மின்னம்பலம் -Selvam : திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு!
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதி இன்று (மார்ச் 8) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு தலா 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தநிலையில், காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வந்தது.
மதிமுகவை பொறுத்தவரை ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை என இரண்டு இடங்களை ஒதுக்கக் கோரி திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்தனர். அதேநேரத்தில், தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்பதிலும் உறுதியாக இருந்தனர்.
இந்தநிலையில், தாயகத்தில் நேற்று (மார்ச் 7) மதிமுக அவசர செயற்குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூட்டினார்.
இந்த கூட்டத்தின்போது, தனிச்சின்னம் தொடர்பாக திமுக தலைமையிடம் இருந்து வைகோவுக்கு சாதகமான பதில் வந்திருப்பதால், ஒரு மக்களவை சீட்டுக்கு வைகோ ஒப்புக்கொண்டதாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நாம் நேற்று (மார்ச் 7) செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணி பங்கீடு தொடர்பான கையெழுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
“நாடாளுமன்ற தேர்தல் குறித்த தொகுதி உடன்பாடு தொடர்பாக திமுக – மதிமுக கலந்து பேசியதில், திமுக கூட்டணியில் மதிமுக ஒரு தொகுதியில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது. தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” என்று தெரிவித்தார்.
ராஜ்யசா சீட் கொடுப்பதற்கு திமுக வாக்குறுதி அளித்ததா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைகோ,
“ராஜ்யசபா சீட் குறித்து எதுவும் பேசவில்லை. கடந்தமுறை ஒரு மாத இடைவெளியில் ராஜ்ய சபா தேர்தல் வந்தது. தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கிறது. தேர்தல் வரும்போது திமுக தலைமையுடன் பேசுவோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக