சனி, 26 மே, 2012

ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம் தமிழக எல்லை அருகே

இடுக்கி :தமிழக எல்லையை ஒட்டி, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் புதிதாக ஏழு அணைகளை கட்ட, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய அணைகள்:தமிழக - கேரள எல்லையை ஒட்டி, கேரளாவில் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. மலைப்பிரதேசமான இம்மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில், தமிழகத்தின் தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இம்மாவட்டத்தில் தான், 116 ஆண்டு பழமை வாய்ந்த, முல்லை பெரியாறு அணை உள்ளது.இடுக்கி மாவட்டத்தில் செங்கல்லாறு, தலையாறு மற்றும் வட்டவடா என, மூன்று ஆறுகளில் புதிய அணைகள் கட்டும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில், செங்கல்லாறு திட்டத்தில், பட்டிசேரி, காந்தலூர் ஆகிய இடங்களில் இரு அணைகள் கட்டப்படும். தலையாறு திட்டத்தில், அப்பர்சட்டு மூணாறு, லோயர்சட்டு மூணாறு மற்றும் தலையாறு ஆகிய இடங்களில் மூன்று அணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.


அறிக்கை தயார்:மேலும், வட்டவடா திட்டத்தில், ஒற்றமரம் மற்றும் கொட்டுகொம்பூர் ஆகிய இரு இடங்களில் அணைகள் அமைக்கவும் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இடுக்கி மாவட்டத்தில் ஏழு அணைகள் அமைக்க ஆலோசிக்கப்படுகிறது. காவிரி நதியின் உபரி நீர், கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வீணாகச் செல்வதை தடுக்கவும், சிறிய அளவிலான மின் உற்பத்தி, நீர்ப்பாசனம், விவசாயம் ஆகியவற்றிற்கு பயன்படும் வகையிலும் அணைகள் கட்டப்படவுள்ளன.

அரசுக்கு பரிந்துரை:மாநிலத்தில் அதிகளவு காய்கறி சாகுபடி செய்யப்படும் இந்த மாவட்டத்தில், புதிதாக அணைகள் கட்டுவதன் மூலம் கூடுதலாக, 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி சாகுபடியை அதிகரிக்கவும் முடியும். இதற்காக 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மாநில நீர்வளத்துறை தயாரித்து, அரசின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளது.புதிய அணைகள் ஒவ்வொன்றும் 30 மீட்டர் முதல் 75 மீட்டர் உயரமும், அரை கி.மீ., நீளமும் கொண்டதாக அமையும். இதற்கு மாநில திட்டக்குழு மற்றும் அமைச்சரவை அனுமதி விரைவில் பெறப்படும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: