மின்னம்பலம் : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை மதுரையில் ஜூன் 5ஆம் தேதி வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, மா.சுப்பிரமணியன் மற்றும் முத்துசாமி ஆகிய இரு அமைச்சர்களின் துறை மீது குற்றசாட்டை முன்வைத்தார்.
கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்களுடன் வழங்கப்படும் தொகுப்பில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறிய அண்ணாமலை, “கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா நியூட்ரிசியன் கிட் அரசு கொடுத்து வருகிறது. திமுக ஆட்சியில் அம்மா என்ற வார்த்தையை நீக்கிவிட்டனர்.
இந்த நியூட்ரிசியன் கிட்டில் ஒரு ஹெல்த் மிக்ஸ், ஆவின் நெய், ஒரு துண்டு, அல்பெண்டசோல் மாத்திரை, லைன் டேட்ஸ், ஒரு கப், அயர்ன் டானிக் ஆகியவை இருக்கும். மொத்தம் 23,88000 கிட் ஆண்டுக்கு வாங்குகின்றனர். இதில் முக்கியமானது மதர்ஸ் ஹெல்த் மிக்ஸ்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுச் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறையில் நியூட்ரிசியன் கிட் திட்டம் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த கிட்டில் என்ன பொருட்களை வைக்கலாம், எந்த பொருளை நீக்கலாம் என ஆலோசனை நடத்தினர். மாநில திட்டக்குழு துணை தலைவர் தலைமையில், இந்த துறையின் டெக்னிக்கல் கமிட்டி தனியார் கம்பெனியின் ப்ரோ பில்.எல் ஹெல்த் மிக்ஸ் வேண்டாம். அதற்கு பதிலாக ஆவின் ஹெல்த் மிக்ஸை பயன்படுத்த வேண்டும் என்று கூறியது. மார்ச் 31, 2022 நடந்த ஆலோசனையில் ஆவின் ஹெல்த் மிக்ஸை கொண்டு வந்து விலையைக் குறைப்பதற்குக் கூட பரிந்துரை செய்தனர்.
பின்னர் ஏப்ரல் மாதத்தில் அரசின் நிர்ப்பந்தத்தின் காரணமாக, அந்த முடிவு கைவிடப்பட்டது. ஏனென்றால் இந்த ப்ரோ பில்.எல்.மிக்ஸ் என்பது ஆவின் நிறுவனம் சப்ளை செய்வதை விட 60 சதவிகிதம் விலை அதிகம். அதோடு இந்த கிட்டில் உள்ள 8 பொருட்களையும் சப்ளை செய்வது அனிதா டெக்ஸ்காட் நிறுவனம் வழங்குகிறது. இந்த அனிதா டெக்ஸ்காட் நிறுவனம் வேறு எதுவும் கிடையாது. பொங்கல் தொகுப்பில் கொடுத்த எல்லா பொருட்களையும் கேந்திரிய பந்தார் மூலமாக சப்ளை செய்யப்பட்டது. கேந்திரிய பந்தார் நிறுவனத்துக்கு அதிக பொருட்களை விநியோகம் செய்தது அனிதா டெக்ஸ்காட் தான். இந்த நிறுவனம் தான் நியூட்ரிசியன் கிட்டையும் சப்ளை செய்கிறது
இந்நிறுவனம் ஒரு தனியார் கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டு ஹெல்த் மிக்ஸை 60 சதவிகிதம் அதிகமான விலைக்கு கொடுத்திருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், திமுகவின் சொந்த ஆடிட்டரான சண்முகராஜும், அண்ணா நகரில் இருக்கக் கூடிய ஒரு திமுக எம்.எல்.ஏ.வின் மகன் கார்த்தியும் தான். இவர்கள் இரண்டு பேரும், முதல்வரின் இரண்டாவது செயலாளர் மூலம், இந்த கமிட்டியில் இருந்தவர்களை மிரட்டி ஆவின் பொருட்களை நீக்கி, ப்ரோ பி.எல்.மிக்ஸை கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் அரசுக்கு 45 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதோடு, இதே கிட்டில் ஐயன் டானிக் வழங்குவதிலும் ஊழல் நடக்கிறது. அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திடம் பெறுவதால் ரூ.32 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மருந்தை தமிழ்நாடு அரசின் மருத்துவ சேவைகள் கார்பரேஷன் மூலமாக வாங்கினால் 200 எம்.எல். கொண்ட ஒரு சிரப் வெறும் ரூ.42ஆக இருக்கும், தனியார் நிறுவனத்திடம் வாங்குவதால், ஒரு சிரப் விலை ரூ.224ஆக இருக்கிறது. இந்த இரண்டு பொருட்களில் ஊழல் நடக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
ஹெல்த் மிக்ஸ் மற்றும் ஐயன் டானிக் வாங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக அண்ணாமலை கூறிய நிலையில், இதற்கு பதிலளித்துள்ள துறை சார்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அவர் அறிவுப்பூர்வமாக எதையாவது சொல்லுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இல்லை. டெண்டர் விடுவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. அதற்குள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக எப்படிக் கூறுகிறார். டெண்டர் விட்டு யாருக்காவது கொடுத்திருந்தால் இழப்பு ஏற்பட்டதா இல்லையா என்று சொல்லலாம். அதற்கு முன்னதாகவே சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது.
இதுதொடர்பாக தீபக் ஐ.ஏ.எஸிடம் விசாரித்தோம். டெண்டரே இன்னும் முடிவுக்கு வரவில்லை. எப்படித் தப்பு நடந்திருக்கும் என்று சொல்கிறார். எந்த கம்பெனிக்கு கொடுத்தால் லாபம், நஷ்டம் வரும் என்று அண்ணாமலை சொல்ல வேண்டும். டெண்டர் இறுதியாகிவிட்டதா, எந்த கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது என்று அவர் சொல்ல வேண்டும்.
இதற்குப் பதில் சொல்லவில்லை என்றால் மற்ற துறை மீது அவர் சுமத்தும் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா எனத் தெரிந்துகொள்ளலாம். ஆவினில் ஆலோசனை செய்திருக்கிறார்கள். ஆவினில் வாங்க முடியும் என்றால் வாங்குவார்கள்.
இந்த கிட்டில் ஆவினில் வாங்க முடியாத பொருட்களும் உள்ளன. இரும்புச் சத்து டானிக்கை ஆவினில் வாங்க முடியாது. இரண்டு நாட்களுக்குப் பின்னரே டெண்டர் ஓபன் செய்யப்பட உள்ளது. நஷ்டம் ஏற்படுகிறது என அவர் ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக