புதன், 16 நவம்பர், 2022

காலில் வடிந்த திரவம்! துடிதுடித்த மாணவி பிரியா.. நடந்தது என்ன ?

tamil.oneindia.com  -   shyamsundar :  சென்னை: சென்னையில் கால் அகற்றப்பட்ட மாணவி பிரியா மரணம் அடைந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை மாணவி பிரியாவின் கால்கள் அகற்றப்பட்டு அதன்பின் அவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது.
தமிழ்நாட்டிலா இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது என்று சொல்லும் அளவிற்கு மிக கொடூரமான சம்பவம் தலைநகர் சென்னையில் நடைபெற்று இருக்கிறது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மாணவி பிரியா. 17 வயதான இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
என்ன நடந்தது?
இவருக்கு காலில் ஏற்பட்ட சின்ன தசை பிடிப்புதான் அவரின் உயிரையே கொன்றுள்ளது. கால்பந்து வீராங்கனையான இவர் மாணவிகள் இடையே மிகவும் பிரபலம். இவர் கால் பந்து விளையாடும் போது இவருக்கு காலில் தசை பிடிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அவருக்கு சவ்வு விலகிவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

ஆபரேஷன்
இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சவ்வு பாதிப்பு சரி செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவருக்கு காலில் வலி இருந்துள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகரித்துள்ளது. இதையடுத்து மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் செய்யப்பட்ட சோதனையில், கால் அழுகியது கண்டுபிடிக்கப்பட்டது.

மரணம்
கால் அழுகிய நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மாணவி பிரியா பலியானார். இந்த வழக்கில் இரண்டு மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதுதான் மரணத்திற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சோமசுந்தரம், பால் ராம் சங்கர் என்ற இரண்டு மருத்துவர்கள் தவறாக செயல்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் செய்த தவறுதான் இந்த மரணத்திற்கு காரணம். இவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

சஸ்பெண்ட்
அதோடு இவர்கள் இருவர் மீது விசாரணையும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவர்களின் வீட்டிற்கு சென்று சஸ்பெண்ட் கடிதத்தை கொடுக்க முயன்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு பேருமே வீட்டில் இல்லை. இரண்டு பேருமே வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு தப்பித்துவிட்டனர். இவர்கள் எங்கேயோ தலைமறைவாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மரணம் கொடூரம்
பிரியா கடைசி நாட்களில் மிகவும் கஷ்டப்பட்டு மரணம் அடைந்து இருக்கிறார். உயிரே போகும் அளவிற்கு அவருக்கு காலில் வலி ஏற்பட்டுள்ளது.சவ்வில் இருந்து திசுக்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளன. இதனால் காலை உடனே அகற்ற வேண்டும். இல்லையென்றால் மற்ற பாகங்களுக்கு பாதிப்பு பரவும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் கால்களை அகற்றிய பின்பு அவரின் காலில் இறுக்கமான கட்டு ஏற்பட்டு உள்ளது. இதில் ஒரு வகையான திரவம் கசிந்து, அந்த திரவம் ரத்தத்தில் கலந்து உறுப்புகள் செயல் இழந்து உள்ளன. கிட்னி, இதயம், கல்லீரல் செயல் இழந்த நிலையில் பிரியா துடிதுடிக்க பலியானார்.
 

கருத்துகள் இல்லை: