ஞாயிறு, 12 நவம்பர், 2023

தலைக்கேறிய கஞ்சா போதை.. தந்தையை கொன்று வெறிதீர்த்த மகன்..

 tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங் : சென்னை: தனது அடாவடித்தனங்களை தட்டிக் கேட்ட தந்தையை கஞ்சா போதையில் ஓட ஓட விரட்டி குத்திக் கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.
போதை தெளிந்ததும் அவன் கேட்ட கேள்வியால் போலீஸாரே அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு மனிதனை எந்த அளவுக்கு தன்னிலை மறக்கச் செய்கிறது என்பதையும், அது ஒரு பெரிய குற்றங்களுக்கு எப்படி காரணமாக இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே எடுத்துக்காட்டாக உள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கொலை, வழிப்பறி, பலாத்காரம் போன்ற குற்றச்சம்பவங்களும் பெருகி வருகின்றன. கஞ்சா போதையில் போலீஸ் எஸ்ஐயை துரத்தி துரத்தி சிறுவர்கள் தாக்கிய சம்பவமும், போலீஸ் ஏட்டை அரிவாளால் கஞ்சா இளைஞர்கள் விரட்டிய சம்பவமும் தமிழகத்தையே அதிர வைத்தன.
இதுதவிர, நாள்தோறும் கஞ்சா போதையால் குடும்பங்களில் நிகழும் குற்றச்சம்பவங்களும் நம்மை குலைநடுங்க வைக்கின்றன.

அப்படியொரு சம்பவம்தான் சென்னையில் நடந்திருக்கிறது. சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி தாஸ் (60). காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது மூத்த மகன் வீட்டிற்கு மனைவியுடன் அந்தோணி தாஸ் சென்றுள்ளார். அன்று இரவு, அவரது இளைய மகன் வினோத் என்பவர் அங்கு வந்திருக்கிறார். அவர் கஞ்சா போதையில் இருந்திருக்கிறார்.

அப்போது வினோத் அடிக்கடி அக்கம்பக்கத்தினரிடம் தகராறில் ஈடுபடுவது குறித்து அவரது தந்தை அந்தோணி தாஸ் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், வினோத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விரட்டி விரட்டி அந்தோணி தாஸை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அந்தோணி தாஸ் இறந்திருக்கிறார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார், தப்பியோடிய வினோத்தை கைது செய்துள்ளனர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர் கஞ்சா போதையில் தூங்கியுள்ளார். பின்னர் போதை தெளிந்து எழுந்து பார்த்த வினோத், "இன்னுமா என்னை ஜாமீனில் எடுக்க எங்க அப்பா வரல" என்று கேட்டுள்ளார். இதை கேட்ட போலீஸாரே சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கஞ்சா போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: