செவ்வாய், 19 ஏப்ரல், 2011

Refugee போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட மூவர் யாழில் கை


இலங்கை தொடர்பாக போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட மூவர் யாழில் கைது
வெளிநாடுகளில் புகலிடம் கோரியிருக்கும் இலங்கையர்களின் விசாவை நீடிப்பதற்காக இலங்கையில் மோசமான சூழ்நிலை காணப்படுவதாகப் போலி ஆவணங்களைத் தயாரித்த மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

இவர்கள் தற்பொழுது யாழ்ப்பாணப் பொலிஸாரின் கண்காணிப்பில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்திருப்பவர்களின் விசாவை நீடிப்பதற்காக இலங்கையில் ஸ்திரமற்ற பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்படுவதாகப் போலி கடிதங்கள் மற்றும் ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு போலியான ஆவணங்களைத் தயாரித்து வழங்க தலா ஒரு ஆவணத்துக்கு சுமார் 5 இலட்சம் ரூபா அறவிட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் இவ்வாறான போலி ஆவணங்களை வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறான போலி ஆவணங்களைத் தயாரித்து வழங்கும் நடவடிக்கை ஒரு வியாபாரமாக நடைபெற்றுள்ளது. இதற்குப் போலியான கடிதத் தலைப்புகள் என்பனவும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெவ மேலும் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் யாழ். பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: