திங்கள், 11 அக்டோபர், 2010

கே.பியின் மீது கோட்டபாய நம்பிக்கை வைக்க காரணம் என்ன?


(பரம்ஜி ஞானாஸ்வரன்)
புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள்!
தமிழ் மொழியில் தரித்திரம் என்றொரு சொல் வழக்கத்தில் இருக்கின்றது. வாழ்க்கையில் மிகவும் மோசமான பல நிலைகளை ஒரே நேரத்தில் ஒரு மனிதன் சந்தித்து அல்லற்படுவானாயின் அவனை தரித்திரம் பிடித்துள்ளது என்று சொல்வர். உதாரணமாக வறுமை, பிணி, மரணம் என்பன ஒவ்வொன்றுமே தனித்தனியாக மனிதருக்கு சொல்லொனா துன்பங்களை கொடுக்க வல்லன. ஆனால் அவை மூன்றுமே ஓன்றாக சேர்ந்து ஒருவனை பிடித்து ஒரே நேரத்தில் உலைக்குமாயின் அவனை தரித்திரம் பிடித்துள்ளது என்பர். இலங்கையில் ஈழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் என்ற கண்மூடித்தனமான செயற்பாட்டினால் தமிழர்கள் பட்ட துன்பங்களுக்கும், அடைந்த துயரங்களுக்கும், உறவுகளையும் உடமைகளையும் இழந்தமைக்கும், போராட்டம் முடிந்தும் இன்று அங்கு வாழும் தமிழர்கள் தொடர்ந்து படும் இடர்களுக்கும் காரணம் என்னவாக இருக்கும் என சிந்தித்து பார்க்கையில் கிடைத்த பதில் தமிழர்களை உண்மையில் தரித்திரம்தான் பிடித்துள்ளதோ எனும் சந்தேகமே.
தரித்திரநிலைகளுக்கு மனிதர்கள் ஆளாவதன் காரணம் பொதுவாக அவரவரேயாவர். ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்களை தரித்திரமாக பிடித்து அவர்கள் அவலங்கள் இன்றும் தொடர்வதற்கு காரணமாக இருப்பவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல புலம(பல்) பெயர்ந்த ஈழத்தமிழ் தரித்திரர்கள் என்றால் மிகையாகாது. அறிவு கெட்டு, சிந்திக்கும் திராணிகள் அற்று, தம்மை அதிமேதாவிகள் என்றும் மற்றவர்கள் சுத்த மடையர்கள் என்று எண்ணி உள்ளதையும் கெடுத்த கொள்ளிக்கண்ணர்களாக செயற்படும் சில ஈழத்தமிழ் விளக்குமாறுகளே இலங்கை தமிழர்களை பிடித்த தரித்திரங்கள் ஆவர்.
தென்னை ஓலையில் இருந்து கிழித்து வேறாக்கப்பட்ட பல ஈக்கு கதிர்களை சேர்த்து கத்தையாக கட்டி விளக்குமாறுகள் செய்வார்கள். இவ்வகையாக செய்யப்படும் விளக்குமாறுகளை வீடுகளையும் சுற்றாடல்களையும் கூட்டி சுத்தம் செய்ய மக்கள் பயன்படுத்துவர். சில விளக்குமாறுகளை கோவில்களை சுத்தப்படுத்தவும் சில விளக்குமாறுகளை மலசலக்கூட கழிவுகளையும் கழுவி சுத்தப்படுத்தவும் பாவிப்பர். யார் எதை சுத்தப்படுத்த இந்த விளக்குமாறுகளை உபயோகித்தாலும் அந்த விளக்குமாறுகளுக்கு புரிவதில்லை தாம் கழுவுவது கோவில் நிலங்களா அல்லது மலக்கழிவறைகளா என்பது. ஆனால் அந்த விளக்குமாறுகள் எண்ணிக்கொள்ளுமாம் தம்மால்தான் இந்த உலகமே சுத்தமாகின்றது என. சுத்தப்படுத்த பாவிக்கப்படும் விளக்குமாறுகளை மக்கள் வீட்டினுள் தன்னும் எடுப்பதில்லை. ஏன் எனில் அவை அசுத்தம் என்பதால்.
அவ்வகையான கழிவறைத்தன்மைகளை தம்மகத்தே கொண்டு பல வெளிநாடுகளில் வாழும் புலம(பல்) பெயர்ந்த ஈழத்தமிழர்கள் காசுக்கும், கக்கூசுக்கும் வித்தியாசம் தெரியாத விளக்குமாறுகள் போல பொது அறிவோ பகுத்தறிவோ அரசியல் அறிவோ இன்றி நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் வித்தியாசம் தெரியாமல், தம்மை புத்திசாலிகள் உணர்ச்சி தமிழர்கள் என காட்டி கொள்வதாக மட்டும் எண்ணி தமிழ் சமூகத்திற்கு நன்மை செய்வதாக எண்ணி முட்டாள்தனமாக தீங்குகள் உண்டாகும் வகையில் செயற்படுகிறார்கள். இவர்களே இலங்கை தமிழர்களை இன்று ஆட்டிப்படைக்கும் தரித்திரர்கள் எனலாம்.
இவர்களது குறிக்கோள் தம்மை அதிமேதாவிகளாக, உணர்ச்சி தமிழர்களாக, ஈழவிடுதலை வீரர்களாக, மனித நேய உணர்வாளர்களாக வேடமிட்டுக்காட்டி, வெளிநாடுகளில் மாடாக உழைக்கும் சிந்திக்கும் திறன்கள் அற்ற இழித்தவாய் ஈழத்தமிழர்களை தம்வசப்படுத்தி அவர்களிடம் சுறண்ட எத்தனிப்பது ஒன்றுமட்டும்தான். பெற்ற தாய் முதலான இரத்த உறவுகளை விபச்சாரம் செய்ய வைத்து வருமானம் பார்ப்பதற்கு ஒப்பாக, அப்பாவி தமிழர்களையும் சொந்த உறவுகளையும் யுத்தத்திற்கு பலிகொடுத்து அதனை முதலாக்கி பத்திரிகைகள், தகவல்சஞ்சிகைகள், வானொலிகள் என்ற பெயர்களில் வியாபாரிகாளாக வாழும் ஈனத்தமிழ் பிறவிகள் சிலர் மேற் சொன்ன சில விளக்குமாறுகள் கொட்டும் குப்பைகளை, விளைவுகளை பற்றி எண்ணியும் பாராது படைப்புகள் என்ற பெயர்களில் பதித்து விடுகின்றனர்.
இன்று இந்தியாவின் மற்றும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் ஆதரவுகளுக்காக ஏங்கி நிற்கும் அப்பாவி இலங்கைத்தமிழர்களின் வாயில் மண்ணை போடக்கூடிய நிலைமைகளை தோற்றுவிக்கும் வகையிலேயே இவர்களது உளரல்கள் அமைந்து இருக்க காணலாம். மனித நேயம் மிக்க நல்ல மனிதர்களாக, கடின உழைப்பாளிகளாக, அறிவாளிகளாக கல்விமான்களாக நல்ல சிந்தனையாளர்களாக எழுத்தாற்றல் முதல் கலைத்திறன்கள் மிக்க நல்ல பல ஊடகவியலாளர்களை கொண்டிருக்கும் தமிழ் ஈழ மக்களின் பெருமைகளுக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில், தான் பிறந்த ஊரின் அடைமொழியுடன் தனது பெயரை இணைத்து ஒரு பரதேசி (புலம் பெயர்ந்த) இணையதளம் ஒன்றில் கொட்டி வைத்திருந்த குப்பை கண்ணில் சில நாட்களுக்கு முன் தட்டுப்பட்டது.
தனது வாழ்க்கையை ஆயுதப்போராட்டத்திற்காக அர்ப்பணித்து, தான் சார்ந்த இயக்க கட்டுப்பாடுகளுக்காக தனது காதலை துறந்து, தனது தலைவனின் கட்டளைகளுக்கு பணிந்து, உண்மையாக தனது நாட்டின் விடுதலைக்காக உழைத்த ஒருவன் இன்று தனது இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் ஓய்ந்த பின்பு, தமது இயக்கத்தின் கண்மூடித்தனமான போராட்ட போக்குகளால் பாதிக்கப்பட்ட தனது நாட்டு மக்களுக்கு செய்த தவறுகளை உணர்ந்து அதற்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் இன்று அவர்களுக்காக இயன்ற வரையில் உழைக்க முயற்சிக்கும் கே.பி என்கின்ற குமரன் பத்மநாதன் டி.பி.எஸ் ஜெயராஜிற்கு கொடுத்த சில தகவல்களை பொய் என நிரூபிப்பதற்கு தன்னிடம் போதிய ஆதாரங்கள் இருப்பது போலவும், ஏதோ கே.பியின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தவன் போலவும், என்ன உண்மையில் நடந்தவை என்பவற்றை தெரிந்திருப்பவன் போலவும் சொல்ல எண்ணி, விடுதலைப்புலிகளின் தலைமை பற்றிய இன்றய உண்மைகளை தெரிந்துதிருந்தும் தொடர்ந்தும் தனது அரசியல் வாழ்வுக்காக உணர்ச்சி தமிழன் வேடம் போட்டு உண்மைகளை மறைக்கும் வை.கோவை பெருமைப்படுத்துவதற்காக மறுபடியும் இந்தியாவையும் இலங்கைத்தமிழர்களுக்கு உதவ வல்ல இந்திய அரசியல்வாதிகளையும் சிறுமைப்படுத்தி எழுதி உள்ளான். அதற்காக, கே.பி உண்மை மட்டும் பேசும் ஒரு உத்தமன் என்பதாக வக்காலத்து வாங்குவதாக அர்த்தமாகாது.
அமைச்சர் சிதம்பரமோ அல்லது கனிமொழியோ அப்பாவி ஈழத்தமிழர்களை முள்ளிவாய்க்கால் அழிவில் இருந்து பாதுகாப்பதற்கு வேண்டிய பேச்சுவார்த்தை முயற்சி நடவடிக்கைகளை உண்மையில் எடுக்க முயலவில்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட, கே.பி, அவர்கள் முயன்றார்கள் என்று கூறியபின்பாவது இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய அவர்கள் முயற்சிக்கலாம் அல்லவா? அதுதான் இராஜதந்திரம். அதுதான் கே.பியின் எண்ணமாகவும் இருந்திருக்கலாம் அல்லவா? தமிழ் மக்களின் வழமான எதிர்காலத்திற்கு இந்தியாவுடன் அல்லது இலங்கை அரசுடன் நட்பு பாராட்டி காரியங்கள் ஆற்ற முயல்வது ஒன்று தான் ஒரே வழியாக இன்று இருக்கும் நிலையில், அவ்வகையில் முயன்று நன்மை அடைவதில் என்ன தவறு?
நாங்கள் தான் விடுதலைப்புலிகளின் உண்மையான வால்கள் என வேடம்போட்டு பினாமிகளாகி வெளிநாடுகளில் போராட்ட நிதி என தமிழர்களை சுறண்டி சேர்த்த பணங்களில் வயிறு வளர்க்கவும் அதில் சிலர் கோடீஸ்வரர்கள் ஆகவும் காரணமாக இருந்ததும் விடுதலைப்புலிகளின் தலைமையுடன் இருந்த நட்புதான், அப்படித்தான் இதுவும் என எடுத்துக்கொள்ளுங்கள். தமிழர்களை வெறுக்கும் கோட்டபாய, கே.பி நட்பு பற்றி கொச்சைப்படுத்தியும் அதில் புலம்பி எழுதப்பட். தான் வணங்கும், அன்பினை தெய்வமாக போதித்த கௌதம புத்தரை வழிபடுபவர்தான் கே.பியின் மனைவி என்பதற்காகவும், இந்துமதத்தை சார்ந்த கே.பி தனது மனைவியின் மதத்திற்கு கொடுக்கும் மதிப்பின் காரணமாக கே.பியின் மீது கோட்டபாய நம்பிக்கை வைக்க காரணம் இருந்திருக்கலாம். அல்லது போர்க்குற்றங்களுக்காக மற்றய நாடுகளில் இருந்து கிடைக்கும் அழுத்தங்கள் காரணமாக கே.பியை பண்புடன் நடத்த வேண்டிய காலத்தின் கட்டாயமாகவும் இருக்கலாம். எது எப்படி இருப்பினும் யார் இடித்தும் அரிசியானால் சரி என்பதே இலங்கை தமிழர்களின் இன்றய நிலை என்பதை உணர்ந்து வாய் பொத்துவதே தகும்.
யாழ்ப்பாணத்தில் கந்தரோடை என்ற இடத்தில் அமைந்துள்ள புத்தவிகாரை பற்றி  ும்மொழி அறிவிப்பு பலகை காட்டும் படமே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்கள் சிங்கள பௌத்தமத மயமாக்கப்படுவதன் அறிகுறிகளாக நாம் அதனை எடுத்து கொண்டாலும் நிலைமையை இனி எம்மால் இலகுவாக மாற்றிவிட முடியுமா? அதற்கு முதலில் நட்பும் புரிந்துணர்வும் இரு இனங்களுக்கிடையிலும் மீண்டும் உதயமாக வேண்டும். இந்நிலைமை எமது மண்ணில் இன்று உருவானதற்கு காரணம் யார்? நாம் தான்.
எமது பாழ்பட்ட ஆயுத விடுதலைப்போராட்ட யுத்த தந்திரர்கள் எடுத்த நடவடிக்கைகளின் பதில் விளைவுதான். இந்நிலை எமக்கு வரக்கூடும் என அன்று நாம் எண்ணிப்பார்த்தோமா? இல்லை. இந்நிலமைகளுக்கு தனிப்பட்ட முறையில் பரம்ஜி எந்த வகையிலும் காரணமில்லாவிட்டாலும், நாம் என்று தன்னையும் சேர்த்து சொல்லிக்கொள்வதன் அர்த்தம் ஈழத்தமிழர்களாக பிறந்த நாம் அனைவரும் பழியை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதால்தான்.
 (பரம்ஜி ஞானாஸ்வரன்)

கருத்துகள் இல்லை: