ஞாயிறு, 21 நவம்பர், 2010

TNA தலைவர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்று அவர்களோடு இணைந்து

வாழ்த்துடன் நின்றுவிடக் கூடாது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் தனது இரண்டாவது பதவிக் காலத்தை ஆரம்பித்திருக்கின் றார். இலங்கையிலும் வெளிநாடுகளிலிருந்தும் பலர் ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அரசியல் தலைவர்கள், மதத் தலைவர் கள், சமூகத் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரு மான இரா. சம்பந்தனும் இவர்களுள் ஒருவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்துத் தெரிவித்திருப்பது ஒரு நல்ல திருப்புமுனையின் ஆரம்பமாக உள்ளது. விசேடமாக இனப் பிரச்சினையின் தீர்வைப் பொறுத்த வரையில் நம்பிக்கையூட்டும் ஆரம்பமாக உள்ளது.
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இது பொருத்தமான காலகட்டம். புலிகள் இயக்கம் வடக்கிலும் கிழக்கிலும் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம் அரசியல் தீர்வுக்குச் சாதகமானதாக இருக்கவில்லை. நடைமுறையில் ஒருபோதும் சாத்தியம் இல்லாத தனிநாட்டுக் கொள்கையின் கீழ் செயற்பட்ட புலிகள் அரசியல் தீர்வுக்கான சாத்தியக் கூறுகளைத் திட்டமிட்டு அழித்து வந்தனர். அரசியல் தீர்வுக்குப் பங்களிப்புச் செய்யத் தயாராக இருந்த தமிழ்த் தலைவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கொலை செய்தனர். அவர்களின் இந்த அணுகுமுறை பலனளித்தது. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுகின்ற தலைவர்கள் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்று அவர்களோடு இணைந்து செயற்பட முன்வந்தார்கள். தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எடுத்த இந்த முடிவு தமிழினத்தின் பேரழிவுக்கு அடிகோலுவதாக இருந்தது. அண்மையில் ஏற்பட்ட உயிரிழப்புகள், அழிவுகள், இடம்பெயர்தல்கள் அனைத்துக்கும் இந்த முடிவு பிரதான காரணமாகியது.
இன்று புலிகளின் அச்சுறுத்தல் இல்லை. இனப் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு காண்பதற்காகத் தமிழ்த் தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இப்போது தடை இருக்காது. கடந்த காலங்க ளில் தீர்வு முயற்சிகள் பலனளிக்காது போனதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து சரியான பாதையில் தீர்வு முயற்சியை முன்னெடுப்பதற்குக் கடமைப்பட்டவர்களாகத் தமிழ்த் தலைவர்கள் உள்ளனர்.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்துக்கு வாழ்த்துத் தெரிவிப்பதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நின்றுவிடக் கூடாது. வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையையும் பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தையும் அதிகாரங்கள் போதுமானவையல்ல எனக் கூறி நிராகரித்ததன் விளைவாக, அவற்றிலும் பார்க்கக் குறைவான தீர்விலிருந்தே தீர்வு முயற்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கு நாம் வந்திருப்பதைப் படிப்பினையாகக் கொண்டு அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும். கூட்டமைப்பின் வாழ்த்துச் செய்தி இவ்வாறான பேச்சுவார்த்தைக் கான ஆரம்பமாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திப்போம்.
(வாகுலன்)

கருத்துகள் இல்லை: