செவ்வாய், 7 ஜூன், 2022

இந்த அநியாயத்தை பேசாத எந்த ஈழத்து இலக்கியவாதியும் வெறும் விளம்பர வியாபாரியே!

 Radha Manohar :  ஈழத்து இலக்கிய உலகில்  நீண்ட காலமாக ஒரு பொய் ஒழிந்துகொண்டிருக்கிறது. ஈழத்து கவிஞர்கள் அல்லது புனை கதைகளை படைக்கும் இலக்கியவாதிகள் பெரும்பாலும் யுத்தம் அது தந்த வலி பற்றி எழுதுவதே ஒரே நோக்கமாக கொண்டிருப்பது போல தெரிகிறது  அது தவறு என்று கூறவில்லை . ஆனால் அதில் உண்மை இருக்கவேண்டும்.
இராணுவ தாக்குதல்கள் காரணமாக மக்கள் அடைந்த துன்பத்தை இலக்கிய தளத்தில் முன்வைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு போராட்டத்தின் மறுபக்கத்து விளைவுகளையும் பாரபட்சமின்றி இலக்கிய தளத்தில் முன்வைக்கவேண்டும்.
ஏறக்குறைய எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு காவியம் படைக்கும் ஒரு வெறுமை அல்லது பொய் கண்முன்னே தெரிகிறதே?
எனக்கு தெரிந்தவரையில் தமிழ் மக்களால் ஜீரணிக்கவே முடியாத ஒரு அதிர்ச்சியையும் துன்பத்தையும் தந்தது எந்த நாட்டு இராணுவமும் அல்ல.


ஒரே குடும்பத்தில் அண்ணன் ஒரு இயக்கம் தம்பி இன்னொரு இயக்கம்  என்று இருந்தன அந்த நாட்கள்.
எல்லா இயக்கங்களும் எங்கட பொடியள் என பாசமாக மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த அந்த நாட்களை வெகு சுலபமாக கடந்து போய்விடலாம் என்று அராஜகவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் கருதலாம்.
அவர்கள் அப்படித்தான் .
ஆனால் இலக்கியகர்த்தாக்கள் கவிஞர்கள் எனப்படுவோர்கள் எல்லாம் அப்படி கடந்து போய்விடமுடியுமா?
அப்படி கடந்து போய்விடுபவர்களை கவிகள் என்றோ இலக்கிய ஆளுமைகள் என்றோ எப்படி அழைக்கமுடியும்?
அவர்கள் வெறும் பிரசாரகர்கள் அல்லது வியாபாரிகள் ஆகத்தான் இருக்கமுடியும் ?
எனக்கு தெரிந்து ஒரு ஏழை குடும்பம் .. பானை சட்டிகள் செய்வது அவர்கள் தொழில் . அந்த கிராமத்துக்கு அவர்கள் பிழைப்பு தேடி வந்தவர்கள்தான். அதிலும் அவர்கள் தெலுங்கு பூர்விகம் என்று கூற கேட்டிருக்கிறேன் .
அவர்களின் ஒரு மகன் ஒரு இயக்கத்தில் சேர்ந்தான். அவனின் சகோதரன் இன்னொரு இயக்கத்தில் சேர்ந்தான் .
அவர்களின் பெற்றோர் தங்கள் இரு மகன்களினதும் இயக்க ஈடுபாடுகள் பற்றி  பெருமையாக கூறுவார்கள்  அது வரை அந்த குடும்பத்திற்கு ஒரு சமுக அந்தஸ்து கிடைக்கவில்லை என்றுதான் எண்ணுகிறேன் .வந்தேறிகள் அதுவும் பணமோ  கல்வி வாசனையோ கிடையாது . விற்கும் பானை சட்டிகளின் வருமானத்தில் குடும்பதலைவனின் கள்ளுக்குடி வேற ..ஆனால் அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் வாட்டசாட்டமாக பார்ப்பனர்கள் போல தோற்றம் அளித்தனர்.
ஒரு நாள் கொலைகளுக்கு பேர் பெற்ற ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தை தேடி தேடி வேட்டையாடி கொன்றனர். இவர்களின் ஒரு மகன் தோற்றத்தில் தமிழ் சினிமா நடிகன் பிரசன்னா போலவே இருப்பான் . நட்ட நடுவீதியில் சுடப்பட்டு இறந்து கிடந்தான் ..அந்த தாயும் தந்தையும் மொத்த குடும்பமும் கதறி கதறி அழுதது . ஊர் மக்கள் பயத்தில் உறைந்து போய் அவர்கள் வீட்டிற்குள் கதைவை தாழிட்டு கொண்டு இருந்து விட்டனர்.
அந்த குடும்பம் தங்கள் மகனையும் இழந்து முழு ஊரும் திடீரென காலியான காட்சியில் அவர்கள் மூச்சு விடுவதற்கு கூட சக்தி அற்றவர்கள் ஆயினர். அவர்களின் வந்தேறி குடும்பம் என்ற அவலம் நீங்கி ஊர் மக்களோடு ஒன்றி இருந்த அந்த குடும்பம் ஒரே நாளில் நொறுங்கி போனது.  
அந்த கொலை வெறியாட்டத்தை நிகழ்த்திய இயக்கம் அதை நீண்ட நாட்களாக கொண்டாடியது .
அந்த வந்தேறி குடும்பம் வக்கற்று போனது .மெல்ல அந்த கிராமத்தை விட்டு போனது .
அந்த வந்தேறி குடும்பம் மட்டுமல்ல .
ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வீடுகளில் அந்த நாட்களில் ஆறாக ஓடிய கண்ணீீரை யாரும் கண்டுகொள்ளவில்லை .
தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவு வியாபாரிகள் ஓயாமல் ஊற்றி கொடுத்த போதையில்  வீரவிளையாட்டுக்கள் தொடர்ந்தன. தமிழக முதல்வர் மறைந்த எம்ஜியார்  அன்று இந்த கொடுமையை தடுக்க கூடிய வல்லமையோடு இருந்தார். அப்படி அவர் அன்று செயல்பட்டிருந்தால்  போராட்டம் வேறு விதமான பாதையில் சென்றிருக்கும்.  ஏனைய அமைப்புக்களும் கூட இந்த அநியாயத்தை தட்டி கேட்கவில்லை . மாறாக மேலும் மேலும் கொம்பு சீவி விட்டனர்.
கலைஞர்  மட்டும் அன்று இதை கண்டித்தார்.. ஆனால் அன்று முதல்வராக எம்ஜியார் இருந்தார்.
அன்று தமிழ் மக்களால் மிகவும் பெருமையோடு உச்சரிக்கப்பட்ட சொல்தான் பொடியங்கள் என்ற சொல்..
 பொடியங்கள் அடிச்சு நொறுக்கி போடுவாங்கள் .பொடியங்கள் விடமாட்டாங்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை பெருமை போங்க மந்திரம் போல உச்சரிக்கப்பட்ட அந்த சொல் 1986 ஆண்டு நடுப்பகுதியில் அதன் அர்த்தத்தை இழந்தது .
அன்றோடு உண்மையான ஈழ விடுதலை போராட்டம் விடைபெற்று கொண்டது .
இதுதான் வரலாறு கூறும் உண்மை . அதன் பின்பு நடந்ததெல்லாம் முழு உலகும் அறிந்ததுதான் .
இப்பொழுதும் அந்த பொடியங்களை நான் நேசிக்கிறேன் .
ஏனெனில் அந்த பொடியங்கள் வேறு நான் வேறு என்று நான் எண்ணியதே இல்லை..
போராட்டம் என்று புறப்பட்ட தங்கள் வீட்டு செல்வங்கள் தங்கள் வீட்டு  பொடியங்களாலேயே வெறிநாய்கள் போல வேட்டை ஆடப்பட்டதை பார்த்து அழக்கூட திராணியற்று போனார்கள் ஈழ நம்பிக்கையில் இருந்த மக்கள் .
இந்த அநியாயத்தை பேசாத எந்த ஈழத்து இலக்கியவாதியும் வெறும் விளம்பர வியாபாரியே!

juin - 7 -2021

கருத்துகள் இல்லை: