BBC News தமிழ் : உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சுரங்கப்பாதை இடிந்ததில் அங்கே பணிபுரிந்த 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி 40 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) அதிகாலை இந்தச் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா - தண்டல்கான் கிராமங்களை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு வெளியில் இருந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுடன் இன்னும் தொடர்பு ஏற்படவில்லை.
உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து
"அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்"
இந்த சுரங்கப்பாதையின் பொறுப்பை, 'என்எச்ஐடிசிஎல்' என்ற நிறுவனத்திடம், மத்திய அரசு வழங்கியது. அதே நேரத்தில், அதன் கட்டுமானப் பணியின் பொறுப்பு நவ்யுக் என்ற நிறுவனத்திடம் இருந்தது.
என்.எச்.ஐ.டி.சி.எல். (NHIDCL) நிர்வாக இயக்குனர் கர்னல் (ஓய்வு) சந்தீப் சுதேரா கூறுகையில், “சுரங்கப்பாதைக்குள் இருந்து 21 மீட்டர் குப்பைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 19 மீட்டர் குப்பைகள் எஞ்சியுள்ளன." என்றார்.
அவர் கூறுகையில், “சில்க்யாரா பொட்டலுக்குள் (பொட்டல் அதாவது சுரங்கப்பாதையின் முகப்பு) சுமார் 205 மீட்டரிலிருந்து சுமார் 245 மீட்டர் வரை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை பாதுகாப்பானது மற்றும் 245 மீட்டருக்கு அப்பால் காலியாக உள்ளது, சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்." என்று தெரிவித்தார்.
சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் எங்கிருந்து வந்தவர்கள்?
சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளிகளில் ஒருவர் மட்டும் உத்தராகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
மீதமுள்ளவர்கள் பீகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜே.சி.பி மற்றும் பிற இயந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து
சுரங்கப்பாதையில் சிக்கியவர்களைக் காப்பாற்ற 13மீ அகல பாதையில் ஜே.சி.பி, பொக்லேன் இயந்திரங்கள் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன
40 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மீட்புப் பணிகள்
ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய உத்தர்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி, "ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் சில்க்யாரா முகப்பில் இருந்து 230 மீட்டர் உள்பகுதியில் சுரங்கப்பாதை இடியத் தொடங்கியது. சுரங்கப்பாதையில் 30 முதல் 35 மீட்டர் அளவுக்கு இடிந்து உள்ளேயே விழுந்துவிட்டது. இதனால், உள்ளே பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்களால் வெளியே வர முடியவில்லை. உள்ளே ஆக்சிஜன் சப்ளையும் தடைபட்டுவிட்டது" என்று கூறினார்.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை விரைவில் பத்திரமாக வெளியேற்றுவதே தங்களது முதற் குறிக்கோள் என்று அவர் தெரிவித்தார்.
இதற்காக 24 மணி நேரமும் போலீஸ் படை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். மீட்புப் புதுப்பிப்புகள் மற்றும் உதவிக்காக உத்தரகாசி காவல்துறை +917455991223 என்ற உதவி எண்ணையும் வழங்கியுள்ளது.
உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு பத்து மணி நேரத்திற்குப் போதுமான ஆக்ஸிஜன் இருப்பதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி தேவேந்திர பட்வால் தெரிவித்தார்
விபத்து எப்படி நடந்தது?
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக,உத்தராகண்ட் மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஏபி அன்ஷுமன் கூறினார்.
சுரங்கப்பாதையின் சில்க்யாராவை நோக்கிய முகப்பில் இருந்து சுமார் 200மீ தொலைவில் மண் சரிவு ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இந்த விபத்து நேரிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது தொழிலாளர்கள் வாயிலுக்குள் சுமார் 3 கி.மீ. தொலைவில் இருந்ததாக அவர் கூறினார்.
தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடத்தில் 400 மீட்டர் அளவுக்கு அவர்களால் நடமாட முடியும் என்றும், 10 மணி நேரத்திற்கான ஆக்சிஜன் இருப்பு இருப்பதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி தேவேந்திர பட்வால் கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுரங்கப்பாதையில் சிக்கியவர்களைக் காப்பாற்ற 13 மீ அகல பாதையில் ஜே.சி.பி, பொக்லேன் இயந்திரங்கள் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.
விபத்துக்குப் பிறகு உத்தரகாசியில் நடந்த சம்பவம் குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தகவல் கேட்டறிந்தார். சிக்கியவர்களை மீட்க அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் தாமிக்கு அவர் உறுதியளித்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தாமி கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “நான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். விபத்து குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநில, மத்திய பேரிடர் நிவாரணக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. அனைவரும் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்தனை செய்கிறேன்,” என்றார்.
சுரங்கப்பாதை திட்டம்
‘ஆல் வெதர்’ சாலை திட்டத்தின் கீழ் உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் நவ்யுக் இன்ஜினியரிங் நிறுவனம் இந்தச் சுரங்கப்பாதையை கட்டி வருகிறது.
இந்தச் சுரங்கப்பாதை தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக