தி இந்து : கலைஞர் கருணாநிதி கைவிட நிர்ப்பந்தித்த எதிர்ப்பு
(‘நாம் 200’ நிகழ்வில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் காணொளிச் செய்தி ஔிபரப்பப்படாததை அடுத்து மூண்ட சர்ச்சையின் பின்புலத்தில் ஒரு பார்வை)
இலங்கைத் தீவுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் வருகைதந்து 200 வருடங்கள் நிறைவுபெறுவதை நினைவுகூருமுகமாக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ நாம் 200’ நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செய்தி பதிவுசெய்யப்பட்ட காணொளி ஔிபரப்பப்படாதமை குறித்து இம்மாத ஆரம்பத்தில் சர்ச்சை ஒன்று மூண்டது.
அந்த நிகழ்வில் இறுதி நேரத்திலேயே ஸ்டாலினின் செய்தி சேர்க்கப்பட்டதை இந்திய அரசாங்கம் ஆட்சேபித்ததன் காரணத்தினாலேயே அது ஔிபரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.
வரலாற்று ரீதியாக எப்போதுமே தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் இலங்கையுடனான அவர்களின் உறவுகளைப் பொறுத்தவரை மிகவும் எச்சரிக்கையான பாதையிலேயே நடக்கவேண்டியிருந்திக்கிறது.
கலாசார சுற்றுலா
தமிழ்நாட்டு முதலமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு திட்டமிட்டு பிறகு அதை ரத்துச் செய்த சம்பவத்தை நினைவுபடுத்துவது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாக இருக்கும்.
1969ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி சென்னைக்கு வருகைதந்திருந்த இலங்கை பத்திரிகையாளர் குழுவொன்றிடம் இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புக்களிடம் இருந்து கிடைக்கப்பபெற்ற அழைப்பை அடுத்து கலாசாரச் சுற்றுலா ஒன்றை 1970 ஜனவரியில் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.
அந்த விஜயத்துக்கு இலங்கை அரசியல் கட்சிகள் சிலவற்றிடமிருந்தும் பௌத்த தலைவர்களிடம் இருந்தும் உடனடியாகவே எதிர்ப்பு கிளம்பியது. கலைஞர் கருணாநிதியின் விஜயம் இலங்கையில் அரசியல் நிலைவரத்தை சிக்கலாக்கும் என்றும் அந்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பொதுத்தேர்தலை பாதிக்கும் என்று விசனம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை பத்திரிகைகளில் இந்த விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்தது. அத்துடன் அது குறித்து பாராளுமன்றத்திலும் பிரச்சினை கிளப்பப்பட்டது.
அதையடுத்து தனது விஜயம் தேர்தலைப் பாதிக்கும் என்று இலங்கை அரசாங்கம் உணருவதாக இருந்தால் அதை ரத்துச்செய்வதாக கருணாநிதி கூறினார். அவரின் விஜயம் பிறகு இடம்பெறவேயில்லை.
இலங்கையில் அத்தகைய எதிர்ப்புக்கு முகங்கொடுத்த திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல் தலைவர் கலைஞர் அல்ல. இந்திய பெற்றோருக்கு இலங்கையில் பிறந்த நடிகரும் அரசியல்வாதியுமான எம்.ஜி. இராமச்சந்திரனும் 1965ஆம் ஆணடில் இலங்கையில் நடைபெற்ற அழகுராணிப் போட்டியில் நடுவராக கலந்துகொள்வதற்கு நடிகை பி. சரோஜாதேவியுடன் சேர்ந்து விஜயம் செய்வதற்கு முன்னதாக எதிர்ப்புக்கு முகங்கொடுக்கவேண்டியிருந்தது.
ஆனால் அவரின் விஜயத்துக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியது என்றாலும் கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டது.அந்த விஜயத்தின்போது எம்.ஜி.ஆருக்கு தமிழர்களிடம் இருந்து மகத்தான வரவேற்பு கிடைத்தது.
அண்ணாத்துரையின் தூதுவர்
திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பிறகு கழகத்தின் தலைவர்களில் ஒருவரான சி.பி.சிற்றரசு 1967 ஜூலையில் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பாதுகாப்பு அமைச்சினதும் இராஜநந்திர நடைமுறைகள் பிரிவின் அனுமதியை அவர் பெறாவிட்டால் அவரைச் சந்திக்கப்போவதில்லை என்று அன்றைய எதிர்க்கட்சி தலைவர் சிறிமா பண்டாரநாயக்க மறுத்துவிட்டார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் நோக்கங்கள் தொடர்பில் திருமதி பண்டாரநாயக்கவுக்கு இருந்திருக்கக்கூடிய தவறான அபிப்பிராயங்களை களையுமுகமாக சிற்றரசு தான் தமிழ்நாட்டு முதலமைச்சர் சி.என். அண்ணாத்துரையின் விசேட தூதுவராக வருகை தந்திருப்பதாக கூறிப்பார்த்தார்.
ஆனால், அந்த அம்மையாரோ இலங்கையில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் உள்நோக்கங்கள் குறித்து தனக்கு இருக்கும் அச்சத்தை ஒரு அண்ணாத்துரையினால் அல்ல பத்து அண்ணாத்துரையினாலும் கூட அகற்றமுடியாது என்று ஊடகங்களுக்கு கூறினார். தனது கருத்துக்களை இலங்கையில் உள்ள ஒவ்வொரு சிங்களவரும் ஏற்றுக்கொள்வார் என்பது நிச்சயம் என்றும் அவர் சொன்னார்.
திராவிட முன்னேற்ற கழகத்தைப் பற்றி சிங்களவர்களில் பெரும்பான்மையானோருக்கு இருக்கும் ஐயங்களே இந்த கடுமையான எதிர்ப்புக்கு காரணமாகும். இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்களுக்கு கழகம் மிகவும் உறுதியாக ஆதரித்தது. 1956 ஆம் ஆண்டு கழகத்தின் பொதுச்சபை கூட்டத்தில் தனிச்சிங்கள கொள்கையை கண்டித்து தீர்மானம் ஒன்றை கருணாநிதி கொண்டுவந்தார். மலையக தமிழர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்புவதற்கு 1964ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தையும் திராவிட முன்னேற்ற கழகம் எதிர்த்தது.
அந்த நேரத்தில் ‘திராவிட நாடு’ கோரிக்கையை திராவிட முன்னேற்ற கழகம் கைவிட்டிருந்தபோதிலும், அதை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் தமிழ்நாட்டுடன் இணைத்து திராவிட நாட்டை உருவாக்கும் இலட்சியத்தைக் கொண்ட ஒரு பிரிவனை வாதக் கட்சியாகவே பெரும்பான்மைச் சிங்களவர்கள் கருதினார்கள் என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும்.
திராவிடர் கழக தாபகர் ‘பெரியார்’ ஈ.வெ. ராமசாமியின் கோட்பாடுகளினால் கவரப்பட்ட இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் அந்த நேரத்தில் இயங்கியதும் சந்தேகங்களுக்கு முக்கிய காரணமாகும். அந்த இயக்கத்துக்கு மலையக தமிழரான ஏ. இளஞ்செழியன் தலைவராக இருந்தார். இலங்கையின் தமிழ்பகுதிகளில் பிரிவினைக்காக பிரசாரங்களை முன்னெடுக்கக்கூடும் என்ற அச்சத்தில் இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தை அரசாங்கம் தடைசெய்தது.
அந்த கழகம் மலையக தமிழர்கள் இலங்கை குடியுரிமையை பெறுவதற்காகவும் சாதி மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்புக்காகவும் பாடுபட்டது என்று அரசியல் ஆய்வாளரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான பெ. முத்துலிங்கம் தனது ‘எழுதாத வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்கள தங்களுக்கு என்று சொந்தத் தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவேண்டுமேயன்றி தமிழ்நாட்டு தலைவர்களில் தங்கியிருக்கக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டை இளஞ்செழியன் கொண்டிருந்தார். இருந்தாலும் இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டு திராவிட முன்னேற்ற கழகத்துடன் தொடர்பைக் கொண்ட ஒரு பிரிவினைவாத கட்சியாகவே நோக்கப்பட்டது என்றும் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார்.
உறுதிமொழிகள் பயன்தரவில்லை
தாங்கள் ஒன்றிணைந்து இயங்கவில்லை என்று திராவிட முன்னேற்ற கழகமும் இலங்கை திராவிட முன்னேற்ற கழகமும் அளித்த உறுதிமொழிகள் பயன்தரவில்லை.
இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான தனது திட்டத்தை அறிவித்த வேளையில் கூட கருணாநிதி உலகின் வேறு எந்தப் பாகத்திலும் உள்ள எந்தவொரு தமிழ் அமைப்புடனும் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்றும் தனது கழகம் இந்தியாவில் மாத்திரமே செயற்படுகிறது என்றும் கூறினார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் பதவிக்கு வந்தது இலங்கயினதும் இந்தியாவினதும் நலன்களுக்கு ஒரு ஆபத்து என்று பம்பாயிலும் டில்லியிலும் கல்கத்தாவிலும் சில பத்திரிகைகள் எழுதியது குறித்தும் கருணாநிதி கவலை வெளியிட்டார்.
அந்த நேரத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தைப் பற்றி நிலவிய அச்சங்களை இந்தியாவில் இருக்கும் தமிழர்களையும் இலங்கையில் இருக்கும் தமிழர்களையும் ஒன்றாகச் சேர்த்துப்பார்த்து எண்ணிக்கையில் தங்களை உலகில் மிகவும் சிறுபான்மையினராக சிங்களவர்கள் கருதியதன் பின்னணியிலேயே நோக்கவேண்டும் என்று தமிழ் சோசலிச ஜனநாயகக் கட்சியின் தலைவரான திருநாவுக்கரசு சிறீதரன் கூறினார்.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1978 டிசம்பரில் ஜப்பான் சுற்றுலாவுக்கு பிறகு இலங்கை வருவதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால், இலங்கையையும் தமிழ்நாட்டின் பல பகுதிகளையும் சூறாவளி தாக்கி பெரும் அழிவுகளை ஏற்படுத்தயதை அடுத்து இலங்கை வருகையை அவர் தவிர்க்கவேண்டி யதாயிற்று.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தபோது 1953 ஆம் ஆண்டில் காமராஜர் இலங்கைக்கு ஒரு தடவை விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொன். வசந்த், தி இந்து)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக