செவ்வாய், 24 ஜனவரி, 2012

சென்னை வங்கியில் கொள்ளையடித்தது பீகார் கட்டுமானத் தொழிலாளர்கள்?

சென்னை பெருங்குடியில் பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் துப்பாக்கி முனையில் துணிகரமாக கொள்ளையடித்தது பீகாரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து சுற்றுப் பகுதிகளில் தங்கி கட்டட வேலை பார்த்து வரும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் தொழிலாளர்களை தீவிரக் கண்காணிப்பின் கீழ் போலீஸார் கொண்டு வந்துள்ளனர்.
சென்னை பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் கிளை உள்ளது.
இந்த வங்கி அமைந்துள்ள கட்டடத்தின் தரை தளத்தில் கட்டிட உரிமையாளர் தேனாராமுக்கு சொந்தமான மின்சாதன பொருட்கள் கடை உள்ளது. மாடியில் வங்கி உள்ளது. மாடிக்கு செல்லும் படிக்கட்டின் அருகே வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.

மேலாளராக பாலாஜி என்பவரும், கேஷியராக ஆனந்தன் என்பவரும் உள்ளனர். வங்கிக்கு என்று தனியாக காவலாளி கிடையாது. ஏ.டி.எம்.முக்கு காவலாளியாக நியமிக்கப்பட்டு உள்ள தர்மையா என்பவரே வங்கியையும் பார்த்துக்கொள்வார்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த நேரத்தில், அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர். வங்கியில் இருந்த ரூ. 24 லட்சம் பணத்தை அக்கும்பல் எடுத்துக் கொண்டு தப்பியது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தற்போது துப்பு துலங்க ஆரம்பித்துள்ளது. முதல் கட்ட விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் அவர்கள் கட்டுமானத் தொழிலாளர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி பீகாரிலிருந்து மலிவு விலையில் வாங்கப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது.

ராஜீவ் காந்தி சாலை என தற்போது அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ஏராளமான தகவல் தொழில்நுட்பக் கட்டடங்கள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் வட மாநிலத்தவர்களே பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வேலை பார்க்கின்றனர்.

இவர்கள் சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெருங்குடி, தரமணி, மேடவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் முகாம் அமைத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

கொள்ளை நடந்த வங்கியில் கிட்டத்தட்ட 2500 கணக்குகள் உள்ளன. அதில் 1500 கணக்குகள் வட மாநிலத்தவர்களின் கணக்குகளாகும். இவர்கள் அனைவருமே கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். இதுதான் தற்போது போலீஸாரை சிந்திக்க வைத்துள்ளது.

அருகில் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை இருந்தும் கூட அங்கு கொள்ளையடிக்காமல், பாங்க் ஆப் பரோடாவுக்கு கொள்ளையர்கள் வந்தது போலீஸாரை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியபோதுதான் வட மாநிலத்தவர்கள் அதிகம் கணக்கு வைத்துள்ள இந்தக் கிளையை நீண்ட நாட்களாக வேவு பார்த்து திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர் என்ற முடிவுக்கு போலீஸார் வந்துள்ளனர்.

இங்கு கணக்கு வைத்துள்ள வட மாநிலத்தவர்களில் சிலர்தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் வந்தவர்கள் நவநாகரீகமாக இருக்கவில்லை.சாதாரணமாகத்தான் இருந்துள்ளனர். மேலும் அவர்கள் பேசிய இந்தி, படித்தவர்கள் பேசுவது போல இல்லை, மாறாக கிராமத்து இந்தி பேசுபவர்கள் போலத்தான் இருந்தது. எனவே கொள்ளையர்கள் வட மாநில மாணவர்களாக இருக்க முடியாது, மாறாக கட்டுமானத் தொழிலாளர்களாகவே இருக்க வேண்டும் என்று போலீஸார் கூறுகிறார்கள்.

சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 50,000 இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். அதிலும் இவர்களில் 2000க்கும் மேற்பட்டோர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் முகாமிட்டு தங்கியுள்ளனர். இவர்களைப் போலீஸார் தற்போது முற்றுகையிட்டு விசாரணையில் இறங்கியுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து வங்கி மேலாளர் உள்ளிட்டோர் கொடுத்த சில அடையாளங்களை வைத்து கம்ப்யூட்டர் உதவியுடன் வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதைக் கொண்டு அடுத்த கட்ட விசாரணையை போலீஸார் முடுக்கி விடவுள்ளனர்.

கொள்ளையர்கள் யாராக இருக்கலாம் என்பது குறித்து ஓரளவு துப்பு துலங்கி விட்டதால் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விரைவில் கொள்ளைக் கும்பல் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: