Dhinakaran Chelliah : தற்போதுள்ள மதுரை ஆதீனம் அவர்கள் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ ஒன்றில் கலைஞர் எழுதிய “அம்பாள் என்றைக்கடா பேசினாள்?!” என்ற திரை வசனத்துக்கு குறிப்பிட்டு இப்படியெல்லாம் கிண்டல் செய்வதாக குற்றம் சாட்டினார்.
‘சமயபுரம் மாரியம்மன் துஷ்ட தேவதை என்று சொன்னார்கள்’ என்றெல்லாம் ஆதீனம் கூட்டத்தில் பேசியுள்ளார்.
இவ்வளவு ஏன்,சைவப் பெருமகனார் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் “சமய தீக்ஷிதா அநுட்டான விதி” நூலில் நாட்டார் தெய்வங்கள் தாய்தெய்வ வழிபாட்டினை விமர்ச்சித்திருப்பதை ஆதீனகர்த்தா அறியவில்லையா?!
“உயிர்ப்பலியேற்குந் துட்ட தேவதைகளையும் வீரன் மாடன் கறுப்பன் முதலிய பிசாசுகளையும் வணங்கலாகாது.
வணங்குவீர்களானால், சிவபெருமானுடைய சாபம் உங்களுக்கு தப்பாது கிடைக்கும்”
“சிவபெருமான் ஒருவரே பசுக்களுக்குப் பதி.சிவ பெருமானுக்குச் சமத்துவம் உடையவர் உண்டென்றாவது கொள்வது சிவ நிந்தை. இவ்வுண்மையெல்லம் அறிந்து சிவபெருமான் ஒருவரையே வழிபடுஞ் சமயம் சைவசமயம்”
-ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய
“சமய தீக்ஷிதா அநுட்டான விதி” நூல்
“யௌவன போகத்திற்குரிய 25 வயதுள்ள விஷ்ணுவினுருவம் பெறுவோர் இலக்குமியின் குசத்தைச்(முலை) சவைத்துக் குடித்தலும் அங்குளாரோடு கூடிக் குணானுபவத் தொழிலிழைத்துக் கொண்டிருத்தலுமாமென்பது அறியப் படுவதாயிற்று.”
-ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் எழுதிய “சைவ சமய சரபம்” எனும் நூல்.
இப்படி மகான்களாக சைவப் பெரியோர்களாக அறியப்படுகிறவர்கள் மாற்று சமயமான வைணவ தெய்வங்களை நிந்தித்து எழுதியவைகளை ஆதீன கர்த்தா அவர்கள் அறியவில்லையா?!
ஓரிரு உதாரணங்களை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். சைவர்கள் வைணவர்களையும்,வைணவர்கள் சைவர்களையும்,வைணவர்கள் ஸ்மார்த்தர்களையும் கடுமையாக எள்ளிநகையாடி விமர்ச்சித்து எழுதிய நூல்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் மறந்து விட்டு மதுரை ஆதீனம் பேசியிருப்பது வியப்பை அளிக்கிறது.
“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!”
எனும் சிவ வாக்கியார் சித்தர் பாடல் ஆதீனகர்த்தா அவர்களுக்கு ஞாபகம் இல்லை போலும். பட்டினத்தார் பாடல்களை ஆதீனம் அறியவில்லையா?! இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆதீனம் அவர்கள் இவற்றையெல்லாம் மறந்து பேசுவதுதான் அவரது அரசியல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக