புதன், 25 ஜனவரி, 2012

கேட்கும் சம்பளத்தைத் தர முடியாது: திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்


பெப்ஸி தொழிலாளர்கள் தாங்களாகவே நிர்ணயித்துக் கொண்ட சம்பளத்தைத் தர முடியாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.  தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விவரம்: மூன்று நாள்களுக்கு முன்பு தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்ஸி) சார்ந்த சங்கங்கள் தன்னிச்சையாக சம்பள உயர்வை நிர்ணயம் செய்துள்ளனர். வழக்கமாக தயாரிப்பாளர்கள் சங்கமும், தொழிலாளர்கள் சங்கமும் கலந்து பேசி முடிவெடுத்து ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் சம்பள உயர்வு வழங்கப்படும்.  அதை மீறி பெப்ஸி அமைப்பினர் ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து அறிவித்திருப்பது நடைமுறை வழக்கத்தை மீறிய செயலாகும். அவர்கள் கேட்கும் சம்பளத்தைத் தர முடியாது. எனவே, இனி எங்கள் சங்கத்துக்கும் தொழிலாளர் அமைப்புக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள தயாரிப்பாளர்கள், தங்கள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் பணியில் அமர்த்திக் கொள்ளலாம்.  இதற்கு உடன்பட்டு பணியாற்றவரும் தொழிலாளர்களுக்கு, எங்கள் சங்கம் ஒரு குழு அமைத்து அவர்களது சம்பளத்தை நிர்ணயம் செய்யும். அதை அனைத்துத் தயாரிப்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும். மீறும் தயாரிப்பாளர்களுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எவ்வித ஒத்துழைப்பும் அளிக்காது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு 300-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: