ஞாயிறு, 20 மே, 2012

போலி சாமியார்-நல்ல சாமியார் பிழையான வழக்கு! (இறுதிப்) பாகம் 6



நித்தியானந்தா-கார்டூன்-8

பார்ப்பனிய இந்து மதத்தைப் பொறுத்த வரை நல்ல சாமியார், போலி சாமியார் என்ற வேறுபாடுகள் இல்லை. பார்ப்பனியத்தின் அநீதியான சமூக அமைப்பு – சடங்குகளை எதிர்த்து வந்ததால்தான் புத்த, சமண, சாருவாகன, சித்தர்களை பார்ப்பனிய எதிர் மரபு என்று போற்றுகிறோம். அவர்களெல்லாம் பார்ப்பனியத்தை அவரவர் கால வரம்புகளோடு எதிர்த்துக் கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டவர்கள் மன்னர்களின் ஆயுத பலத்தால் ஒழிக்கப்பட்டார்கள். அவர்களது இலக்கியங்களும் அழிக்கப்பட்டன. அந்தக் கேள்விகளின் இருப்பு பார்ப்பனியத்தால் கரைக்கப்பட்ட பிறகு உலகோடு ஒட்ட ஒழுகலே இங்கு விதியாகிப் போனது. இன்றைக்கு நாம் காணும் சாமியார்களும், அதற்கு முந்தைய வரலாற்றில் உள்ள சாமியார்களும் பார்ப்பனியத்தின் ஏற்றத்தாழ்வான வருண சாதி அமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள். சே குவேரா போன்று ‘இந்துக்களால்’ இமேஜ் கவர்ச்சியுடன் போற்றப்படும் விவேகானந்தரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
இந்தப் பின்னணியில் பார்ப்பனியம் முன்வைக்கும் துறவறம் என்பது இத்தகைய சமூக அநீதியை ஏற்று வாழும் மக்கள் வியந்தோதுவதற்காக முன்வைக்கப்பட்ட ‘தியாகம்’ போன்றது. ஆனால் சிற்றின்பங்களை துறப்பதால் மட்டும்தான் அந்த தியாகம் தனது மேலாண்மையைக் கோருகிறது. சமூக துன்பங்களை மதம், சடங்கு, மரபு என்று ஏற்று வாழும் மக்கள்தான் உண்மையில் தியாகம் செய்பவர்கள். அந்த தியாகத்தை விதியென கற்பித்து சிவனே என்று வாழ்வதைத்தான் பார்ப்பனியத் துறவிகள் பேசி வந்தனர். மீறுபவர்களை அரசு உதவியுடன் தண்டித்தும் வந்தனர்.

சங்கர மடத்தையோ, சைவ ஆதீனங்களையோ இத்தகைய பின்னணியில் பொருத்திப் பார்த்தால் அவற்றின் வரலாற்றுப் பாத்திரத்தை புரிந்து கொள்ளலாம். துறவிகள் மக்கள் நலனுக்காக தமது இன்பங்களை துறக்கவில்லை. மக்களை ஆதிக்கம் செய்யும் பார்ப்பனியத்தின் மேலாண்மையை நிறுவும் பொருட்டே குடும்ப வாழ்க்கையைத் துறந்தார்கள்.
மன்னர்களுக்கும் பார்ப்பனியத்தின் இதர ஆளும் வர்க்கங்களுக்கும் தேவைப்படும் சித்தாந்த தலைமையை துறவிகள் அளித்ததனர். பதிலுக்கு அவர்களுக்கு தரப்படும் மரியாதை மன்னர்களின் ஆயுத வலிமை கொண்டு தீர்மானிக்கப்பட்டது. ஒரு வேளை அத்தகைய ஆயுத வலிமை தேவையில்லாத நிலை என்றால் அதைக்கூட பார்ப்பனியத்தின் சமூக அமைப்புதான் தோற்றுவித்திருந்தது.
சாமியார்களைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது, சந்தேகப்படக் கூடாது, கேலி செய்யக்கூடாது போன்றவையெல்லாம் இயல்பான சட்டதிட்டங்களாக உருவாகி அமையப் பெற்றன. பார்ப்பனிய சமூக அமைப்பை கேள்வி கேட்க முடியாது என்பதும், பார்ப்பனியத்தின் துறவிகளை கேள்வி கேட்கக் கூடாது என்பதும் வேறு வேறு அல்ல. எனவேதான் மடங்கள் நிறுவனங்களாக நிலை பெற்ற பிறகுதான் மடத்தலைவர்கள் கெட்டுப் போனார்கள் என்ற வாதம் தவறு என்கிறோம். அவையெல்லாம் துணை விளைவுகள் மட்டுமே. மடங்களின் தார்மீக பலம் பார்ப்பனிய சமூகத்தின் பலத்தில் குடி கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே மடத்தலைவர்களின் புனிதமும், அரச மனோபாவமும், கேளிக்கை நாட்டமும் வருகின்றனது. ஒன்று இல்லை என்பதால் மற்றது மகத்தானது அல்ல.
பணமும் பொருளும்தான் பரம்பொருள், இது புரியாம நீ பாட்டுக்கு ஜீப்புல ஏறுனா எப்படி?
சிற்றின்ப நாட்டம் இல்லாமல் வாழ்ந்த செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி, ரமணர் போன்றவர்களை நடப்பு கார்ப்பரேட் சாமியார்களுக்கு மாற்றாக சிலர் கூறுகின்றார்கள். இத்தகைய ‘ஒழுக்க’ சாமியார்களெல்லாம் பார்ப்பனியத்தின் அநீதியான சமூக ஒழுக்கத்தை பின்பற்றுவதைத்தான் தங்களது துறவறத்தின் ஆன்மாவாகக் கொண்டிருந்தார்கள். ஆன்மாவிலேயே இத்தகைய அழுக்கு இருக்கும் போது அவர்களது ஆண்குறிகள் அடங்கியிருந்தால் என்ன, ஆடினால்தான் என்ன? அதனால்தான் நித்தியானந்தாவும், ஜெயேந்திரனும் சரி, சந்திரசேகர சங்கராச்சாரி, ரமணரும் சரி இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்கிறோம்.
சமூகத்தை முற்று முழுதாகத் துறந்து வாழ்தல் ‘கடவுளு’க்கும் கூட சாத்தியமில்லை. துறவிகளின் ஆடம்பர மடங்களுக்குப் பின்னால் உழைக்கும் மக்களின் சமாதியாகிப்போன வாழ்வே அஸ்திவாரம். ஜெயமோகனது குருவான நித்ய சைதன்ய யதி கூட ஊட்டியில் முக்கியமான இடத்தில் ஒரு வசதியான குருகுலத்தை கட்டியிருக்கிறார். அவர் ஏன் நாங்குநேரி பாலைவனத்தில் கட்டவில்லை, காஸ்ட்லியான சுற்றுலா மண்ணில் ஏன் கட்டினார், காசு ஏது, மடத்தின் புரவலர்கள் யார், அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அங்கே இருப்பது துறவறமா இல்லை சுரண்டல் அறமா என்பதை உள்ளுணர்வு இன்றியே தெளியலாம்.
சமூகத்தில் இருக்கும் அநீதிகளை மாய்ப்பதற்க்காக தனது வாழ்க்கை இன்பங்களை துறப்பதோடு அதை தான் மட்டும் செய்ய முடியாது, ஒரு மக்கள் கூட்டத்தால் மட்டுமே செய்ய முடியுமென ஒருவன் முனைந்தால் அவனை துறவி என்று அழைக்கலாம். அல்லது போராளிகள் என்றும் அழைக்காலம். பார்ப்பனியத்தின் வரலாற்றில் இந்தப்போராளிகள் இருந்த இடம் தெரியாமல் ஒழிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த ஒழிப்பின் மரபைத்தான் ஆதீனமாகவும், மடங்களாகவும் நாம் பார்க்கிறோம். இதற்கும் மேல் ஒத்துக்கொள்ள தயங்குபவர்கள் உண்மையான துறவிகளைப் பார்க்க வேண்டுமென்றால் பழனி படிக்கட்டில் பிச்சை எடுக்கும் சாமியார்களை போற்றுங்கள், பிரச்சினை இல்லை.
எனவே இத்தகைய பின்னணியில் புரிந்து கொள்வதால்தான் நாம் நித்தியானந்தா ஆதீனமாகக் கூடாது என்ற பிழையான கோரிக்கையை வைக்கவில்லை. அப்படி வைத்தால் நல்ல ஆதீனம், நல்ல சாமியார் என்ற முறையில் பார்ப்பனியத்தின் அநீதிக்கு துணை போன தவறினைச் செய்தவர் ஆவோம்.
சாரமாக இந்தப்பிரச்சினையில் நாம் வைக்கும் மையமான கோரிக்கை என்ன? ஆதீனங்கள், மடங்களது சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும். மரபு என்ற பெயரில் இருக்கும் பார்ப்பனிய அடிமைத்தனங்கள் ஒழிக்கப்பட வேண்டும். மதம் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். துறவிகள், சாமியார்கள் என ஆக விரும்பும் எவரும் பழனி படிக்கட்டில் அமர்ந்து மட்டுமே பிச்சை எடுக்க வேண்டும்.
இத்தகைய கோரிக்கைகள் நிறைவேறப் போராடும் சூழ்நிலைக்கு நித்தியானந்தா ஆதீனமாவது உரம் சேர்க்கும். பிடிபட்ட பொறுக்கிக்கும் பிடிபடாத பொறுக்கிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையை நாம் பார்ப்பனியத்திற்கு பாடை கட்டும் நோக்கத்திற்கு பயன்படுத்துவோம். தோற்கடிக்கப்பட்ட பார்ப்பனிய எதிர் மரபின் இறுதி வெற்றியை நிலைநாட்டுவோம்.
•முற்றும்

கருத்துகள் இல்லை: