ஜெ. சொத்துக் குவிப்பு: மறுபடியும் மொதல்ல இருந்தா...?- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் முதலிலிருந்து விசாரிக்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக் கோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.
இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் அரசாணைக்குக் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், வழக்கை வேண்டும் என்றே தாமதப்படுத்தும் நோக்கம்தான் இதில் தெரிகிறது.
8 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் முதலிலிருந்து விசாரிக்கச் சொல்வது ஏன் என்பது புரியவில்லை.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குமூலம் பெங்களூர் தனிக் கோர்ட்டில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் விசாரணையைத் தொடங்கக் கோருவது சரியல்ல, இதுதொடர்பான அரசாணை ஏற்கத்தக்கதல்ல.
இந்த அரசாணையானது, அரசியல் சட்டத்தின் 173வது பிரிவை கேள்வி கேட்பதாக உள்ளது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் வழக்கு விசாரணை ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக