minnambalam.com - Kavi ; சவுக்கு சங்கர் மீதான நான்கு வழக்குகளில் அவருக்கு இன்று (நவம்பர் 17) சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், வேறு ஒரு வழக்கில் அவரை கைது செய்ய நேற்றே மத்திய புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதாகச் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கைக் கடந்த 11ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர் மீதான தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
ஆனால், சவுக்கு சங்கர் மீது 2020ல் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளையும், 2021ல் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கையும் தமிழக போலீஸ் தூசு தட்டி எடுத்தது.
இதனால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் சவுக்கு சங்கரால் சிறையிலிருந்து வெளியே வர முடியவில்லை.
இந்நிலையில், இந்த 4 வழக்குகளில் தனக்கு ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்குகள் குறித்து வெளியில் பேசக் கூடாது என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியது.
இதனால் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீதான மற்றொரு வழக்கை கையில் எடுத்துள்ளது மத்திய குற்றப்பிரிவு.
இந்த வழக்கு 2014ல் பதிவு (குற்ற எண் – 14/2014) செய்யப்பட்டது ஆகும். இந்த வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கிறது. நீதிமன்றத்தில் உள்ள சிசி எண்- 08/2016.
இந்த வழக்கில் நேற்றே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடலூர் மத்திய சிறைக்கு சென்று பி.டி.(PT-prisoner transit warrant) வாரண்ட் கொடுத்துள்ளனர்.
அதாவது சிறையில் உள்ள ஒரு கைதி மீது அவர் சிறைக்குச் செல்வதற்கு முன்னதாகவோ அல்லது சிறைக்குச் சென்ற பின்னரோ ஏதேனும் வழக்குப் பதியப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட கைதி சிறையிலேயே இருக்கும் வகையில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சிறை ஜெய்லரிடம் கொடுக்கும் வாரண்ட் ஆகும்.
ஒருவேளை, இன்று சவுக்கு சங்கர் தொடர்ந்த 4 வழக்குகளில் ஜாமீன் கிடைத்தாலும் அவர் சிறையிலேயே இருக்கும்படி, நேற்று காலை 11.45 மணிக்கே இந்த பிடி வாரண்ட்டை கடலூர் சிறை ஜெயிலரிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொடுத்துள்ளனர்.
அதன்படி மூன்றாவது முறையாக கைதாகியுள்ளார் சவுக்கு சங்கர்.
வணங்காமுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக