tamil.oneindia.com - Nantha Kumar R : சென்னை: உடல்நலக்குறைவால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சந்திக்க உள்ளதாகவும், அந்த சந்திப்பின் நோக்கம் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கியது.இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு விசாரணைக்கு அவரை அமலாக்கத்துறை அழைத்து சென்றது. இந்த வேளையில் நெஞ்சுவலி எனக்கூறியதால் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை மருத்துவமனையில் அனுமதித்ததோடு அவரை கைதும் செய்தது. அதன்பிறகு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜியின் இதயத்துக்கு செல்லும் ரத்தகுழாயில் 3 அடைப்பு இருந்ததால் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நல பிரச்சனையை காரணம் காட்டி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன. அதோடு தொடர்ந்து 10வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் 22ம் தேதி வரை அவர் புழல் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு இன்று மாலை அழைத்து வரப்பட்டார். மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸில் வந்திறங்கிய செந்தில் பாலாஜியை போலீசார் கைத்தாங்கலாக பிடித்து வீல்சேரில் அமர வைத்து அழைத்து சென்றனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் இதய பிரச்சனைக்கான எக்கோ உள்பட பிற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இன்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது முதல்வர் ஸ்டாலின் அவரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு கடந்த 6 மாதமாக சிறையில் இருக்கும் நிலையில் அவரை ஸ்டாலின் சந்திக்கவில்லை.
ஸ்டான்லி வேண்டாம்.. ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி! பின்னணி ஸ்டான்லி வேண்டாம்.. ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி! பின்னணி
இத்தகைய சூழலில் தான் இன்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ‛‛எதற்கும் கவலைப்படாதீர்கள். உங்களோடு எப்போதும் நானும், கட்சியும் உறுதுணையாக இருப்போம்'' என நம்பிக்கை அளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக