வெள்ளி, 14 டிசம்பர், 2012

Bus மாணவர்கள் நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறி, வேர்வை நாற்றத்தில்


bus
டந்த திங்கள்கிழமை சென்னை பெருங்குடி அருகே நேரிட்ட விபத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் துயரமான சம்பவத்தின் அதிர்ச்சிக் காரணமாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு தொடர்ந்தது.
இது போன்ற உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பது பற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நேற்று (12-12-12) தமிழக அரசின் விளக்கத்திற்கு பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்:
பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து அவர்களின் பெற்றோர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸார் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கை மட்டும் போதாது.http://mathimaran.wordpress.com/

தொடர்ந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது கல்லூரியின் முதல்வருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அத்தகைய மாணவர்களின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பிய பின்னர், அந்த மாணவர்களை கல்வி நிலையங்களிலிருந்து நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அரசுக்கு பரிந்துரை செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இது உத்தரவு என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
சீயோன் பள்ளி வாகனத்திலிருந்த ஓட்டையின் வழியாக ஒரு குழந்தை விழுந்து இறந்போது, நீதி மன்றம் தானாகவே முன்வந்து பல  முக்கியமான உத்தரவுகளையும்  ஆலோசனைகளையும் தந்தது.
ஆனால், பெருங்குடி சம்பவத்தில், அரசும் நீதி மன்றமும் மாணவர்களையே குற்றவாளிகளாகக் காட்டியிருக்கின்றன.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிகமான அளவில் அரசு பஸ்களில் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். மிகப் பெறும்பாலும் நடுத்தர வர்க்கம் அதற்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகள். குறி்ப்பாக தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். இவர்களின் வீட்டிற்கு அருகே பள்ளிகள் இல்லாததால், 5 கிலோ மீட்டரிலிருந்து 15 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால் கூட்டம் கூடுதலாகிறது.
படிக்கட்டுகளில் பயணிப்பது உயிருக்கு ஆபத்து என்பதைத் தாண்டி, பஸ்சின் உள்ளே நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறி, வேர்வை நாற்றத்தில் பயணிப்பதை விட காற்றோட்டமாக படிக்கட்டில் தொங்குவது எவ்வளவோ மேல் என்பதினாலும் படிக்கட்டு பயணம் தொடர்கிறது.
உண்மையில் பிரச்சினையின் அடிப்படை, பள்ளிக்கூட நேரங்களில் தேவையான அளவிற்கு பேருந்துகள் இல்லாததுதான். அதிகமான கூட்டம் காரணமாகவே, மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்லும் பழக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அதன் காரணமாகவே, மாணவர்களுக்கும் பஸ் கண்டைக்டர், டிரைவர்களுக்குமிடையே ஒர் நல்லுறுவு இல்லாமல் போனது.
இதற்கு நிரந்தர தீர்வு, மாணவர்கள் தங்கள் வீட்டருகே உள்ள பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கு முதலில் தரமான அரசுப் பள்ளிக்கூடங்களை கூடுதலாக திறக்க வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற, அரசு பள்ளிகளை, நல்லத் தரத்திற்கு உயர்த்த வேண்டும்.
இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு, பள்ளிக்கூட நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்குவது முக்கியமானது.
மாணவர்கள் நெரிசலில் சிக்கி செத்தாலும் கூடுதலாக பஸ் இயக்குவதில்லை. அதற்கு நேர் எதிராக நெரிசலைத் தவிர்க்க, ஏ.சி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வாங்கிக் கொண்டு, தங்கள் மாணவர்களுக்கு என்று தனியாக பஸ்கள் இயக்குகின்றன.
அதுபோல், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த அந்த பள்ளிகளுக்கு  மட்டுமே என்ற முறையில் காலை, மாலை நேரங்களில் இலவச பஸ்களை அரசு இயக்க வேண்டும். இப்போது உள்ளது போலவே மற்ற பஸ்களிலும் பயணிக்கும் இலவச பாஸ் உரிமையும் இத்துடன் இருக்கவேண்டும்.
மிக முக்கியமாக பஸ்சில் உள்ள இருக்கை அமைப்பு முறையை மாற்றியமைக்க வேண்டியது அதைவிட கூடுதல் முக்கியத்தும் வாய்ந்தது.
ஆம், பஸ்சில் பெண்களின் இருக்கைகள், இரண்டு படிக்கட்டுகளை ஒட்டியே இருக்கின்றன.
பஸ்சில் பயணம் செய்யும் இளம் பெண்களை, மாணவிகளை தங்கள்பால் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டுகளில் தொங்கி பல்வேறு சாகசங்களை செய்கின்றனர். இருக்கை அமைப்பு முறை, மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்குவதற்கான மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.
அதனால், பெண்களின் இருக்கைகளை பஸ்சின் வலது புறம் மாற்றுவது இன்றே  செய்ய வேண்டிய மிக முக்கியமானது.
அதன் மூலம் மிக அதிக அளவிலான மாணவர்கள் பஸ்சின் உள்ளே சென்று பயணிப்பார்கள். பெண்களுக்கும் கூடுதல் இருக்கைகள் கிடைக்கும்.
பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்க முடியாத ஆண்கள், பஸ்சின் உள்ளே பயணிக்கும்போது, பெண்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் பக்கம் திரும்பி நின்று கொண்டுதான் வருவார்கள். வயதான ஆண்களே அப்படி என்றால், இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்? அதனாலேயும் அவர்கள் படிக்கட்டுகளில் தொங்குகிறார்கள்.
ஆகவே, பெண்களின் இருக்கைகளை உடனடியாக பஸ்சின் வலது புறம் மாற்ற வேண்டும். அது படிக்கட்டு பயணங்களை தவிர்க்கும். பரிதாப மரணங்களை தடுக்கும்.
போக்குவரத்து ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் சண்டைகள் குறைந்து, நல்லுறவை வளர்க்கும்.
நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் இவைகளை உறுதி செய்யும் என்று நம்புவோமாக.

கருத்துகள் இல்லை: