வெள்ளி, 8 ஏப்ரல், 2011

தமிழிலும் சிங்களத்திலும் மக்களுக்கான சேவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம், சலுகை பெறும் ஊழியர்கள் மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது. நம்பிவரும் மக்களின் கண்ணீரை துடைக்க அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். வடக்கு கிழக்கு என்றில்லாமல் ஒரே நாடு என்ற ரீதியில் தமிழிலும் சிங்களத்திலும் மக்களுக்கான சேவைகளை வழங்க அரசாங்க ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

தம்மை நம்பி வரும் மக்களின் கண்ணீரைத்துடைப்பதில் அரச ஊழியர்கள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் அவர்களுக்கு சம்பளவ உயர்வு, வீட்டுக்கடன் உட்பட பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.நாட்டு மக்களின் நிதியிலிருந்து சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் அரச ஊழியர்கள் மக்களுக்கு சுமையாக அல்லாது சேவையாளர்களாக வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரச முகாமைத்துவ இணைந்த சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 2.333 பேருக்கான நியமனக்கடிதம் வழங்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியமனக்கடிதங்களை கையளித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, நவீன் திசாநாயக்க உட்பட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் அரசாங்க ஊழியர்கள் என்பவர்கள் சிறப்பான தொழிலை செய்பவர்கள். சமூகத்தில் அவர்களுக்கு சிறந்த இடம் உள்ளது. அதேபோன்று முன்பு எழுதுவினைஞர்களாக இத்துறையில் இணைபவர்கள் சிவில் சேவையில் உயர் அதிகாரிகளாகவே ஓய்வு பெற்றுச் செல்கின்றனர். இந்த வகையில் அநாகரிக தர்மபால டி. பி. இலங்கரத்ன போன்றோர் குறிப்பிடக் கூடியவர்கள்.
தற்போது அரச சேவையில் 13 இலட்சம் பேர் சேவையாற்றுகின்றனர். அரச நியமனங்களை ரத்துச் செய்திருந்த யுகமொன்று இந்த நாட்டில் இருந்தது. தற்போது அரச துறை முன்னேற்றம் கண்டுள்ளதுடன் அத்துறையிலுள்ளோர் இரு மொழித் தேர்ச்சி, கணனி அறிவுடனும் திகழ்கின்றமையைக் குறிப்பிட வேண்டும். அரசாங்க ஊழியர்கள் இந்த நாட்டு மக்களின் பணத்திலேயே கல்வி கற்கின்றனர் என்பதை மறக்கக் கூடாது. அதனைக் கருத்திற்கொண்டு சேவைக்காக வரும் மக்களை அன்புடன் அணுகி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்மிடம் சேவைகளைப் பெறவருவோரை தமது தாய், தகப்பன் உறவினர் என்று கருதி அவர்களின் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
நாட்டின் சில பகுதிகளில் அரச ஊழியர்கள் சுதந்திமாக பணியாற்ற முடியாத காலம் ஒன்று இருந்தது. தற்போது நாட்டில் எங்கும் எவரும் சுதந்திரமாக பணிசெய்ய முடியும்.எல்லைக் கிராமங்கள் என்ற பேச்சுக்கே தற்போது இடமில்லை அதேபோன்று கஷ்டப்பிரதேசம் என்ற பெயரையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதில் அரச ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர்கள் நாட்டுக்காக தமது எட்டு மணித்தியால பணியை முறையாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: