வெள்ளி, 17 நவம்பர், 2023

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: 22 மீட்டர் வரை துளையிட்ட மீட்பு படையினர்

தினமணி : அதிக திறன்வாய்ந்த 24 டன் எடை கொண்ட இயந்திரத்தின் மூலம் மீட்பு படையினர் இரவு முழுவதும் துளையிட்டதில் வெள்ளிக்கிழமை காலையில் 22 மீட்டர் வரை துளையிடப்பட்டது.
800 மி.மீ மற்றும் 900 மி.மீ விட்டம் கொண்ட குழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே செலுத்தி, அதன் வழியாக தொழிலாளர்களை மீட்பதற்கு 60 மீட்டர் வரை துளையிட வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அன்ஷு மனீஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீட்பு படையினர் அதிக சக்திவாய்ந்த இயந்திரத்தின் மூலம் இரவு முழுவதும் துளையிட்டதில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 22 மீட்டர் வரை துளையிட்டுள்ளதாகவும், இன்னும் 38 மீட்டர் வரையில் துளையிட வேண்டும் என மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.சுரங்கப்பாதையினுள் சிக்கிக் கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன், நீர், உணவு, மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உத்தரகாசி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் கூறினார். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க: நள்ளிரவில் இடிந்து விழுந்த நரிக்குறவர் சமுதாயத்தினருக்கான தொகுப்பு வீடு: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்தப்பினர்
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 40 தொழிலாளா்கள் சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கிக் கொண்டனா்.

அவா்களை மீட்கும் முயற்சியில் ஆறாவது நாளாக மத்திய, மாநில அரசுகளின் பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: