ஞாயிறு, 28 நவம்பர், 2010

திமுக காங்கிரஸ் கூட்டணியை துண்டிப்பவர்களுக்கே நஷ்டம்: கலைஞர்


திமுக காங்கிரஸ் கூட்டணியை துண்டிக்க நினைத்தால், துண்டிப்பவர்களுக்குத்தான் நஷ்டம் என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கலந்து கொண்டார். அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட திமுக முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, திராவிடர் என்ற இனம் கிடையாது என்று சொல்லப்பட்ட காலம் இருந்தது. ஆனால் இன்று புதியக் கட்சி தொடங்கினாலும் திராவிட என்ற வார்த்தையை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் நாங்கள் விலக்காமலேயே விலகி சென்றுள்ளன. என்ன குற்றம் செய்தோம் என்பதற்கான காரணத்தைக்கூட சொல்லாமல் ஏன் ஒதுக்கினீர்கள்.

போக்குவரத்துக் கழக தொழிற்சங்க தேர்தலில் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டும் திமுகவைச் சேர்ந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அமோக வெற்றி அடைந்துள்ளது. இன்றைக்கு மத்திய அரசு மாநில அரசுக்கும், மாநில அரசு மத்திய அரசுக்கும் உறுதுணையாக இருக்கிறது. அதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஏதேதோ பேசுகிறார்கள்.

இங்கு இருக்கும் சில விஷமிகள் திமுக காங்கிரஸ் உறவை துண்டிக்க நினைக்கிறார்கள். அப்படி செய்தால் துண்டிப்பவர்களுக்குத்தான் நஷ்டம்.
நம்முடைய இரு சக்திகளும் மதவாத சக்திகளை எதிர்த்து நிற்கின்ற சக்திகள். காங்கிரசாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் மதவாதத்தை இந்தியாவிலோ, தமிழகத்திலோ நுழைவதற்கு அனுமதிக்காதவர்கள். நமக்குள்ளே ஒரு பிளவை ஏற்படுத்தினால் மதவாதம் சுலபமாக உள்ளே நுழைய முடியும் என்று, மதவாதத்தினால் மகிழ்ச்சி அடைந்து கட்டிப் புரண்டு கொண்டிருப்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பொன்னான சந்தர்ப்பமாக கருதி உள்ளே நுழைந்துவிடுவார்கள்.

ஸ்பெக்டரம் பிரச்சனையை முன்வைத்து நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் குழப்பம் விளைவிக்கிறார்கள். நாடாளுமன்றம் பேசுவதற்கான இடம். கூச்சம் போடும் அவை அல்ல. ஆ.ராசா மீது கூறப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் விவகாரம் இத்தனை பெரியதாவதற்கு என்ன காரணம். அவர் ஒரு தலித் என்பதால்தான்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வாய்தா மேல் வாய்தா வாங்கப்பட்டு வரும் இந்த வழக்கை ஏன் பத்திரிகைகள் பார்க்கக் கூடாது என்றார்.

கருத்துகள் இல்லை: