சென்னை அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் இன்று காலை போராட்டம் நடத்தினர். சென்னை அரசு பொது மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மனித சங்கிலி போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவர்கள் வந்து சமாதானம் செய்தும் மாணவிகள் மருத்துவமனைக்கு செல்லவில்லை. தகவல் அறிந்து வந்த போலீசார், 700 மாணவிகளை கைது செய்து அருகில் உள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நர்சிங் மாணவ, மாணவிகள் 200 பேர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வந்து பேசிய பிறகு கல்லூரி வளாகத்துக்குள் சென்று கோஷமிட்டனர்.
இதேபோல் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நர்சிங் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2000க்கும் அதிகமான மாணவிகள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து நர்சிங் மாணவிகள் கூறியதாவது: அரசு நர்சிங் கல்லூரியில் படித்துக்கொண்டு அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் 8 மணி நேரம் பணியாற்றுகிறோம். இப்போது அரசு வெளியிட்ட ஆணையில், தேர்வு எழுதிதான் நாங்கள் அரசு பணிக்கு செல்ல முடியும். தனியார் கல்லூரி மாணவிகளும் இந்த தேர்வை எழுதலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளில் இந்த தேர்வுக்காகவே அவர்களை தயார் செய்வார்கள். எனவே அரசு ஆணையை ரத்து செய்து பழைய முறையையே பின்பற்ற வேண்டும். இவ்வாறு மாணவிகள் கூறினர். மாணவிகளின் திடீர் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உதவிக்கு ஆட்கள் இல்லாமல் அறுவை சிகிச்சைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புறநோயாளிகள் பிரிவும் இயங்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக