புட்டப்பர்த்தி: உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் சாய்பாபாவின் 85 வது பிறந்த நாள் விழா புட்டப்பர்த்தியில் நாளை ( 23 ம் தேதி) கோலாகலமாக நடக்கிறது. இன்று நடந்த சத்திய சாய் பல்கலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்று பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார். கடந்த 15 ம் தேதி முதல் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. சாய்பாபா மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
ஜனாதிபதி பங்கேற்றார்: 9 நாட்களாக விழா நடக்கும் இங்குள்ள குல்வந்த் மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. பிரபல இசைப்புலவர்கள் பங்கேற்ற இசைநிகழ்ச்சி, குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி, , இலவச திருமணம் மற்றும் சமூக சேவை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரத்தோற்சவம், கண்காட்சி, சிறப்பு பஜனையும் நடந்தது. கடந்த 19 ம் தேதி மகளிர் தினமாக கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பங்கேற்று சாய்பாபாவின் சேவைகளை பாராட்டி பேசினார்.
ஆயிரக்கணக்கான சேவா தொண்டர்கள் : பாபாவின் பிறந்த நாளை முன்னிட்டு பாபாவின் ஆசீர்வாதம் பெற மத்திய, மாநில அமைச்சர்கள், கவர்னர்கள். உயர் அதிகாரிகள் என இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து சாய் பக்தர்கள் குவிந்திருக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். பக்தர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஆயிரக்கணக்கான சேவா தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு : இன்று ( திங்கட்கிழமை) இந்த சேவா நிறுவன பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்றார். பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார். இவர் விழாவில் பேசுகையில்:
சாய்பாபா பெயரில் நடந்து வரும் கல்வி நிறுவனங்கள் சிறந்த முறையிலும், எளியமுறையிலும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஓற்றுமை, தியாகம், தன்னொழுக்கம், சுயசிந்தனை, சுயசேவை ஆகியவை அடங்கிய தரமான கல்வி மாணவர்களுக்கு இங்கு அளிக்கப்படுகிறது. இந்த முறையை நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களும் தற்போது கடைப்பிடித்து வருகின்றனர். இதன் மூலம் மாணவர்களின் திறமை வெளிப்படுவதுடன் கல்வி சார்ந்த அறிவையும் வளர்த்துக் கொள்கின்றனர். உலக தரத்துக்கான நவீன சமுதாயத்தை படைப்பதன் மூலம் வறுமையும் ஒழிக்கப்பட்டு சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
மனிதநேயத்தை வளர்க்க உதவ வேண்டும்: அறிவியல், கலை, தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பிரிவுகளில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு நல்ல முடிவுகளை வெளியிடுகின்றனர். ஆய்வுகளை மேம்படுத்தும் வகையிலும், நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் மனிதநேயத்தை வளர்க்க உதவ வேண்டும். இதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் மனிதநேயம் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதனை நாட்டிலுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர்களும் கடைப்பிடித்தால் நாம் எதிர்பார்க்கிற மனிதநேயத்தை நாடு முழுவதும் காணமுடியும். குக்கிராமங்களிலிருந்து நகரப்பகுதி வரை அனைத்துப்பகுதியிலும் குடிநீர், கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு உதவிகளை சாய் பாபா செய்து வருவது வரவேற்கத்தக்கதாகும் இவ்வாறு பிரதமர் பேசினார்.
ஒழுக்க நெறி தவறாமல் வாழுங்கள் சாய்பாபா அருளாசி: விழாவில் சாய்பாபா அருளாசி வழங்கி பேசியதாவது: தமயந்தி, சாவித்திரி, திரவுபதி, சீதா ஆகிய பெண்கள் தாங்கள் வாழும் போது ஒழுக்க நெறி தவறாமல் வாழ்ந்ததால் வளரும் சமுதாயம் சிறப்பாக இருந்தது. இதனால் வாழ்க்கையில் அனைவரும் ஒழுக்க நெறியை கடைப்பிடித்து வாழ்க்கையில் உயர வேண்டும். வீடுகளிலும் தம்பதியர்களிடம் ஒற்றுமையாக இருந்து ஒழுக்க நெறியை கடைப்பிடிப்பதன் மூலம் தேசிய அளவிலும் இதனை அனைவரும் கடைப்பிடிக்கலாம் என்றார்.
விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்: விழாவில், மாநில முதல்வர்கள் ரோசய்யா ( ஆந்திரா) , நரந்திரமோடி (குஜராத்), தமிழக துணை முதல்வர் மு.க., ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்., கிருஷ்ணா, விலாஸ்ராவ் தேஷ்முக், மற்றும் ரத்தன்டாடா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் பாபாவின் ஆசியை பெற புட்டப்பர்த்தி புறப்பட்டு சென்று விழாவில் பங்கேற்றார். பிரதமர் வருகையை முன்னிட்டு புட்டப்பர்த்தி விமான நிலையத்தில் இருந்து பிரசாந்தி நிலையம் வைரை பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. . விழா நடக்கும் இடத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக