கைபர் மற்றும் போலன் கணவாய் வழியாக நடந்த ஆரிய படையெடுப்பு என்பது பழைய செய்தி. ஒரு கையெழுத்தின் மூலமாகவே, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு எனும் முந்தைய தி.மு.க. அரசின் அரசாணையை கோபுரச் சின்னத்தால் ஒரு குத்து குத்தி கிழித்தெறிந்து விட்டது பார்ப்பனப் பேய். கருணாநிதியின் குறுகிய சுயநல நோக்கில் தமிழ்ப் புத்தாண்டு மாதத்தை மாற்றி விட்டதாகவும் ஒரு ஆணவ அறிக்கை விட்டது அந்தக் கொள்ளிவாய். ஆமாம் ஆமாம் என்று தலையாட்டவும் சில தமிழறிஞர்கள்.
கருணாநிதி போலித்தனமாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதற்காக அவர் சோறைத் தின்றால் நாம் வேறொன்றைத் தின்ன வேண்டுமா? கருணாநிதி கனிமொழி ஆண்டு என்றா மாற்றினார், திருவள்ளுவர் ஆண்டு என்றுதானே பேசினார்! திருவள்ளுவர் என்ன தி.மு.க.வா? என்று பார்ப்பனத் திமிரை எதிர்த்துப் பேச ஆளின்றி, மத உணர்வு மீட்கப்பட்டதில் பார்ப்பனக் கெடுப்பும், சைவக் கடுப்பும் சேர்ந்து கூத்தாடுகின்றது.

சித்திரைதான் ஆண்டுத் துவக்கம் என்று நெடுநல்வாடையிலே உள்ளது, சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொல்லியிருக்கிறார், நக்கீரர் சொல்லியிருக்கிறார், பல்லாவரம் பஸ் ஸ்டாண்டில் ஒரு பார்ப்பன ஆவி சொன்னது என்று ஒரு கும்பல் ஆதாரங்களை அடுக்க, இல்லை இல்லை குறுந்தொகை, கலித்தொகை, நற்றிணை, புறநானூறு இவைகளிலெல்லாம் தைத்திங்கள் மரபு பற்றி குறிப்பு உள்ளது என தை மாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கமாக கொள்வோரின் ஆதாரம் முன்வைக்கப்படுகின்றன.
தமிழ்ப்-புத்தாண்டுபஞ்சாங்கம் பார்த்து வேட்புமனுத் தாக்கல் செய்து, பஞ்சாங்கம் பார்த்து பதவி ஏற்று, பஞ்சாங்கம் பார்த்து வாய்தா வாங்கும் ஜெ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும், அடிவருடிகளும் முன்னிறுத்தும் சித்திரையின் சிறப்புதான் என்ன? மேழம், அதாவது மேஷ ராசியில் சூரியன் நுழைவதுதான் சித்திரை, ஆண்டுப் பிறப்பு என்றும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகளும் நாரதனும் கிருஷ்ணனும் கூடிப் பிறந்தவை என்றும் ஆபாச, புராண அடிப்படையில் அமையப் பெற்ற பார்ப்பன இந்து மதம் ஆண்டுக்கணக்கை முன்வைக்கின்றது.
இதற்கு மாறாக பனிக்காலம் முடிவில் வெயில் துவங்கும் விவசாய உழைப்புக்கேற்ற  தை மாதத்தை பருவ அடிப்படையில் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாக கருதும் மரபை தங்கள் பஞ்சாங்கப்படி செல்லாது எனக் கூறுவதற்கு பார்ப்பனக் கும்பலுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. ஆடு, மாடு ஓட்டி வந்த ஆரிய இனத்துக்கு ஆட்டின் (மேஷம்) மீதான காதலும், அறுபது ஆண்டுகள் பிறந்த விதத்தில் பெருமையாகவும் இருந்தால் அவர்கள் குடுமியைத் தட்டிக் கொள்ளட்டும். அதற்காக ஆரியப் பார்ப்பனக் குப்பையை அடுத்தவர் தலையில் கொண்டு வந்து கொட்டி, ’இதுதான் தமிழ்ப் புத்தாண்டு! இவைதான் தமிழர் ஆண்டுகள்’ என்று திணிப்பதையும், தமிழினத்தின் உரிமையை மறுப்பதையும் நாம் அயோக்கியத்தனம், ஆதிக்கம் என்பதால் எதிர்க்க வேண்டும்.
தமிழினம் உள்ளிட்ட எந்தவொரு இனத்திலும் தோன்றிய காலந்தொட்டு பண்பாட்டு அம்சங்கள் சில தொடர்வதும், சில மருவித் திரிந்து மாறுநிலை கொள்வதும், சமூக வரலாற்றுச் சூழலுக்கேற்ப ஒன்றிலிருந்து ஒன்று எனப் புதிய பண்பாட்டு அடையாளங்கள் தோன்றுவதும் நடப்பதுதான். அந்த அடிப்படையில் தமிழினம் தனது பண்பாட்டு அடையாளங்களுடன் திருவள்ளுவர் ஆண்டு என்று ஒரு ஆண்டுக் கணக்கை முன்வைத்தால் திருவள்ளுவர் பிறந்த தேதி தெரியுமா? என நக்கலடிக்கிறார்கள் பார்ப்பனக் கும்பலும், அவர்களது பங்காளிகளும்.
இந்தக் கும்பல்தான் ராமன் பிறந்த இடம் இதுதான் என்றும், கடலுக்கடியில் ஒரு மணல் திட்டைக் காட்டி இது ராமர் பாலம் என்றும், ’இதற்கு அறிவியல் ஆதாரம் எல்லாம் காட்ட முடியாது, இது இந்துக்களின் நம்பிக்கை’ என்றும் தனது அயோக்கியத்தனத்தை அடம்பிடித்து சாதிக்கின்றது. தமிழ்ப் புத்தாண்டு தையா? சித்திரையா? என்ற பிரச்சினையில் நாம் பார்க்க வேண்டியது பார்ப்பன ஆதிக்கமா? இல்லை தமிழின உரிமையா? என்பதாகும். ஏனெனில் வரலாற்றிலும் சரி, தற்காலத்திலும் சரி தமிழினப் பண்பாட்டு அடையாளங்களைப் பார்ப்பன மத ஆதிக்கத்திற்கு கீழ்ப்பணிய வைக்க கட்டுக்கதை கட்டுவதும், தமிழினப் பண்பாட்டு அடையாளங்களைத் தாக்கி அழிப்பதும் ஆரிய மேலாதிக்கத்தின் தொடர் நடவடிக்கையாக உள்ளது.
இசுலாமோ, சமணமோ தங்களுக்கான மத (காலண்டர்) ஆண்டுகளை தமிழாண்டுகள் என்றோ, தமிழ்ப் புத்தாண்டு என்றோ சொல்வது கிடையாது. அவர்களுடைய மத ஆண்டுகளாகவே கடைபிடிக்கிறார்கள். அது போல பார்ப்பனக் கும்பல் சித்திரையை தங்களது மத ஆண்டாக போயஸ் கார்டனில் பொங்கல் வைத்து ஓ.பன்னீர் கிடா வெட்ட, சரத்குமார் கரகாட்டம் ஆட கொண்டாடிக் கொள்வது அவர்களது உரிமை. ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு என மத அடையாளத்தை முன்னிறுத்துவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழினம் மட்டுமல்ல எந்த ஒரு இனத்துக்கும் வரலாற்று வழியில் சிதைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட சிறப்பான தமது பண்பாட்டுக் கூறுகளை முன்னிறுத்திப் பேணிக்காக்கும் ஜனநாயக உரிமை உண்டு. அந்த வகையில் மத அடிப்படையில் அல்லாமல், தமிழ் நிலத்தின் திணை மற்றும் சூழலியல் வாழ்வு அடிப்படையில் மொழி ரீதியாக முன்னிறுத்தப்படும் தை  அறுவடை மாதத்தை ஆண்டுத் துவக்கமாகக் கொள்வதில் என்ன தவறு? தமிழினம் தன்னிலத்தில் தமக்கான ஆண்டை தையிலே தொடங்கினால் மேஷத்திற்கு என்ன மோசம் வந்தது? போய் ஜெயலலிதாவின் பட்டியில் அமைச்சர்களோடு அதுவும் சேர்ந்து அடைய வேண்டியதுதானே! ’இல்லை இல்லை இது ரொம்ப நாள் பழக்க வழக்கம் மாற்றக் கூடாது’ என்று பார்ப்பது சரியா?
கணவன் இறந்து விட்டால் மனைவியும் உடன்கட்டை ஏறுவதுதான் பாரப்பனப் பழக்க வழக்கம்; சக மனிதன் மேல் சாதி  தீண்டாமை பார்ப்பது கூடத்தான் சமூகத்தில் பழக்க வழக்கம். அதற்காக இந்த அயோக்கியத்தனங்களை எப்படி ஆதரிக்க முடியாதோ, அதே போலத்தான் ஆரிய ஆண்டுப் பிறப்பையும், ஆண்டுக் கணக்கையும் தமிழ்ப்புத்தாண்டு என ஏற்க முடியாது. சித்திரை என்ற கணக்கின்படி பார்ப்பன மத ஆதிக்கம், வடமொழி ஆதிக்கம், ஆபாசக் கலாச்சாரம் ஆகியவைகளை அட்டியின்றி ஏற்பதை விட ஆண்டுத் துவக்கக் குறியீடாக தையை ஏற்பதில் தவறேயில்லை.
இப்படி ஏற்பதால் சித்திரையில் கிழிந்த தமிழன் வாழ்வை தை வந்து தைத்து விடும் என்று சொல்ல வரவில்லை. நோய் வந்து கிடப்பதால் ஒருவன் மானங்கெட்டு வாழ வேண்டுமா? என்றுதான் கேட்கிறேன். அரசியல், பொருளாதார இழிவுகளைப் போலவே பார்ப்பனப் பண்பாட்டு இழிவுகளையும் தொழிலாளி வர்க்கம் அனுமதிக்க முடியாது… அனுமதிக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம். இடது, வலதுகள் போல ’எங்கே மேய்ந்தால் என்ன? வயிறு ரொம்பினால் போதும்’ என்று வாழ முடியாது. சூடு சொரணையுள்ள தொழிலாளி வர்க்கத்தால்தான் சொந்த விடுதலையைச் சாதிக்க முடியும் என்று கூறுகிறோம். அந்த வகையில் சித்திரை மாதத்து பத்தரை மாற்றுத் தங்கங்களாகக் காட்டிக் கொள்ளும் பார்ப்பன அடிவருடிகளையும் நாம் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும்.
தமிழ்ப்-புத்தாண்டு
கி.ஆ.பெ. விசுவநாதன் சொன்னார், மறைமலையடிகள் சொன்னார், நா.மு. வேங்கடசாமி நாட்டார், மு.வரதராசன், பாரதிதாசன் சொன்னார் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தமிழறிஞர்களைத் தவிர ”ஏன்? தமிழ்ப் பண்பாட்டுப்படி எங்களுக்கு  தைதான்… இப்ப என்னாங்குற… ?” என்று எதிர்த்து வாதாட இவ்வளவு பெரிய தமிழ் வரவு செலவு நாட்டில் ஒரு தமிழறிஞனையும் காணோம். மறைமலையடிகள் அல்ல திருவள்ளுவரே திரும்ப வந்து சொன்னாலும் பார்ப்பனக் கும்பல் ஏற்பதற்கில்லை. ஏனெனில் அவர்களின் நோக்கம் தையை தகர்ப்பது மட்டும் கிடையாது. தொடர்ச்சியாக தமிழ் வழிபாட்டுரிமை, கருவறையில் தமிழ் பாடும் உரிமை, கோட்டூர்புரம் அண்ணா நூலகம் அழிப்பு, கோட்டையில் உள்ள பாரதிதாசன் செம்மொழி நூலகம் தகர்ப்பு என தமிழின அடையாளங்களையே அழிப்பதுதான்.
இது ஏதோ கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக ஜெயலலிதா மாற்றுகிறார் என்று கருதுவது தவறானது. நோக்கியா, ஹூண்டாய் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுடன் ஏற்படுத்திய அரசு ஒப்பந்தங்களை கருணாநிதி கொண்டு வந்தார் என்று ஜெயலலிதா எதையும் நீக்கவோ, மாற்றவோ இல்லை. பன்னாட்டுக் கம்பெனி விசயத்தில் பார்ப்பனக் கம்பெனியும், திராவிடக் கம்பெனியும் ஒரே கூட்டணிதான். மற்றபடி இது பச்சையான பார்ப்பன மேலாதிக்கம் என்பதற்கு  தையின் மீதான தாக்குதல் ஒரு வகை மாதிரி.
மாய்ந்து மாய்ந்து தமிழில் பாட்டெழுதி, தமிழில் பட்டிமன்ற கல்லா கட்டி (ஜெயலலிதாவின் சீலைப்பேன் கு. ஞானசம்பந்தனை விடுங்கள்), குடம் குடமாக தமிழ்த்தேனைக் குடித்து, ஜடம் ஜடமாக கல்விப்புலத்தில் கொட்டிக் கிடக்கும் தமிழறிஞன் ஒருவரும் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களின் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக வாயே திறக்கவில்லை. தமிழைப் பேசிப் பிழைத்து, தமிழால் பதவியில் அமர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், ’உலகத்துக்கே தமிழாராய்ச்சி’ இப்படி பல வசதியான நாற்காலிகளில் ஆறு கால்களுடன் ஊர்ந்து கிடக்கும் மூட்டைப் பூச்சிகள் மொழி, இன உரிமைக்காக முணுமுணுக்கக் கூட இல்லாமல் ‘பாவத்தின் சம்பளத்தை’ மட்டும் பரிசுத்தமாக எண்ணிக் கொண்டிருப்பது மகா அயோக்கியத்தனம்.
மற்றவர்களை விடவும் மொழி, பண்பாட்டு விசயங்களை ஆய்ந்து அலசி, நுண்மான் நுழைபுலம் வாய்ந்த பேரறிஞர் பெருமக்கள், சமூகத்தில் தன் மொழி, பண்பாடு சார்ந்து ஒரு பாதிப்பு நேர்கையில் தன் வயிறை மட்டும் தடவிக் கொண்டு வாழ்வது கேவலமாகப் படவில்லையா? உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த தாளமுத்து நடராசன் உடம்பில் மொழியுணர்ச்சி தீயாய்ப் பரவியது. ”உணர்ச்சியற்ற உங்களுக்கு உடம்பில் தோல் எதற்கு?” எனத் தமிழறிஞர்களைப் பார்த்து அவர்களின் உணர்ச்சி கேட்பது போல் தெரிகின்றது. அதனால்தான் பெரியார் ஒரு சந்தர்ப்பத்தில் “வள்ளுவரை மன்னிக்கலாம். மற்ற எந்தப் புலவனையும் மன்னிக்க முடியாது. படிப்படியாக ஆயுள் தண்டனை, தூக்குத்தண்டைனை வரையிலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தன்மானமில்லாத தமிழ்ப் புலவர்கள்” என்று ஆவேசத்துடன் கூறினார்.
தமிழ்ப்-புத்தாண்டு-தைய.. தையா.. என்று பாட்டெழுதி பிழைப்பவர் முதல் தமிழாய்வு செய்து பெருவாழ்வு வாழும் கல்வித்துறை தமிழறிஞர்கள் வரை.. ’எவன்டா என் தை யில் கை வைத்தது!’ என்று முதுகெலும்போடு எழுந்து நின்று கேள்வி கேட்பார்கள் என்று வீதியைப் பார்த்தால், எல்லோர் வாயிலும் இலக்கணப் போலி சீல் வைத்துத் தொங்குகிறது. ’தமிழன் எங்கெல்லாம் போயிட்டான் தெரியுமா?!’ என்று சவடால் விடும் இந்தப் பேர்வழிகள் போயஸ் கார்டனைத் தாண்டி போக முடியாத மர்மம் என்ன..?! பெயரளவுக்கு ஒரு அறிக்கை விட்டால் கூட அந்த அம்மா ஒரு பெட்டி கேஸ் போடும் என்ற பயமா?… இல்லை தமிழ் செத்தால் பரவாயில்லை, தான் செத்தால் இருப்பதை அனுபவிக்க முடியுமா என்ற நயமா..? கல்வியா.. செல்வமா.. வீரமா.. என்று தமிழாய்ந்து விவாதித்து, கடைசியில் செல்வமே என சீல்பிடித்துப் போய் விட்டனர் தமிழறிஞர்கள்.
கவிப்பேரரசும், கோடம்பாக்கத்து குட்டி குட்டி சிற்றரசும், தமிழ்த்துறை தோறும் கோலோச்சும் தனியரசும் கொட்டிக் கிடக்கும் இந்த நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு உரிமை மீது தாக்குதல் தொடுக்கும் பார்ப்பன ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்க ஓர் ஆளில்லை என்பதோடு இந்தக் கேடுகெட்டத் தமிழறிஞர்கள் சாதாரண உழைக்கும் மக்களைப் பார்த்து, ’தமிழனுக்கு இன்னும் சொரணை வரல சார்… எல்லாம் கோழப்பசங்க..’ என்று பல சந்தர்ப்பங்களில் பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனம். ஜெயலலிதாவைப் பார்த்து… நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே… என்ற  நக்கீரன் அளவுக்கு வேண்டாம், தமிழைப் பிசைந்து தின்று வயிறு வளர்த்த கடமைக்காவது எச்சில் கையால் காக்காய் விரட்ட வீதிக்கு வரக் கூடாதா?
இதை விடக் கேவலம் பார்ப்பன அம்மா தமிழன் தலையில் வடகம் பிழிந்தால் காக்காய் விரட்ட அல்லவா இவர்களிடம் போட்டா போட்டி… உண்மையில் தமிழறிஞர்கள் ஜெயலலிதாவுக்கு பயந்தவர்கள் என்பதை விட, இன்றைய உலகமய சொகுசில் எந்தவிதத்திலும் தன் குடும்பத்திலோ, உணர்விலோ தமிழ் மொழி,  பண்பாடு அற்ற பிழைப்புவாதக் கும்பல் என்பதுதான் ஊரறிந்த உண்மை.
இருந்தாலும் நம் தமிழறிஞர்கள் நாம் சொல்லும் அளவுக்கு ஒன்றும் சும்மா கிடக்கவில்லை. ஜெயலலிதா ’சித்திரைதான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம்’ என உத்தரவு போட்டவுடன்,  பம்பரமாகச் சுழன்று சங்க இலக்கியங்களை அங்க அங்கமாகக் கழட்டி அதற்கு ஆதாரம் தேடிக் களைத்தே போய் விட்டார்கள். “அறம் செய விரும்பு” என்று பண்பாடு போற்றிய அவ்வையார் பெயரில் ஒரு விருதை “பணம் செய விரும்பு” என பள்ளிக்கூடம் கட்டிக் கொள்ளையடிக்கும் பத்மா சேஷாத்ரி திருமதி. ஒய்.ஜி.பி. க்கு கொடுத்தபோது, சொரணையோடு கைதட்டி சிவந்த கும்பலில் எத்தனை தமிழறிஞர்கள் பாருங்கள்… “நாயினும் கீழாய் தாழ்ந்து தாழ்ந்து நக்கிக் குடி! இதையே நல்லதென்று சொல்! பொட்டுப் பூச்சியே! புன்மைத் தேரையே!” என்ற பாரதிதாசனின் வரி ஏனோ ஞாபகத்திற்கு வந்து தொலைக்கின்றது.