வெள்ளி, 8 மார்ச், 2024

திமுக மதிமுக, விசிக உடன் இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட வாய்ப்பு

மாலை மலர் :திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
விடுதலை சிறுத்தைகளை கட்சி கடந்த முறை திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் நின்றன. தற்போது மூன்று தொகுதிகள் கேட்கிறது. இரண்டு தனித்தொகுதி மற்றும் ஒரு பொதுத்தொகுதி கேட்கிறது. ஆனால் திமுக சார்பில் இரண்டு தனித்தொகுதியை வழங்க தயாராக இருக்கிறது.ஆனால் மூன்று தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது விசிக. இதனால் இன்னும் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. பொதுத்தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கூட போட்டியிட தயார் என விசிக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிமுக ஒரு தொகுதியுடன் ஒரு மாநிலங்களவை இடங்களையும் சேர்த்து கேட்கிறது. மேலும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாமல் உள்ளது. பம்பரம் சின்னம் தொடர்பாக மதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

திமுக விருப்ப மனு பெற்று வருகிற 10-ந்தேதியில் இருந்து நேர்காணல் நடத்த இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையாததால் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள திமுக குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே முன்னதாக ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் இன்று மதிமுக மற்றும் விசக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி உடனும் இன்னும் ஒரிரு நாட்களில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: