இந்தியாவின் விசாரணையையடுத்து வடக்கு விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்கள் மீளக் கிடைத்தன
வடபகுதி விவசாயிகளுக்காக இந்திய அரசினால் வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் கணிசமானவற்றை அரச நிறுவனங்களின் பாவனைக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் இது தொடர்பாக விசாரித்ததையடுத்து இலங்கை அரசாங்கத்தினால் இந்த உழவு இயந்திரங்கள் வடபகுதி விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக தெரியவருகிறது. வட பகுதி விவசாயிகளுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் சுமார் 200 உழவு இயந்திரங்கள் தெங்கு அபிவிருத்திச் சபை மற்றும் மர முந்திரிகை கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியிருந்தார். மேலும் 100 உழவுஇயந்திரங்கள் வேறு பல நிறுவனங்களுக்கு வழங்க தயார்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் விசாரித்ததாகவும் அதையடுத்தே, மேற்படி உழவு இயந்திரங்களை பல அரச நிறுவனங்களுக்கு வழங்கும் தீர்மானம் மாற்றப்பட்டு மீண்டும் அவற்றை வடபகுதி விவசாயிகளுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் நம்பகமான வட்டாரங்கள் டெய்லி மிரர், தமிழ் மிரருக்குத் தெரிவித்தன. 600 மில்லியன் ரூபா பெறுமதியான மேற்படி 500 உழவு இயந்திரங்களும் வட மாகாணத்தின் பல்வேறு கமநல சேவை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ததாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக