BBC : : சீனாவுடன் தொடர்புடைய ரகசிய "காவல் நிலையங்கள்" அமெரிக்கா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன என்ற தகவலால் அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கவலை" கொண்டுள்ளது.
Safeguard Defenders என்ற அரசு சாரா அமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய ரகசிய நிலையங்கள், நியூயார்க் உட்பட உலகம் முழுவதும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே, இது தொடர்பாக அமெரிக்க மூத்த அரசியல்வாதிகளிடம் பேசும்போது, நாடு முழுவதும் இதுபோன்ற மையங்கள் இருப்பதாக கூறப்பட்டும் சேஃப் டிஃபண்டர்ஸ் அறிக்கையைஎஃப்பிஐ கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
இத்தகைய நிலையங்கள் இருப்பதை நாங்கள் அறிவோம். என்னைப் பொறுத்தவரை, சீன காவல்துறை நியூயார்க்கில் அதன் நிலையங்களை சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் அமைக்க முயற்சிப்பதாக நினைப்பது கூட மூர்க்கத்தனமானது என்று சொல்லலாம். அது இறையாண்மையை மீறுவதுடன் நிலையான நீதி மற்றும் சட்ட அமலாக்க ஒத்துழைப்பு செயல்முறைகளை மீறி நடப்பதாக கருதப்படும்," என்கிறார் ரே.
அத்தகைய நிலையங்கள் அமெரிக்க சட்டத்தை மீறுகின்றனவா என்று கேட்டதற்கு, "சட்ட ரீதியான அந்த விவகாரத்தையும் எஃப்பிஐ கவனித்து வருகிறது" என்று ரே பதிலளித்தார்.
மூத்த உளவு அதிகாரியாக கருதப்படும் ரே, அமெரிக்க செனட் சபையின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அரசாங்க விவகாரக் குழு விசாரணையில் ஆஜரானபோதே இவ்வாறு பேசினார். அவரிடம் மூத்த எம்பிக்கள் பலரும் கேள்விகளை எழுப்பினர்.
பட மூலாதாரம், Getty Images
இத்தனை முக்கியத்துவம் எதற்கு?
ஸ்பெயினைத் தளமாகக் கொண்ட NGO Safeguard Defenders கருத்தின்படி, சீன பொது பாதுகாப்புப் பணியகங்கள் லண்டனில் இரண்டு மற்றும் கிளாஸ்கோவில் ஒன்று என பல கண்டங்களில் உள்ளன.
"வெளிநாட்டு காவல் சேவை நிலையங்கள்" போல செயல்படும் அவை, வட அமெரிக்காவில், டொரான்டோ மற்றும் நியூயார்க்கில் உள்ளன.
நாடு கடந்த குற்றங்களை் சமாளிப்பதற்கும் வெளிநாடுகளில் உள்ள சீன பிரஜைகளுக்கு வெளிநாட்டில் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பித்தல் மற்றும் பிற தூதரக சேவைகள் போன்ற நிர்வாக சேவைகளை வழங்குவதற்கும் இந்த பிரிவுகள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் சேஃப்கார்ட் டிஃபண்டர்ஸ் அமைப்பு, "வெளிநாட்டு சீனர்களை உள்ளடக்கிய அனைத்து வகையான சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களையும் முறியடிக்க" மோசமான காரியங்களை இலக்காகக் கொண்டு இந்த நிலையங்கள் செயல்படுவதாக கூறுகிறது.
ஆனால், அத்தகைய வெளிநாட்டு நிலையங்களை இயக்குவதாக வெளிவரும் தகவல்களை சீனா மறுத்துள்ளது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை விமர்சித்த அமெரிக்காவில் உள்ளவர்களை சீன அரசாங்கம் துன்புறுத்துவது, பின்தொடர்வது, கண்காணித்தல் மற்றும் அச்சுறுத்துவது தொடர்பான பல குற்றச்சாட்டுகளை அமெரிக்கா விசாரித்து வருவதாகவும் ரே கூறினார்.
"இது ஒரு உண்மையான பிரச்னை. இது குறித்து வெளிநாட்டில் உள்ள உளவு அமைப்புகளுடனும் பேசி வருகிறோம். ஏனென்றால் இது இங்கே மட்டும் நடக்கும் விஷயமல்ல," என்று அவர் தெரிவித்தார்.
கடந்த அக்டோபரில், அமெரிக்க குடியிருப்புவாசி மற்றும் அவரது குடும்பத்தினரை உளவு பார்த்ததாகவும் தொந்தரவு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட ஏழு சீனர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. அந்த ஏழு பேரில் ஒருவரை திருப்பி அழைத்துக் கொள்ள சீன முயற்சி எடுத்ததன் அங்கமாக இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது. கடந்த மாதம், ஐரிஷ் தலைநகர் டப்ளின் மையத்தில் உள்ள சீன "காவல் நிலையங்களில்" ஒன்று, சேஃப்கார்ட் டிபண்டர்ஸ் அறிக்கையின் விளைவாக மூட உத்தரவிடப்பட்டது.
மேலும் கனடா உளவுத்துறை அதிகாரிகள் சமீபத்தில் தங்கள் நாட்டு மண்ணில் சீனா அதிகாரபூர்வமற்ற "போலீஸ்" நிலையங்களைத் திறந்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாகக் கூறினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக