ஞாயிறு, 21 நவம்பர், 2010

14,300 கிராமங்கள் அபிவிருத்தி அநுராதபுரத்தில் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைப்பு

இலங்கையின் சகல மாவட்டங்களிலு முள்ள 14,300 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் அரசின் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அநுராதபுரத்தில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்றதன் பின்னர் நேற்று அனுராதபுரம் ஸ்ரீமஹா போதிக்கு விஜயம் செய்து வழிபாட்டில் கலந்துகொண்டார்.
கிராமங்களை இலக்காகக் கொண்ட அபிவிருத்தி திட்டம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதை குறிப்பிடும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக்காலை 9.15 சுப வேளையில் வெண்சந்தன மரக்கன்றொன்றை நட்டு வைத்தார். கிராம அபிவிருத்தி திட்டம் அநுராதபுரத்திலிருந்து ஆரம்பமாகிறது.
இந்நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி அதிவணக்கத்துக்குரிய பள்ளேகம ஸ்ரீநிவாச தேரரை சந்தித்து எதிர்கால நடவடிக்கை களுக்கென ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
ருவான்வெலிசாயவுக்கு சென்ற ஜனாதிபதி துட்டகைமுனு மற்றும் விஹாரமகாதேவி ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, வட மத்திய மாகாண முதலமைச்சர் பர்டி பிரேமலால் திஸாநாயக்க, அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, பிரதியமைச்சர்களான மேர்வின் சில்வா, எஸ். எம். சந்திரசேன, துமிந்த திஸாநாயக்க மற்றும் காமினி செனரத், சஜின் வாஸ் குணவர்தன எம்.பி. உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இரண்டாவது தடவையாக பதவியேற்றதன் பின்னர் நேற்று முன்தினம் ஜனாதிபதி கண்டி அஸ்கிரிய மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை: