திங்கள், 21 மே, 2012

விவகாரம் இருக்கு! அ.தி.மு.க. அரசு விளம்பரங்களின் தலைப்பில், ஒரு

Viruvirupu “அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனை” என்ற விளம்பரம் தொடர்பாக, தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர். “தமிழக அரசு விளம்பரத்தின் தலைப்பு அரசு நிர்வாகத்துக்கே சாவுமணி அடிப்பதாக அமைந்திருக்கிறது” என்பதே அவரது கடிதத்தின் முக்கிய பாயின்ட்.
தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், உள்துறைச் செயலாளருக்கும் தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதங்களில், “தமிழ்நாட்டிலுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைகள் ஏறத்தாழ அனைத்துக்கும், ஜெயலலிதாவின் துடிப்பான தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் மீண்டும் சட்டத்தின் ஆட்சி என்ற தலைப்பில், கடந்த 14ம் தேதி முழுப் பக்க விளம்பரங்கள் மாநில அரசின் உள்துறையால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தில் அரசின் ஓராண்டு நிறைவையொட்டி பட்டியலிடப்பட்டுள்ள சாதனைகளைப் பற்றி நாங்கள் பொருட்படுத்தாவிட்டாலும், இத்தகைய விளம்பரத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு, ஏதோ திமுக அரசு (2006-11) ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் சட்டத்தின் ஆட்சி இல்லை என்பதுபோல கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும், “ஒரே ஒரு அரசாங்கம்தான் உள்ளது. ஆட்சியில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் தலைமையில் இருப்பதால் மட்டுமே வெவ்வேறு அரசு என்ற கோட்பாடு எதுவும் கிடையாது” என்று தொடர்ந்து வலியுறுத்தியுள்ளன. இதனால், முன்பு ஆட்சியில் இருந்த கட்சி ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நிலவவில்லை என்று ஒரு அரசு கூறமுடியாது.

இவ்வாறான திசை திருப்பும் கூற்று, நீதித்துறை மீது நேரடி தாக்குதலாக இருப்பதுடன், முந்தைய கால கட்டத்தில், சட்டத்தின் ஆட்சி நிலவுவதற்கு நீதி நிர்வாகமும் இல்லை என்பது போலவும் அமையும். எனவே, நீங்கள் இதுபற்றி தெளிவுபடுத்த வேண்டும். அப்படி செய்ய தவறினால் நாங்கள் முறைப்படி சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. கூறுவது உண்மைதான். இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றால், தமிழக அரசை நிதிமன்றம் விளக்கம் கேட்க சான்ஸ் உள்ளது.
அப்படி நடந்தால், என்னாகும்? இரு தரப்புக்கும் நன்மைதான். “அ.தி.மு.க. ஆட்சி விளம்பரம் தவறு என்று நீதிமன்றதே விளக்கம் கேட்டுள்ளது” என்று தி.மு.க. மேடைகளில் பேசலாம். சரி, இதனால் அ.தி.மு.க.-வுக்கு என்ன நன்மை ஏற்படலாம்?
அட, ஒரு வாக்கியத்தை லேசாக மாற்றிவிட்டு, அனைத்து பத்திரிகைகளிலும் மற்றொரு செட் விளம்பரங்களை கொடுக்கலாம்! முதல்வரின் சாதனையை விளம்பரப்படுத்த மற்றொரு சான்ஸ் கிடைக்குமல்லவா? (முதல் விளம்பரத்துக்கே ரூ15 கோடி செலவு!)

கருத்துகள் இல்லை: