வெள்ளி, 22 ஏப்ரல், 2011

சாய்பாபா உடல்நிலை மோசமானது-புட்டபர்த்தியில் தடை உத்தரவு


புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகி்றது. இதனால் புட்டபர்த்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அந்த நகரில் போலீசார் தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கடந்த மாதம் 28ம் தேதி சாய்பாபா நெஞ்சு மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இதையடுத்து அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிக்ச்சை அளித்து வருகி்ன்றனர். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல் நிலை மேலும் மோசமாக உள்ளது.

கடந்த வாரம் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றனர், தற்போது மேலும் மோசமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சாய்பாபாவின் கல்லீரல் செயல் இழந்தது. இதனால் அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளது. இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சாய்பாபா ஜீவ சமாதி அடைய விரும்புவதாக வதந்திகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த செய்தியைக் கேட்ட பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்தனர். சாய்பாபாவின் உடல்நிலை குறித்து மாறுபட்ட தகவல்கள், வதந்திகள் பரவியதால் நேற்று புட்டபர்த்தி மற்றும் அதன் அருகில் இருக்கும் தர்மாவரம், இந்துப்பூர், அனந்தப்பூர் நகரங்களிலும் பதற்றமான சூழ்நிலை உருவானது.

இதையடுத்து இந்த நகரங்களில் கூடுதல் தடுப்புகள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. புட்டபர்த்தியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதலாக 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அருகில் கடப்பா மாவட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிடும் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் சட்டம்-ஒழுங்கை நிர்வகிப்பதில் போலீசாருக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சாய்பாபாவுக்கு பிறகு சத்யசாய் அறக்கட்டளையின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் யார் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறக்கட்டளையை ஆந்திர அரசு கையகப்படுத்தப்போவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று பிரசாந்தி நிலையத்தில் இருந்து விலை மதிப்பற்ற பொருட்களை அறக்கட்டளை நிர்வாகிகள் கடத்திச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியானதால் பக்தர்கள் கொந்தளித்துவிட்டனர்.

ஆனால் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று அனந்தபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சானவாஸ் கியூசிம் கூறினார். பரபரப்பான இந்த சூழ்நிலையில் சாய்பாபாவுக்கு மின் பிசியோதெரபிக் சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் இருந்து டாக்டர் யோக்யா ராமன் தலைமையில் சிறப்பு நிபுணர்கள் நேற்று புட்டபர்த்தி வந்தனர். அவர்கள் இன்று சாய்பாபாவுக்கு புதிய சிகிச்சையை தொடங்கி உள்ளனர்.

சாய்பாபாவின் உடல்நிலை பற்றி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சாய்பாபா அறக்கட்டளையின் சொத்துக்களை அதன் உறுப்பினர்கள் அபகரிக்க முயல்வதாக தகவல் வருகின்றன. இந்நிலையில் இன்று சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்களின் நடக்கிறது. இதில் சாய்பாபா உடல்நிலை குறித்தும், அறக்கட்டளை நிர்வாகம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

சிலையில் எண்ணெய் வடிந்ததால் பரபரப்பு:
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா சிலையில் எண்ணெய் வடிந்ததாக கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா இதயம், நுரையீரல் பாதிப்பு காரணமாக அங்குள்ள சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

சாய்பாபா விரைவில் குணமாக வேண்டும் என்று நாடு முழுவதும் இருக்கும் அவரது பக்தர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் புட்டபர்த்தியில் ரஹீம் என்பவரது வீட்டில் 4 அடி உயர சாய்பாபா மெழுகு சிலை உள்ளது. அந்த சிலையின் கால்களிலிருந்து நேற்று எண்ணெய் போன்ற திரவம் வடிந்துள்ளது. உடனே ரஹீமின் மனைவி அக்கம் பக்கம் வசிப்பவர்களிடம் இது பற்றி கூறியுள்ளார். இந்த தகவல் காட்டுத் தீ போல அருகில் உள்ள ஊர்களுக்கம் பரவ அங்குள்ள மக்களும் பக்தி பரவசத்தோடு சாய்பாபா சிலையை பார்த்து வணங்கி சென்ற வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் ரஹீம் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இது குறித்து ரஹீம் செய்தியாள்களிடம் கூறியதாவது, கடந்த நவம்பர் மாதம் எனது கனவில் சாய்பாபா வந்தார். அப்போது அவர் தனது சிலையை வழிபடச் சொன்னார். அதன்படி நான் தினமும் அவரது சிலையை வணங்கி வருகின்றேன். அதனால் தான் சாய்பாபா சிலையில் இது போன்ற அதிசயம் நடந்துள்ளது. சாய்பாபா சிலையில் வந்த எண்ணெய்யை முகர்ந்து பார்த்தபோது அதில் நறுமணம் இருந்தது. இது சாய்பாபா விரைவில் குணமாகி வருவார் என்பதன் அறிகுறியே என்றார்.

கருத்துகள் இல்லை: