திங்கள், 23 ஜனவரி, 2012

நண்பன்.. விஜய் நடித்த படங்களில் மெச்சக்கூடியது இதுதான்


 கடைசியாக வந்த சில படங்களில் விஜய் ஒரே மாதிரியாக நடித்திருந்ததால், இந்த மாறுபட்ட நடிப்பு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போட்டுவிட்டார். ஏற்கனவே பார்த்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களை உச்சு கொட்ட வைக்காமல் இருக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்றார் இயக்குனர்.
ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நண்பர்கள். இவர்களின் மற்றொரு நண்பனான சத்யன் போன் செய்து ஜீவா, ஸ்ரீகாந்தின் மிக முக்கிய நண்பனான விஜய் வந்திருப்பதாக அழைக்கும் போது அவசரமாக தங்களது பழைய கல்லூரிக்கு வருகிறார்கள். ஆனால் விஜய் அங்கு இல்லை, விஜய்யின் இருப்பிடம் தெரியுமென்று சத்யன் கூறுவதால் அங்கு செல்கிறார்கள்.
பின்னோக்கி பிளாஷ்பேக் செல்கிறார்கள். சென்னையின் பிரபலமான பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்க வருகிறார்கள் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும். 

கல்லூரியின் முதல்வராக சத்யராஜ்.அவர் சித்தாந்தம் பேசுவதால் விஜய் அவரை வெறுக்கிறார். ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா படிப்பில் சுமார் மாணவர்கள். விஜய் கல்லூரியிலயே முதலாக வரும் மாணவன். சத்யன் குறுக்குவழியில் முதலிடத்தை கைப்பற்ற நினைப்பவர். 

சத்யராஜூக்கும் விஜய்க்கும் ஏற்படும் கருத்து மோதலால் சத்யராஜூக்கு விஜய்யை பிடிக்கவில்லை. சத்யராஜின் மகள் இலியானாவுடன் முதலில் மோதலில் ஈடுபடும் விஜய் பிறகு காதலிக்கிறார். ஸ்ரீகாந்த் விலங்குகளை புகைப்படமெடுப்பதில் ஆர்வமிருக்க பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்க வந்திருப்பதை அறிகிறார் விஜய். 

ஜீவாவுக்கும் படிப்பில் ஆர்வமில்லாததை அறிந்து, ஜீவா தன் லட்சியத்தை அடைய விஜய் உதவுகிறார். கெட்டவர்கள் திருந்துகிறார்கள். நல்லவர்கள் நல்ல நிலையை அடைகிறார்கள்.எல்லோரும் செட்டிலாகி விடுவதால் காலேஜ் முடிந்ததும் விஜய் ஆள் அட்ரஸில்லாமல் செல்கிறார். பிளாஷ்பேக் முடிகிறது. சத்யனின் மூலம் ஸ்ரீகாந்தும் ஜீவாவும் விஜய்யின் இருப்பிடத்திற்கு செல்கின்றனர். 

கதையின் திருப்புனையாக அந்த இடத்தில் விஜய்க்கு பதில் இருப்பவர் S.J.சூர்யா. முதலில் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், பிறகு அவரை மிரட்டி விஜய்யை பற்றிய உண்மையான தகவல்களை அறிந்து அங்கு செல்ல ஆயத்தமாகிறர்கள். ஹீரோயின் இல்லாமல் எப்படி ஹீரோவை பார்ப்பது என்று யோசித்து, இலியானாவை பார்க்கச் செல்கின்றனர். 

இத்தனை நாட்கள் இல்லாமல் திடீரென்று இலியானா திருமண மேடையில் இருக்கிறார். பெண் வீட்டாரிடம் உண்மைகளை சொல்லி அவரையும் அழைத்துக் கொண்டு விஜய்யின் இருப்பிடம் செல்கின்றனர்.அங்கே விஜய்யை பார்த்த பின் தான் விஜய் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்று அனைவருக்கும் தெரியவருகிறது.

 நண்பர்கள் ஒன்று சேர்ந்துவிட்டனர். ஹீரோ, ஹீரோயின் ஜோடி போட்டாச்சு. அவ்வளவு தான் படம் முடிந்தது.  ஷங்கருக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுவது இது ரீமேக் படம் என்ற எண்ணத்தை ரசிகர்களுக்கு படம் பார்க்கும் போது வரவிடாமல் படத்தை கொண்டு சென்றது தான். 

வெளிப்படையாக சொல்லப் போனால் இதுவரை விஜய் நடித்த படங்களில் மெச்சக்கூடியது இதுதான். பூக்கள் தூவி தாரைத் தப்பட்டைகள் முழங்க விஜய்யை வரவேற்கும் வேலைகள் எல்லாம் விஜய்யின் ஓப்பனிங் காட்சியில் இல்லை. விஜய் அடக்கி வாசித்திருக்கிறார் என்றே சொல்லலாம். விஜய் வரும் சீன்கள் எல்லாமே அமைதியான, தன்புகழ் பாடாத, பன்ச் டயலாக் பேசாத நடிப்பில் அருமையாக கவர்கிறார்.

 நிச்சயமாக வழக்கமான விஜய் படங்களில் அவரது நடிப்பில் கூடுதலாக இருக்கும் ஏதோ ஒன்று இந்தப் படத்தில் இல்லை. அதுவே அவரை அழகாகக் காட்டுகிறது. பழைய படங்களில் உள்ள படாபடா பில்ட் அப்புகள் போல் இல்லாமல் படத்தில் கதையை ஒட்டிய பிலட் அப்புடன் வலம் வருகிறார். 

ஜீவா என்னதான் சாதுவாக நடித்திருந்தாலும் குடித்துவிட்டு பேசும் காட்சிகளில் கைதட்டல் பெருகிறார். ஜீவாவின் தற்கொலை காட்சி மன நெகிழ்ச்சி. 

ஸ்ரீகாந்தின் மார்க்கெட்டுக்கு ஏணிப்படியாக இருக்கப் போகும் படம் இது. முந்தைய படங்களில் சில காட்சிகளில் மட்டுமே வந்து காணாமல் போகும் சத்யன் படம் முழுக்க வருகிறார். சத்யனின் செயல்களுக்கு பதில் சொல்லும் விதமாகவே மூன்று நண்பர்களின் செயல்களும் இருப்பதால் படத்தின் கதை அவருடனே நகர்கிறது. 

ஏற்கனவே கேட்ட பாடல்கள் என்பதால் பாடல் காட்சிகளில் கண்களை திரையில் விட்டுவிட்டு செவியும் வாயும் பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு கம்பெனி கொடுக்கிறது. 

செக்ஸி சைரன் இலியானா சாதாரணமான நடிப்பு. விஜய்யின் காதல் காட்சிகளுக்கு கம்பெனி. 

வைரஸ் என்ற பட்டப்பெயருடன் வரும் சத்யராஜ் எல்லாவற்றையும் ஸ் ஸ் என்று பேசுவது ட்ரெண்டாக மாறலாம். விளையாட்டாக வேலையாளிடம் ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் வேலை கிடைத்தால் என் மீசையை எடுத்து விடு என்று விளையாட்டுக்கு சொல்ல அவர்களுக்கு வேலை கிடைத்ததும் அவர் மீசையை எடுத்து விட இவர் குதிப்பது உண்மையிலேயே சிரிக்க வேண்டிய காமெடி.

கருத்துகள் இல்லை: