வியாழன், 7 மார்ச், 2024

பெங்களூர்.. குடிக்க கூட தண்ணீர் இல்லை..! நாளை சென்னைக்கு கூட இதே நிலை ஏற்படலாம்!

tamil.oneindia.com -Vigneshkumar : பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தில் இருக்கிறது.. பல இடங்களில் குளிக்கக் கூட நீர் இருப்பதில்லையாம். சில இடங்களில் குடிக்கவும் போதிய நீர் கிடைப்பதில்லை என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்
கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள பல ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு கிடப்பதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூரில் பல பகுதிகளில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்குக் கூட தண்ணீர் டேங்கர்களை நம்பியிருக்கிறார்கள்,
Bangalore water problem is the alert for Chennai as summer is starting in couple of weeks
ஆனால், இப்போது தண்ணீருக்கு அதீத தேவை இருப்பதால் தண்ணீர் டேங்க்கள் இப்போது அதிக தொகையை வசூலிக்கின்றன.தண்ணீர் எடுக்க நீண்ட வரிசை: ​​தண்ணீர் எடுக்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டி உள்ளதாக ஆர்.ஆர்.நகர் பகுதி மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மேலும் கூறுகையில், "ஆர்.ஆர்.நகரில் உள்ள பட்டணகெரே முழுவதும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது.. இது தொடர்பாக எந்தவொரு அரசியல்வாதியும் எங்களிடம் வந்து பேசவில்லை.. தண்ணீர் பிடிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அப்போதும் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட குடங்களில் நீரைப் பிடிக்க சென்றால் அதிகாரிகள் அனுமதிப்பதே இல்லை.

குழந்தைகளை நம்முடன் கூட இருக்க அனுமதிப்பதில்லை.. குழந்தைகளைத் தண்ணீர் பிடிக்க நிற்க வைத்தால் எதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இதனால் இங்கே உள்ள பல குடும்பங்களுக்குத் தினசரி தேவையான நீர் கிடைப்பதில்லை. தண்ணீரை அட்ஜஸ்ட் செய்தே பயன்படுத்த வேண்டி இருக்கிறது" என்கிறார்கள்.

பொதுமக்கள் ஷாக்: இங்கு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் அதே நிலை தானாம். இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அப்பகுதி மக்கள் மேலும் கூறுகையில், "எனக்கு 71 வயதாகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் நான் வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது.. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு தண்ணீர் எடுத்துவிட்டு வீட்டுக்குப் போக வேண்டி இருக்கிறது" என்கிறார்.

இது தொடர்பாக பட்டணகெரேவைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், "எங்களிடம் குளிப்பதற்கும் தண்ணீர் இல்லை குடிப்பதற்கும் மிகக் குறைவாகவே தண்ணீர் இருக்கிறது. எங்கள் ஐந்து பேருக்கும் ஒரு பானை தண்ணீர் இருக்கிறது. இது எப்படி பத்தும்.. ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. சமையலுக்கு, மாநகராட்சி தண்ணீரைப் பயன்படுத்துகிறோம், தண்ணீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து நிலைமையைச் சமாளித்து வருகிறோம்.

தண்ணீர் பஞ்சம்: இந்த தண்ணீர் சிக்கல் இப்போது திடீரென வந்துவிடவில்லை. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகத் தண்ணீர் பஞ்சம் இருந்து வந்தது. இப்போது அதைக் கையை மீறிச் சென்றுவிட்டது. கடந்த 3 மாதங்களில் எதாவது நடவடிக்கையை எடுத்திருந்தால் நிலைமையைச் சமாளித்து இருக்கலாம். இப்போது குடிக்கக் கூட தண்ணீர் போதியளவில் கிடைக்காமல் தள்ளாட வேண்டி இருக்கிறது" என்கிறார்.

1,680 மில்லியன் லிட்டர் பஞ்சம்! பெங்களூரில் முதல்வர் சித்தராமையா வீட்டிலேயே தண்ணீர் இல்லை.. கொடுமை1,680 மில்லியன் லிட்டர் பஞ்சம்! பெங்களூரில் முதல்வர் சித்தராமையா வீட்டிலேயே தண்ணீர் இல்லை.. கொடுமை

வழக்கமான தண்ணீர் டேங்கர்கள் ஒரு முறைக்கு ரூ.600 முதல் ரூ.1000 வசூலிக்கும் நிலையில், இப்போது தண்ணீருக்குப் பற்றாக்குறை நிலவுவதைப் பயன்படுத்தி 2000 ரூபாய் வரை கூட இப்போது கட்டணமாக வசூலிக்கிறார்களாம். அரசு இந்த தண்ணீர் டேங்கர்கள் விலையையாவது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்.

இன்னும் கோடைக் காலம் கூட ஆரம்பிக்காத நிலையில், பெங்களூரில் ஏற்பட்டுள்ள இந்த தண்ணீர் பஞ்சம் பலருக்கும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. அதேநேரம் பெங்களூரில் இப்படி ஏற்பட்டுள்ளது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகவே இருக்கிறது. உரிய நடவடிக்கை இல்லை என்றால் இன்று பெங்களூருக்கு ஏற்பட்ட நிலை, மிக விரைவில் சென்னைக்குக் கூட ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: