் 1971 போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்துல் காதரின் வெற்றிக் களிப்பைக் கண்டு கோபமடைந்த லட்சக்கணக்கான இளைஞர்களும், பெண்களும், பொது மக்களும் அவருக்கும், போர் குற்றத்துக்காக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் 11 பேருக்கும் மரண தண்டனை விதிக்கக் கோரி தலைநகர் டாக்காவில் உள்ள ஷாபாக் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பட்டம் நடத்தினர்.
போர்க்குற்றங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஷாபாக் சதுக்கத்தில் தொடர்ந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக எழுதிய ரஜீப் ஹைதர் எனும் நாத்திக வலைப் பதிவரை ஜமாத்-எ-இஸ்லாமி கட்சி குண்டர்கள் பிப்ரவரி 15ம் தேதி படுகொலை செய்தனர். ரஜீபின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மத பயங்கரவாதிகளுக்கு எதிராக தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
ரஜீப் ஹைதர்

பிப்ரவரி 28ம் தேதி 2வது குற்றவாளியான டெல்வார் உசைன் சய்யீதிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜமாத்-இ-இஸ்லாமி குண்டர்கள் நாடு முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். மார்ச் 3,4ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்றாலும் ஜமாத்-இ-இஸ்லாமி மதவெறியர்கள் கலவரம் செய்ய முயன்றனர். இந்த கலவரங்களில் 6 போலீஸ் உட்பட 76 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டோர் அதிகம். அதிலும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்காரர்கள் அதிகம்.
மேலும் எப்படியாவது இசுலாமிய மதவெறியை கிளப்புவதற்காக ஜமாத்-இ-இஸ்லாமி குண்டர்கள் வங்க தேசத்தில் வாழும் சிறுபான்மை இந்துக்களை தாக்கியும், இந்துக் கோவில்களை சேதப்படுத்தியும் வருகின்றனர். தமது தலைவருக்கு எதிரான மக்கள் போராட்டம் இந்தியாவின் சதி, நாத்திக சதி, காஃபிர்கள் சதி என்றெல்லாம் அவர்கள் பேசினாலும் முழு வங்க தேச மக்களும் இசுலாமிய மதவெறியர்களை தண்டிப்பதில் ஒன்றுபட்டு போராடி வருகின்றனர். ஒரு சிறுபான்மை குழுவினர் அதிலும் உதிரியான நபர்கள்தான் ஜமாத் எ இஸ்லாமி கட்சிக்காக போராடி வருகின்றனர். ஆனால், நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் 71-ம் ஆண்டு நடந்த போர்க்குற்றங்களை மறக்க வங்கதேச மக்கள் தயாரில்லை.
வங்கதேசம் போன்ற ஏழை நாடுகளை இஸ்லாமிய மதபிற்போக்குத் தனத்திலேயே வைத்திருக்க விரும்பும் ஏகாதிபத்தியங்களும் அவற்றின் ஊடகங்களும் மத வெறிக்கு எதிரான வங்க தேச மக்கள் போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருட்டடிப்பு செய்கின்றன.
‘போர்க்குற்றவாளிகளை தூக்கில் போடு’, ‘மதவாத ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை தடை செய்’ என்ற முழக்கங்களோடு வங்கதேச மக்களின் ஜனநாயக போராட்டம் தொடர்கிறது. இறுதியில், பெரும்பான்மை மக்கள் இசுலாத்தையும், இசுலாமிய மதவெறியையும் விட ஜனநாயகத்தையும், நீதியையும் பெரிதாக கருதுகிறார்கள் என்பது வங்க தேசத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டதைப் போல இந்தியாவிலும் இந்துத்துவ வெறியை தூண்டி விடும் சங்க பரிவாரங்கள் வரலாற்றின் கல்லறைக்கு போவது உறுதி.
மதவெறியர்களை தண்டிக்க போராடும் வங்க தேச மக்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்.  vinavu.com

கருத்துகள் இல்லை: