சனி, 23 ஏப்ரல், 2011

2ஜி ஸ்பெக்ட்ரம்: குற்றப் பத்திரிகையில் தயாளு அம்மாள்-கனிமொழி

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்களும் இடம் பெறும் என்று தெரிகிறது.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது.

குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.

இந் நிலையில் சிபிஐ திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா, நீரா ராடியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

இந் நிலையில், வரும் திங்கள்கிழமை துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இதில், தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.
English summary
The second chargesheet in the 2G spectrum scam will be filed on Monday by the Central Bureau of Investigation. Sources in the CBI say that M Karunanidhi's daughter, Kanimozhi, and his wife, Dayaluammal, will both be accused of benefiting from the scam. Sources claimed that the second chargesheet will focus on Rs214 crore transaction involving Kalaignar TV and the alleged payoff routed through Dynamix Realty, Kusegaon Realty and Cineyug Films.

கருத்துகள் இல்லை: