வெள்ளி, 27 ஜனவரி, 2012

கொலை வழக்கில் ராவணன்- பல மணி நேரமாக விசாரணை- பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்!

Ravananan
கோவை: சசிகலாவின் நெருங்கிய உறவினரான ராவணன் கைது செய்யப்பட்டிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவர் சாதாரண வழக்கில் சிக்கவில்லையாம், மாறாக கொலை வழக்கில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவரை ரகசிய இடத்தில் வைத்து கோவை போலீஸார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மன்னார்குடியைச் சேர்ந்த ராவணன், சசிகலாவின் சித்தப்பா மகளைத் திருமணம் செய்தவர். அந்த வகையில், சசிகலாவுக்கு இவர் தங்கை கணவர் ஆவார். கோவையில் வசித்து வரும் ராவணன், இங்கிருந்தபடி கொங்கு மண்டல அதிமுகவை ஆட்டிப் படைத்து வந்தார்.அதிமுகவில் இவரது ஆட்டம் அதிகமானது சமீ்ப காலத்தில்தான். கடந்த சில ஆண்டுகளாக இவர் போட்ட ஆட்டத்தால் அதிமுகவினர் கடும் எரிச்சலில் இருந்தனர். ஆனால் சசிகலாவின் ஆதரவால் எதிர்ப்பாளர்களை நசுக்கி வந்தார்.

அரசுப் பணியிடங்களில் இடமாற்றம், நல்ல பசையான இடங்களுக்குப் போக விரும்பியோர் என பலரும் இவரைத் தேடிப் போகும் நிலையை ஏற்படுத்தினார். இதில் பெரும் பணம் பார்த்தார்.

இதுதவிர நில அபகரிப்பு, மிரட்டல் என பல்வேறு புகார்களும் உள்ளன. கல் குவாரி உரிமம் உள்ளிட்ட விவகாரங்களிலும் இவரது பெயர் பெருமளவில் அடிபட்டது. இதில் இவர் மீது கோவையில் வழக்குப் பதிவாகியுள்ளதாக தெரிகிறது.

சமீ்பத்தில்தான் கோவையைச் சேர்ந்த மாவட்ட பாஜக துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் என்பவர் ராவணன் மீது நில அபகரிப்புப் புகார் கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் கோவை நடந்த ஒரு மர்ம மரணம் தொடர்பாக ராவணன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சூலூர் பகுதியில் சமீபத்தில் செல்வராஜ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது விபத்து என அப்போது கூறப்பட்டது. ஆனால் கொலை என அவரது மகன்கள் கூறி வந்தனர். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிடம் அவர்கள் நேரிலேயே மனு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அது கொலை வழக்காக மாற்றப்பட்டு அதில்தான் தற்போது ராவணன் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ராவணனை போலீஸார் பல்லடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல மணி நேரமாக தீவிர விசாரணை நடந்து வருகிறதாம். இதுவரை இதுகுறித்து போலீஸ் தரப்பில் கப்சிப் என உள்ளனர். ஆனால் ராவணன் கைது செய்யப்பட்டிருப்பது உண்மைதான் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் ராவணன் கைது குறித்து கோவை போலீஸார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவர் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் கைது நடவடிக்கையிலிருந்து தப்ப திவாகரன் தலைமறைவாக உள்ள நிலையில், மறுபக்கம் ராவணன் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுளள தகவல் சசிகலா தரப்பில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: