வியாழன், 19 ஜூலை, 2012

தோழி எனிமியாகி, மீண்டும் தோழியாகி? செங்கோட்டையன்

செங்கோட்டையன் திடீர் கல்தா: அம்மா ஒரு வாசகம் சொன்னாலும், அது திருவாசகம் – “OUT”

Viruvirupu
முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியிருந்த நாட்களில் பதவி பறிபோகும் பயமின்றி நிம்மதியாக தூங்கிய அமைச்சர்கள், ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுபோட சென்னை வருகிறார் என்று தெரிந்தபோது அவ்வளவாக பதறவில்லை. “வந்து ஒரு நாள், ரெண்டு நாள்தானே தங்குவாங்க. வந்த சோலியை பாத்துட்டு போயிடுவாய்ங்க”
அமைச்சர்களுக்கு இப்படி ‘குளிர்விட்டு’ போயிருப்பதை அம்மாவும் புரிந்து கொண்டார்களோ, என்னவோ, கொடநாட்டில் இருந்து வந்திறங்கிய தினமே, தமிழக வருவாய்த்து‌றை அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டது.
புதிய வருவாய்துறை அமைச்சராக பெருந்துறை எம்.எல்.ஏ., வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கோட்டையன், ஆரம்பம் காலம்  முதல் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய நபர் என நம்பப்பட்டவர். ஜெயலலிதாவின் சுற்றுப் பயணத்தை முடிவு செய்பவர் இவர்தான் என்ற நிலையில் இருந்தவர். ஆனால், சசிகலா சாம்ராஜ்யத்துக்கு வேண்டாத நபர்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற போது, அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு மூன்றாவது இடம் என்றுதான் பேசிக்கொண்டார்கள். இருந்தாலும், அவருக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத துறைகளாகவே ஒதுக்கப்பட்டன. அது சசிகலாவின் கைங்கார்யமாக இருக்கலாம்.
சென்ற ஜனவரியில்தான் அவர் வருவாய்த்துறை அமைச்சரானார்.
இடைப்பட்ட காலத்தில், தோழி எனிமியாகி, மீண்டும் தோழியாகி, கார்டனில் கோழியாக ஒதுங்கியிருக்க, செங்கோட்டையனால் எந்த ‘கிச்சன் கேபினெட்’ வில்லங்கமும் இன்றி வருவாய்த்துறை அமைச்சராக தொடர முடிந்தது.
ஆனால், அவருக்கு வீட்டுக்குள்ளேயே வில்லங்கம் இருந்தது. அது அவரது சொந்த விவகாரம். நாம் எழுத வேண்டாம். இருந்தாலும் அந்த ‘வில்லங்கத்தால்’, அவருக்கே தெரியாமல் அவரது துறையில் மாயாஜாலங்கள் நடந்ததை எழுதலாம்.
அவரது வில்லங்க உறவின், நெருங்கிய உறவினர் ஒருவர் வருவாய்த்துறையை தமது வருவாய்க்கு பயன்படுத்திக் கொண்டார்.
இந்த விவகாரம் கட்சிக்குள் பெரிய ராஜ ரகசியம் கிடையாது. எல்லோரும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கொண்டு போய்க்கொண்டு இருந்தார்கள். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நடந்த பைசா பங்கீட்டிலும், செங்கோட்டையன் கை சுத்தம்.
முதல்வர் கொடநாடு சென்ற பின்னர்தான் பிடித்தது கிரகம்.
வில்லங்க உறவு வேகமாக செயல்பட ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அவரே வருவாய்த்துறை அமைச்சராக நடந்து கொண்டார். அமைச்சு அலுவலகத்தின் எந்த தூணை தட்டினாலும், பணத்தின் ஓசை கேட்டது. ஒரு அமைச்சரே செய்யத் தயங்கும் கில்லாடி கன்ட்ராக்ட் வேலைகள் எல்லாம் சர்வசாதாரணமாக நடந்தன.
தவிர, வில்லங்க உறவினருக்கு வாய் வேறு கொஞ்சம் நீளம். “நம்ம மினிஸ்ட்ரி.. நம்ம ஆட்சி.. நீங்க நான் சொல்றபடி பண்ணுங்க” என்பதுதான் அவர் அதிகாரிகளிடம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகம்.
இப்படி ஒரு ஆத்மா ஆட்சிக்கு சொந்தம் கொண்டாடுகிறது என்ற தகவல் அம்மாவின் காதுகளுக்கு போயிருக்காதா?
மொத்தத்தில், வில்லங்க உறவினரின் ‘வாய்’தான் வருவாய்த்துறை அமைச்சரையே கவிழ்த்து விட்டிருக்கலாம்.
செங்கோட்டையன் பதவி போனதற்கு இப்படியும் ஒரு பின்னணி உள்ளது என்று சொல்லலாமே தவிர, இதுதான் காரணம் என்று அடித்துச் சொல்ல முடியாது. பதவி காலியாகி 24 மணி நேரத்துக்குள் நிஜமான கதைச்சுருக்கம் தெரிய வருவதில்லை. ஓரிரு நாட்களில் இதுதான் காரணமா அல்லது வேறு விவகாரமும் உள்ளதா என்று தெரிந்து கொள்வோம்.
புதிய வருவாய்துறை அமைச்சர் பெருந்துறை எம்.எல்.ஏ., வெங்கடாசலத்துக்கு வாழ்த்துக்கள்…
….சட்டசபை வராந்தாவில், அம்மா காரைக் கண்டதும் வேகமாக ஓடுவதற்கு!

கருத்துகள் இல்லை: