மின்னம்பலம் - மதி :ஜாதி ஆணவ கொலை தடுப்புச் சட்டம் நிறைவேற்றும் திமுக அரசு- ஆகஸ்ட் 14 அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?
தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் சிறப்பு சட்டத்தை (Law Against Caste Honour Killings) ஆளும் திமுக அரசு நிறைவேற்ற இருப்பதாகவும் ஆகஸ்ட் 14-ந் தேதி நடைபெறும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகள் காலந்தோறும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஜாதிய ஆணவப் படுகொலையும் தமிழ்நாட்டை உலுக்கும் போதெல்லாம், இதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இல்லையே என்கிற குமுறல் வெளிப்படுகிறது.
ஆனாலும் இந்த ஜாதி ஆணவப் படுகொலைகள் தற்போது நெல்லை கவின் வரை நீண்டிருக்கிறது. இந்த முறை முன்னெப்போதும் இல்லாததை விட, ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் தேவை என்ற குரல் வலிமையாக ஒலிக்கிறது.
நமது மின்னம்பலத்தில் “ஜாதி ஆணவப் படுகொலை என்ற சமூகப் பேரவலத்தைத் தடுப்பது எப்படி?” என்ற கட்டுரையில், “ஜாதி ஆணவக் கொலை நிகழ்ந்தால் ஆணவச் சமூகத்து காதலரின் குடும்பம் நிச்சயம் தண்டிக்கப்படும், கடும் அபராதங்களை, சிறை தண்டனையை சந்திக்க வேண்டி வரும் என்ற நிலை ஏற்பட்டால்தான் அவர்கள் காதலர்களை கொல்லத் தயங்குவார்கள். தனிச்சட்டம் என்பது வழக்கு விசாரணையிலிருந்து, நீதிமன்ற விசாரணை, தண்டனை ஆகிய அனைத்திற்கும் தனிப்பட்ட நெறிமுறைகளை வகுக்கக் கூடியது என்பதால் இந்த தீவிரமான சமூகக் குற்றத்திற்கு தனிச்சட்டம் வகுப்பது அவசியம்தான் எனலாம்” என டெல்லி அம்பேத்கர் பல்கலைக் கழக பேராசிரியர் ராஜன் குறை எழுதி இருந்தார்.
ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல.. ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரிகள், மதிமுகவும் வலியுறுத்துகின்றன.
ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தலைமையில் சென்னையில் ஆகஸ்ட் 9-ந் தேதி போராட்டம் நடைபெற உள்ளது; ஆகஸ்ட் 11-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விசிகவின் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஆகஸ்ட் 14-ந் தேதி நடைபெறும் என்றும் அந்தக் கூட்டத்தில் ஜாதி ஆணவப் படுகொலையை தடுக்கும் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படக் கூடும் என்றும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக