எந்திரன் படத்தின் கதை சர்ச்சை விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கருக்கு எதிராக புகார் கொடுத்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ரஜினி நடித்துள்ள எந்திரன் படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். எந்திரன் படம் வெளியான சில நாட்களில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், இனிய உதயம் எனும் பத்திரிகையில் தான் எழுதிய ஜுகிபா என்ற கதையை திருடி எந்திரன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று போலீசில் புகார் கொடுத்தார்.
எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எந்திரன் கதை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய குற்றப்பிரிவின் திருட்டு வீடியோ பிரிவுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து துணைக் கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துவேல் பாண்டி விசாரணையை துவக்கினார். இந்த புகாரில் தொடர்புடைய இயக்குனர் ஷங்கர், ஆருர் தமிழ் நாடன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார்.
அந்த சம்மனில் 22.11.2010 அல்லது 23.11.2010க்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவின் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு உத்தரவிட்டது.
சம்மனை பெற்ற ஆரூர் தமிழ் நாடன் இன்று வழக்கறிஞர்கள் சிவக்குமார், எட்வின் ஆகியோருடன்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்
ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது 1996ல் ஏப்ரல் மாத "இனிய உதயம்' இதழில் வெளியான ஜூகிபா கதையின் புத்தக பிரதியை ஒப்படைத்தார். அப்போது போலீசாரின் சில கேள்விகளுக்கும் ஆரூர் தமிழ்நாடன் விளக்கம் அளித்தார்.
இதேபோல் போலீசார் சம்மனை ஏற்ற இயக்குனர் ஷங்கர் அல்லது அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்மன் குறித்து விளக்கம் அளிக்க ஆஜராகவில்லை என்றால், மேல் நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை உறுதியாக உள்ளது.
எந்திரன் கதை சர்ச்சை விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளதால் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக