ராதா மனோகர் : இந்தியா முழுமைக்கும் அரசியல் போக்கை
தீர்மானிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் (TREND SETTER)
திராவிட முன்னேற்ற கழகம், ஏனைய அரசியல் கட்சிகளை போல வெறும் ஒரு அரசியல் கட்சி கிடையாது.
அது ஒரு வெறும் மாநில கட்சி போல் தோன்றினாலும்,
அதையும் தாண்டிய ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அது உருவாகி உள்ளது..
சுயமரியாதை, சமுக நீதி, பகுத்தறிவு, மாநில சுயாட்சி என்ற நான்கு
தூண்களும் கொண்டு நிமிர்ந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம்!
இந்த நான்கு அடிப்படை கோட்பாடுகளும் ஆரிய பார்ப்பனீய காலனி தத்துவத்துக்குநேர் எதிரான கோட்பாடுகளாகும் .
அதன் ஒவ்வொரு படிநிலையிலும் அந்த கருத்தியலில் மிகவும் உறுதியாக முன்னேறி கொண்டே வந்திருக்கிறது.
இதன் அடிப்படை கொள்கைகள் சராசரி மக்களின் புரிந்துணர்வை தாண்டிய வீச்சு கொண்டதாகும்.
இந்த உண்மையை இன்றைய தலைமுறையினர் பெரிதாக அறிந்திருக்கவில்லை.
இதை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருக்கலாம்.
திறந்த மனதோடு அணுகினால் மட்டுமே இந்த கருத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளமுடியும்.
அது ஒரு சாதாரண விடயம் அல்ல.
திராவிட கருத்தியல்:
தெலுங்கு, கன்னடம், வங்காளம், மராட்டியம் போன்ற 20 மாநில மொழிகளும்,
திராவிட தன்னாட்சி கோட்பாட்டை புரிந்து கொண்டு முன்னெடுக்க முயன்றால்
ஆரிய காலனி ஆட்சியின் முடிவுக்கு தேதி குறிப்பிடப்பட்டுவிடும்.,.
அதன் முடிவில் இருந்துதான் உண்மையான இந்திய ஒன்றியம் உருவாகும்.
இந்த உண்மை ஆரிய பார்ப்பனீய காலனித்துவவாதிகளுக்கு புரியும்.
எனவேதான் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே திராவிட கருத்தியல் மீது வன்மைத்தோடு போர்
புரிகிறார்கள்.
ஆம் இங்கு சரியான வார்த்தையைதான் பயன் படுத்தி உள்ளேன்.
ஆரிய பார்ப்பன சக்திகள் திராவிட முன்னேற்ற கழகத்தோடு ஒரு மூர்க்கமான
போரை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு கணக்கில்லாமல் உதாரணங்கள் உண்டு.
1967இல் பேறிஞர் அண்ணா தலைமையில், திராவிட முன்னேற்றக்கழகம்
தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டி ஆட்சியை பிடித்தது.
இந்த வெற்றியானது ஆரிய பார்ப்பன சக்திகளின் நெஞ்சில் விழுந்த இடியாக ஒலித்தது.
அன்றில் இருந்து அவர்களின் போர் இயந்திரங்கள் பல்முனை தாக்குதல்களை மேற்கொண்ட
வண்ணமே உள்ளது.
இந்திய ஒன்றியம் என்று அவர்களால் கூறப்படும் அமைப்பு,
உண்மையில் ஒன்றியம் என்ற கருத்தை இழந்து பல ஆண்டுகளாகி விட்டன.
ஒன்றியம் என்பதன் அர்த்தத்தை தமிழகம் புரிந்து கொண்ட அளவு ஏனைய மாநிலங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.
பாசிசத்திற்கு எதிரான திராவிடம்:
ஒவ்வொரு மாநிலங்களும், தங்கள் தன்னாட்சி கருத்தியல் தளத்தில், நிமிர்ந்து
நின்று கொண்டு அமைக்கும் ஒன்றியம்தான்,
ஒரு உண்மையான ஒன்றியமாக இருக்க முடியும்.
ஒரு உண்மையான இந்திய ஒன்றியம் உருவாவதற்கு உரிய சரியான கோட்பாடுகள்,
திராவிட கருத்தியலில் மட்டும்தான் உண்டு.
ஆரிய பார்ப்பனீயத்தில் அது ஒருபோதும் சாத்தியப்படாது.
ஏனெனில், அடிப்படையில் அந்த கோட்பாடு, சக மனிதர்களை தரம் பிரித்து அடிமை படுத்தி ஏமாற்றி
பிழைக்கும் பாசிசத்தன்மை கொண்டதாகும்.
நவீன உலகில் அதன் இருப்பு சந்தேகத்துக்கு உரியது.
இன்னும் சரியாக ஆராய்ந்து பார்த்தால்,
அந்த ஆரியத்தின் அத்தனை நச்சு விதைக்களும் ஹிட்லரின் நாசி தத்துவத்தில்
இருக்கிறது. உண்மையில் அந்த நாசி தத்துவமே, ஆரிய பார்பனீயம் பெற்ற திருட்டு குழந்தைதான்.
இந்த பாசிசத்தை சரியாக புரிந்த கொண்டவர்கள் தென்னாட்டு திராவிடர்கள்தான்.
திராவிட கருத்தியல் பொறிதான் இந்தி அல்லாத மாநிலங்களையும் சேர்த்து கொண்டு,
முழு இந்திய உபகண்டத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக, வழிகாட்டுகிறது.
இந்திரா காந்தியின் எமர்ஜென்சியில், அதை எதிர்த்து சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது திராவிட முன்னேற்ற கழக அரசு..
அன்று, அது சர்வதேச ஊடகங்களின் முதல் பக்க செய்தி என்பது, நினைவிருக்கட்டும்.
ஒன்றியம் என்ற பெயரில் தோன்றிய சர்வாதிகாரத்துக்கு சவுக்கடி கொடுத்து இந்திய ஒன்றியத்துக்கே ஜனநாயக காவலனாக அவதாரம் எடுத்தார் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கலைஞர்.
அனைத்து இந்திய மாநிலங்களிலும் உள்ள அரசியல் கருத்தியல் கூடங்களிலும்,
இது ஒரு முக்கிய திருப்பு முனையாக எப்போதும் கருதப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக , ஆட்சி கலைப்பு என்ற மிரட்டலையும் மீறி, எதிர்க்கட்சி என்று எந்த பெரிய கட்சியும் இல்லாத அந்த காலக்கட்டத்தில், திராவிட முன்னேற்ற கழகம்
மேற்கொண்ட அரசியல் முன்னெடுப்புக்கள்தான் ஒரு உண்மையான இந்திய ஒன்றியத்துக்கான மேடையாகும்.
நன்னம்பிக்கை முனை:
பார்ப்பனீயத்தின் ஆட்சி அதிகார கட்டுமானம் தங்கி இருப்பது “ஒன்றியம்”
என்ற பெயரில்தான்.
மாநிலங்கள்தோறும் உள்ள இந்தி அல்லாத தேசிய இனங்களின்
தனித்தன்மையை மெதுவாக அரித்து அரித்து இல்லாமல் செய்து விடுவதுதான்,
ஒன்றியம் என்பதன் தலையாய் பணி என்று, கருதிக்கொண்டு செயல்படுகிறார்கள்.
ஒன்றியம் என்ற பெயரில் இந்த திருட்டுத்தனத்தை அவர்கள் தொடர்ந்து
செய்துகொண்டே வருகிறார்கள்.
அதில் அவர்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றும் விட்டார்கள்.
ஆனால் அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு வலுத்து கொண்டே வருகிறது.
இந்தி மொழி அல்லாத மாநிலங்களில், திராவிட கருத்தியலும், திராவிட
முன்னேற்றக்கழகமும் எப்படி பார்க்கப்படுகிறது?
ஒரு மாநில தன்னாட்சி கோட்பாட்டின் நன்னம்பிக்கை முனையாகத்தான்,
திராவிடமுன்னேற்ற கழகம் பார்க்கப்படுகிறது.
இது பற்றி தமிழகத்தில் பலருக்கும் தெரியாத செய்திகள் உள்ளன.
மாநில உரிமைகள், மாநில பெருமைகள்,
மாநில கலாசார வரலாறு,
பண்பாட்டு விழுமியங்கள் பற்றி எல்லாம் பேசுவதே இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்றதல்ல என்ற கருத்து ஆரியர்களால் காலத்துக்கு காலம் கட்டமைக்கபட்டு வந்துள்ளது.
குறிப்பாக, மாநில உரிமைகள் என்ற பேச்சை, செவிமடுத்தாலே,
ஆரிய பார்ப்பனீய சக்திகள், இடிகேட்ட நாகம் போல ஆகிவிடுகிறது.
ஏனெனில், அவர்களுக்குத்தான் எந்த மாநிலமும் இங்கு கிடையாதே?.
அதனால் எல்லா மாநிலங்களையும், அவற்றின் மாநில அடையாளங்களை சிதைப்பதே, தங்களுக்கு நல்லது என்ற நோக்கத்தில், செயல்படுகிறார்கள்..
வெறும் சமுக இயக்கமாக பிரசாரங்கள் மட்டும்செய்வார்கள் என்று கருதி இருந்த ஆதிக்க சக்திகளுக்கு, திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசியல் மேடை, பெரிய அதிர்ச்சி வைத்தியமாகி விட்டது.
ஒடுக்கப்பட்டவன் ஒரு நாள் நிமிர்ந்து எழுவான் என்பது இயற்கை விதி.
பேராசைகாரர்களுக்கு, அது இலகுவில் புரிவதில்லை.
அவர்களுக்கு புரியக்கூடிய அந்த பாடத்தை அவர்களுக்கு முதலில் படிப்பித்தது திராவிட முன்னேற்றக்கழகம்தான்.
தமிழகம் கற்பித்த இந்த மாநில தனித்துவம் என்ற பாடம்,
தற்போது எல்லா மாநிலங்களுக்கும் பரவி விட்டது!
குறிப்பாக இந்தி அல்லாத மாநிலங்களில் மாநில தன்னாட்சியின் பேசு பொருளாக இருப்பது நிச்சயமாக தமிழகத்தின் தன்னாட்சியை நோக்கிய வரலாற்று பயணம்தான். .
இந்தி அல்லாத எந்த மாநிலத்து அரசியலை எடுத்துகொண்டாலும்,
அங்கெல்லாம் இப்போது மாநில உரிமைகள் பற்றிய கருத்துக்கள் பெரிய அளவில் ஒலிக்கிறது.
இந்திய மாநில மொழிகள், இன்றுவரை கொஞ்சமாவது காப்பாற்றப்படுவதற்கு முக்கிய காரணம்,
திராவிட கருத்தியலை முன்னெடுத்த தமிழகம்தான்.
தமிழகத்தின் இருமொழிக்கொள்கையின் வெற்றி,
இப்போது இதர மாநிலங்களை தட்டி எழுப்பிவிட்டது.
மும்மொழி என்ற பெயரில் இந்தியிடம் தங்கள் அடையாளங்களை பறிகொடுத்து விட்டோம் என்று,
இப்போது அவர்களுக்கு தெரிந்து விட்டது.
மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும் என்ற
உறுதி மொழியை திராவிட முன்னேற்றக்கழகம் இந்திய அரசிடம் இருந்து பெற்றது.
இதன் பலனை இன்று எல்லா மாநிலங்களும் அனுபவிக்கின்றன.
இன்று ஆங்கில கல்வியை, இந்தி அல்லாத மாநிலங்கள் பெற்று ,
முன்னேறி இருப்பதற்கு, அவைகள் தமிழகத்துக்கு நன்றி கூறவேண்டும்.
திராவிட முன்னேற்றக்கழகம் மேற்கொண்ட அரசியல் முன்னெடுப்புக்கள்தான் ஒரு உண்மையான இந்திய
ஒன்றியத்துக்கான மேடையாகும்.
தேசிய அரசியல்போக்கை மாற்றிய திராவிடம்:
அடுத்த கட்டமாக, வி.பி.சிங் ஆட்சியை நிறுவியதிலாகட்டும்,
அதன் பின்பு,மன்மோகன் சிங் ஆட்சியை கொண்டுவந்ததில் ஆகட்டும்,
திமுக, என்றைக்குமே புதிய போக்கை முன்னெடுப்பதாக தான் இருந்திருக்கிறது.
இந்தி அல்லாத எந்த மாநிலத்தில், எந்த மாநில கட்சி வெற்றி பெற்றாலும் திராவிட முன்னேற்றக்கழக
தலைவரை, முதன்மை விருந்தினராக, அவர்கள் அழைப்பது, ஒரு தொடர் நிகழ்வாக
நடப்பது ஒன்றும், தற்செயலான விடயம் அல்ல.
மாநில உணர்வுகள், அங்கெல்லாம் கொழுந்து விட்டு எரிகிறது.
அந்த மாநில மக்களின் நாடித்துடிப்பை, அந்த தலைவர்கள் எல்லோரும் அறிவார்கள்.
ஊடகங்கள் ஒன்று கூடி மறைத்தாலும், அந்த மக்களின் உணர்வுகளை,
அந்த மண்ணின் தலைவர்களும், கட்சிகளும், கவனத்தில் எடுத்து கொண்டே ஆகவேண்டிய நிலை உள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில், தலைவர் ஸ்டாலின், முன் மொழிந்த, பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி, என்பதை அப்போது ஏற்று கொண்டு, வெளிப்படையாக ஆதரவு கொடுக்காமையே,
இன்றைய அவலங்களுக்கு, ஒரு காரணம், என்று பலரும் சிந்திக்க தொடங்கி உள்ளனர்.
அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கு, தங்கள் மாநில உரிமைககளின் முன்னோடி அடையாளமாக திராவிட முன்னேற்றக்கழகம்தான் தெரிகிறது.
பின் குறிப்பு:
ஆரியர்களின் வருகைக்கு முன்பு, இந்த மண்ணில், வாழ்ந்த மக்களிடையே, ஜாதி இல்லை.
மக்களை, ஜாதி என்ற வியாதி கொண்டு, பிரித்து ஆளும் வந்தேறி மதங்கள், இல்லை.
கடவுளின் பெயரால் அடக்குமுறை இல்லை.
ஆரிய வருகைக்கு முந்தைய, தொன்மையான திராவிட வரலாற்று சான்றுகளையும், விழுமியங்களையும்,
மீட்டு எடுப்பதில் திராவிடர்கள், வெற்றி பெற்றுவிட்டார்கள்.
இதில் யாருக்கும் சந்தேகம் தேவை இல்லை.
இன்னும் வெகு தூரம் செல்லவேண்டி இருக்கிறது என்பது ,உண்மைதான்.
ஆனாலும், இந்திய துணை கண்டமெங்கும், திராவிட கருத்தியல், முன்னெப்போதையும் விட ,தற்போது கவனிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக