திங்கள், 23 ஜனவரி, 2012

யு.எஸ். ஜெர்மனியிலிருந்து கேரளா வழியாக கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு நிதி வருவது கண்டுபிடிப்பு!


Udayakumar
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவுக்கு வெளிநாட்டிலிருந்து பெருமளவில் நிதி வந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, ஜெர்மனியிலிருந்து இந்த நிதி அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிதியை கேரளாவில் உள்ள மீனவர் சங்கம் மூலம் கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு விநியோகித்துள்ளனர். இதன் மூலம் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கேரளாவின் பங்கும் முக்கியமாக அமைந்திருப்பது தெரிய வந்து அனைவரையும் அதிர வைத்துள்ளது.மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் பங்கும் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து ஜெர்மனியில் உள்ள ரெய்னர் ஹேர்மான் என்பவருக்குப் பணம் போகிறது. அவர் அங்கிருந்து கேரளாவில் உள்ள ஒரு மீனவர் அமைப்புக்குப் பணத்தை அனுப்பி வைக்கிறார். இந்தப் பணத்தை உதயக்குமார் தலைமையிலான போராட்டக் குழு உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு விநியோகிக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலும் சில முக்கியத் தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது. அது உறுதியாகத் தெரிந்தவுடன் இந்த நிதிக் கட்டமைப்பு குறித்த முழு விவரங்களையும் மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நிதியைப் பெறும் பல தொண்டு நிறுவனங்கள் அதை வட்டிக்கு விட்டு வரும் அதிர்ச்சித் தகவலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டபோதும் சரி, பின்னர் கட்டுமானப் பணிகள் நடந்தபோதும் சரி பெரிய அளவில் எந்தப் போராட்டமும் வெடிக்கவில்லை. ஆனால் அணு மின் நிலையம் தயாராகி திறப்புக்கு நாள் குறிக்கப்படும் நாள் நெருங்கிய சமயம் பார்த்து கடந்த ஆண்டு பெரும் போராட்டம் வெடித்தது.

உதயக்குமார் என்பவர் தலைமையில் கிராமத்தினர், விவசாயிகள், மீனவர்களைத் திரட்டி நடந்த இந்தப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இநத்ப் போராட்டத்திற்கு மீடியாக்களும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் அகில இந்திய அளவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மத்திய அரசுத் தரப்பிலும், மாநில அரசுத் தரப்பிலும் பேச்சுவார்த்தைகள், சமாதான முயற்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் உதயக்குமார் தலைமையிலான போராட்டக் குழு எந்த உடன்பாட்டுக்கும் வர மறுத்து விட்டது. இதையடுத்து மக்கள் மனதில் நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில் விஞ்ஞானியான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே நேரடியாக கூடங்குளம் அணு மின் நிலையத்தைப் பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் உலகின் அதி நவீன பாதுகாப்புகளுடன் கூடியதாக இந்த அணு மின் நிலையம் அமைந்துள்ளது. இது கூடங்குளம் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று அறிவித்தார். அப்படியும் போராட்டக் குழுவினர் அமைதி அடையவில்லை. மாறாக கலாமையே கடுமையாக சாடினர்.

இப்படி எந்த உடன்பாட்டுக்கும் வராமல் தொடர்ந்து போராட்டங்களில் உதயக்குமார் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வந்ததால் மத்திய உள்துறை அமைச்சகம், இவர்களுக்கு போராடுவதற்கு எங்கிருந்து நித வருகிறது என்று கேள்வி எழுப்பியது. மேலும் இதுதொடர்பாக சமீபத்தில் உள்துறை அமைச்சக் அதிகாரிகள் அதிரடி ரெய்டில் இறங்கினர்.

கடந்த வாரம் வருமானவரி மற்றும் உள்துறை மத்திய அதிகாரிகள் தூத்துக்குடி மற்றும் மதுரையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்களில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் என்ன கிடைத்தது என்பது அதிகாரப்பூர்வாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இதுகுறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது அமெரிக்காவிலிருந்து ஜெர்மனியைச் சேர்ந்த, பல்வேறு நாடுகளில் உள்ள கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்குப் பணம் வழங்குபவரான ரெய்னர் ஹெர்மான் என்பவருக்குப் பணம் போகிறதாம். இவர்தான் இந்தியாவுக்கும் பணம் அனுப்பி வைக்கிறார்.

இவரிடமிருந்து கேரளாவைச் சேர்ந்த ஒரு மீனவர் அமைப்பு பணம் பெற்று அந்தப் பணத்தை கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு அனுப்பி வைக்கும் விவரம் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளதாம். இதற்கான ஆதாரம் கைப்பற்றப்பட்டுள்ளதாம்.

இந்தப் பணம் தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் இயல்பான பணமா அல்லது கூடங்குளம் போராட்டத்திற்கு ஊக்களிப்பதற்காக அனுப்பப்படும் பணமா என்பதை தற்போது மத்திய அரசு தீவிரமாக விசாரித்து வருகிறதாம்.

முன்பு சொந்தக் காசைக் கொண்டுதான் கூடங்குளம் மக்கள் போராடி வருகிறார்கள் என்று உதயக்குமார் கூறியிருந்தார். ஆனால் தற்போது போராட்டக் குழுவினர் கேரளாவில் உள்ள மீனவர் அமைப்புகளிடமிருந்து பணம் பெற்றது தெரிய வந்துள்ளது. இந்தப் பணம் வெளிநாட்டுப் பணம் என்பதும் நிரூபணமாகியுள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் உதயக்குமாருக்கு கேரளத் தொடர்புகள் நிறைய இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர் கேரளாவில் பட்டம் பெற்றவர். அங்குள்ள பல தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளார். மேலும் கேரலாவைச் சேர்ந்த பலர் அடிக்கடி கூடங்குளம் வந்து போயுள்ளதும் தெரிய வந்துள்ளது.

கூடங்குளம் போராட்டத்திற்கு கேரள அரசே கூட ஆதரவாகத்தான் இருந்து வருகிறது. மேலும், கூடங்குளத்தை மேற்கோள் காட்டி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்றும் கேரள அரசு அடிக்கடி கூறி வருவதும் இங்கு நினைவுகூறத்தக்கது.

எனவே கூடங்குளம் போராட்டத்தின் பின்னணியில் மறைமுகமாக கேரள அரசும் கூட இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மொத்தத்தில் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் மிகப் பெரிய அளவிலான பின்னணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை இதுகுறித்த விரிவான தகவல்களை பகிரங்கமாக வெளியிடும்போதுதான் உண்மை என்ன என்பது தெரிய வரும்.

கருத்துகள் இல்லை: