செவ்வாய், 17 ஜூலை, 2012

மாணவியின் முடியை வெட்டிய ஆசிரியைக்கு 1 மாதம் சிறை, ரூ.1,000 அபராதம்

கோவை: பள்ளிக்கு இரட்டை சடையில் வராததால் மாணவியின் முடியை வெட்டிய ஆசிரியைக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் சாந்தி (15)( பெயர் மாற்றப்பட்டுள்ளது).அவர் கடந்த 2008ம் ஆண்டு தடாகம் ரோட்டில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவர் ஒரு நாள் பள்ளிக்கு இரட்டை சடை போடாமல் சென்றுவிட்டார்.
அவர் மற்ற மாணவிகளைப் போன்று இரட்டை சடையில் வராததைக் கண்டுபிடித்த விளையாட்டு ஆசிரியை ஷோபனா சாந்தியை அழைத்துச் சென்று முட்டிபோட வைத்தார். மேலும் அவரது முடியையும் வெட்டிவிட்டார். நெடுநேரம் முட்டி போட்டிருந்ததால் சாந்தியால் வீட்டிற்கு தானாக நடந்து செல்ல முடியவில்லை. இதையடுத்து அவர் தோழிகளின் உதவியுடன் வீட்டிற்கு சென்றார்.

வீட்டுக்கு சென்றவுடன் அன்று பள்ளியில் நடந்ததைப் பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதையடுத்து அவரது பெற்றோர் ஆசிரியை ஷோபனா மீது சாய்பாபா காலனி போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் ஆசிரியை ஷோபனா மீது 323 (சிறு காயம் ஏற்படுத்துதல்), 342 (அடைத்து வைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கோவை 7வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தது. இந்நிலையில் நேற்று வழக்கில் தீ்ர்ப்பு கூறப்பட்டடது. ஆசிரியை ஷோபனாவுக்கு 1 மாத சிறையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஹேமன்குமார் தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை: