செவ்வாய், 15 நவம்பர், 2022

தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் காலமானார் – ஒரு அரசியல் ஆளுமையின் இழப்பு!

May be an image of 5 people and people standing

thesamnet.co.u: தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் காலமானார் – ஒரு அரசியல் ஆளுமையின் இழப்பு!
 த ஜெயபாலன்
காண்டீபன் அமிர்தலிங்கம் இன்று காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர். தமிழரசுக் கட்சி தமிழ் காங்கிரஸ்சோடு சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் தலைவராகி எதிர்க்கட்சித் தலைவருமானவர் இவருடைய தந்தையார் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இலங்கைத் தமிழர்களிடையே அரசியல் குடும்பமாக மிகவும் அறியப்பட்டது அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி குடும்பத்தினர். இவர்களுடைய மூத்தமகனே காண்டீபன் அமிர்தலிங்கம். இவருடைய இளைய சகோதரர் பகீரதன் அமிர்தலிங்கம் மருத்துவர் லண்டனில் வாழ்கின்றார். இந்த அரசியல் குடும்பத்தில் இறுதியாக எம்மத்தியில் வாழ்பவர் இவர் மட்டுமே.


காண்டீபன் இலங்கைத் தமிழ் அரசியல் வேகமாக கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையிலேயே பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கின்ற காலத்திலேயே தாயும் தந்தையும் அரசியல் போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தப் பின்னணியில் வளர்ந்த காண்டீபன் தீவிர அரசியலில் விருப்பம் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. வே பிரபாகரன் யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை படுகொலை செய்யத் திட்டம் போட்ட காலங்களில் காண்டீபனும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வே பிரபாகரனும் காண்டீபனும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பில் இருந்த தீவிர செயற்பாட்டாளர்கள். நெருங்கிய நண்பர்கள். அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு பிரபாகரன் மீது அபரிதமான நம்பிக்கையும் நெருக்கமும் இருந்தது. பிரபாகரன் அல்பேர்ட் துரையப்பாவை படுகொலை செய்ததும் இந்தக் குழு தலைமறைவானது. அவ்வாறு தலைமறைவானவர்களில் காண்டீபனும் ஒருவர்.

மேயர் துரையப்பாவின் கொலையை புதிய தமிழ் புலிகள் உரிமை கோரினர். அத்தோடு தமிழ் இளைஞர்களுக்கு இடையே தலைமைத்துவப் போட்டிகளும் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது. தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்பன ஓரளவு அமைப்பு வடிவம் பெற ஆரம்பித்துவிட்டது. இந்த இயக்கங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்த நிலைசற்றறு நெகிழ்ச்சி பெறத் தொடங்கிவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியை இந்த அமைப்புகள் விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டன. அச்சமயத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட ஒரு இராணுவக் கட்டமைப்பு இருந்தால் நல்லது என்ற எண்ணம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இருந்ததாகவும் அவ்வாறான ஒரு அமைப்புக்கு தங்களோடு மிக நெருக்கமாக இருக்கும் இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என்று அவர்கள் நம்பியுள்ளனர். இந்தப் பின்னணியில் ‘தமிழீழ இராணுவம்’ என்ற அமைப்பை காண்டீபன் உருவாக்கினார்.

இந்த அமைப்பு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் ஆதரவோடு உருவாக்கப்பட்டது என்ற பரவலான அபிப்பிராயம் இருந்த போதும் அமிர்தலிங்கம் அதனைக் கடுமையாக எதிர்த்ததாகவும் அவருடைய ஆதரவு இல்லாததால் அவ்வமைப்பு முளைவிட முன்னரே கிள்ளி எறியப்பட்டுவிட்டதாகவும் அன்றைய காலத்தில் காண்டீபனுடன் தொடர்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

காண்டீபன் வன்முறை அரசியலில் நாட்டம் கொள்ள குடும்பத்தினர் இவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும் இவருடைய அரசியல் நாட்டம் வெளிநாட்டிலும் தொடர்ந்தது. காண்டீபன் அரசியல் தஞ்சம்கோரி முதலில் ஐரோப்பாவுக்கு பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்தார். பின்னர் லண்டனுக்கு வந்தார். பிரான்ஸ்ம் மனிதவுரிமைகள் சாசனத்திற்குக் கட்டுப்பட்ட, அரசியல் தஞ்சம் கோருக்கூடிய நாடு என்ற வகையில் பிரித்தானியா அவரை மீண்டும் பிரான்ஸ்க்கு நாடு கடத்தியது. அதன் பின் பிரபல சட்டத்தரணி ரொனி பற்றரசன் அவருடைய வழக்கை எடுத்து நடாத்தி காண்டீபனை லண்டனுக்கு எடுத்தார்.

லண்டன் வந்த காண்டீபன் மேயர் அல்பேர்ட் துரையப்பா கொலைசெய்யப்பட்டபின் தலைமறைவாகி இருந்தது பிரபாகரனின் மைத்துனியின் வீட்டில். அத்தலைமறைவின் போது மலர்ந்த காதல் பின் லண்டனில் திருமணத்தில் முடிந்து அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் கிடைத்தது. காண்டீபன் லண்டன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப்பாளராகச் செயற்பட்டார். அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவராக சிருனிவாசனும் செயலாளராக பொன் சிவசுப்பிரமணியமும் இருந்தனர்.

துரதிஷ்டவசமாக அடுத்தடுத்த தலைமுறையினரின் பொது வாழ்க்கை மட்டுமல்ல அதன் தாக்கத்தால் தனிப்பட்ட வாழ்;கையும் போராட்டமாகவே மாறியது. பலர் கல்வியைத் தொடர முடியவில்லை. அவ்வாறு காண்டீபன் பிறந்து வளர்ந்தது மட்டுமல்ல அவருடைய போராட்டம் இறுதிவரை தொடர்ந்தது.

இந்தப் பின்னணியில் 1989 யூன் 13 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி திருமதி மங்கையற்கரசி ஒருதடவை குறிப்பிடுகையில் “பிரபாகரனிடம் துப்பாக்கியைக் கொடுத்து அவரைச் சுடு என்று சொன்னால், ஒரு போதும் பிரபாகரன் சுட்டிருக்கமாட்டார்” என்று கூறி இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வைத்திருந்த அபார நம்பிக்கை காரணமாக அவர்கள் ஆயுதங்களுடனேயே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன் விளைவு அன்று அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு படுகொலை செய்த சம்பவம் இதுமுதற் தடவையுமல்ல. இது முற்றுப்புள்ளியுமல்ல.
அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கு அவர் கொல்லப்பட்டது என்பதற்கும் அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகள் அவரைப் படுகொலை செய்தமை மிகவும் தனிப்பட்டவகையில் அவர்களைத் தாக்கியது. ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம்’ செய்ததாகவே கருதுகின்றனர். விடுதலைப் புலிகளின் பயிற்சிகளில் நம்பவைத்து கழுத்தறுக்கும் இவ்வகையான மனிதநேயமற்ற செயற்பாடுகள் அவவமைப்பில் இருந்த சில உறுப்பினர்களால் இன்றும் கடைப்பிடிக்கப்படுவதைக் காணலாம்.

அமீரின் மறைவுக்குப் பின் சிவசிதம்பரம் அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இலங்கை சென்றிருந்தார். அப்போது தமிழ்ச்செல்வன் அவரின் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். “அவரை என்னத்துக்காக கொலை செய்தீர்கள்” என்று கேட்டபோது தமிழ்ச்செல்வன் பதிலளிக்கவில்லை என அவர் பொதுவெளியில் குறிப்பிட்டு இருந்தார். இதே கேள்வியை முதல் போராளி சிவகுமாரன் மற்றும் சிவசுப்பிரமணியத்தின் தாயார் தன்னுடைய மகனுக்காக பிரபாகரனிடம் கேட்டிருந்ததாகவும் அதற்கு பிரபாகரன், “அதுதன்னுடைய உத்தரவில்லை, அது மாத்தையாவின் செயல்” என்று குறிப்பிட்டதாகவும் பொன் சிவசுப்பிரமணியம் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்.

மேலும் பிரபாகரன் காண்டீபனின் நண்பனும். அப்படி இருக்கையில் தன் தந்தையை தன்னுடைய நண்பனே கொலை செய்யத் துணிந்தான் என்ற தாக்கமும் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக காண்டிபனின் திருமணமும் முடிவுக்கு வர காண்டிபன் என்ற ஆளுமை தமிழ் அரசியலில் காணாமலேயே போய்விட்டார். வாழ்க்கை போராட்டமாக மது துணையானது.

ஆவரை நான் கடைசியாக அவருடைய தாயாரின் இறுதிக்கிரியைகளில் சந்தித்தேன். பெரிய நெருக்ம் இருக்கவில்லை. ஒரிரு தடவை கண்டிருப்பேன். அன்று அவர் அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இப்பதிவை விரும்பு வெறுப்பில்லாமல் எழுத வேண்டும் என்று தோண்றியது. காண்டீபன் ஒரு வரலாற்றின் சாட்சியம். ஒரு ஆளுமையை தமிழ் சமூகம் இழந்தது. இன்று அவர் பௌதீக உயிர் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டது.

அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் அனைவருடனும் என் துயரைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை: