மின்னம்பலம் : குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது இருக்கும் ராம் நாத் கோவிந்தை மீண்டும் தேர்ந்தெடுக்கலாம், துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவை நிறுத்தலாம் என்ற பொதுவான இரு வாய்ப்புகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் இருக்கின்றன.
ஆனால் இந்த இரு வாய்ப்புகளையும் பாஜக தலைமை பயன்படுத்த வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். அதன் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அல்லது இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் வாய்ப்பு வழங்க பாஜக மேலிடம் பரிசீலனை செய்து வருவதாக சொல்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தினர்.
தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் ராஜ் நாத் சிங் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று பேசப்படுகிறது. இப்போது பிரதமர் மோடி அமைச்சரவையில் மோடிக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ராஜ் நாத் சிங். ஆனால் நம்பர் டூவாக திகழ்பவர் அமித் ஷாதான். இதனால் ராஜ் நாத் சிங் வருத்தத்தில் இருப்பதாக 2019 ஆம் ஆண்டு மோடி இரண்டாம் முறை பிரதமரான போதே பேசப்பட்டது. அவரை அரசியல் போட்டியில் இருந்து அகற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தலாம் என்ற கருத்தும் பாஜகவில் நிலவுகிறது.
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்வதன் மூலம் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும் என்று திட்டமிடுகிறது பாஜக. அதனால்தான் ஓபிசி எனப்படும் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினத்தவர், இஸ்லாமியர்,. பெண்கள், தென்னிந்தியர் என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வுக்குப் பின்னால் பல்வேறு யூகங்கள் உலா வருகின்றன.
சாதி அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில்... நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் பிற்படுத்தபட்டோர் சமூகம்தான். அதே சமயம் இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த அடிப்படையில்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பற்றிய காரணிகள் பாஜக வட்டாரத்தில் பேசப்படுகின்றன.
தென்னிந்தியர் மற்றும் பெண் என்ற அடிப்படையில் தற்போதைய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜன் பெயர் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. பெண்கள் மற்றும் பழங்குடியினர் என்ற அடிப்படையில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான தேர்வில் முதன்மையான இடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள் பாஜகவினர். பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் ஆளுநர் அனுசுயா உகே, உபி ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் ஆகியோரது பெயர்களும் பேசப்படுகின்றன. ஆனால் பிரதமரும் குடியரசுத் தலைவரும் குஜராத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க சாத்தியமில்லை என்றும் சொல்கிறார்கள்.
பழங்குடியினர், பெண்களை அடுத்து இஸ்லாமிய சமுதாயமும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தீவிர பரிசீலனையில் இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆட்சி என்று பாஜக ஆட்சி மீது விமர்சனங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன. அதை வலுப்படுத்தும் வகையில் அண்மையில் பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா இஸ்லாமியர்களின் இறைத் தூதர் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்திய சர்ச்சை வெடித்தது. உலக அளவில் இஸ்லாமிய நாடுகளின் கண்டனத்துக்கு இந்தியா ஆளானது.
இந்த பின்னணியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக நிறுத்தி வெற்றிபெற வைத்தால் நுபுர் ஷர்மா மூலமாக உலக அளவில் முஸ்லிம் நாடுகளிடம் பாதிக்கப்பட்ட நல்லுறவையும், இஸ்லாமியர்களுக்கு எதிரியல்ல என்ற பெயரை இந்தியாவுக்குள்ளும் பெற முடியும் என்று கருதுகிறது பாஜக. அந்த வகையில் தற்போதைய கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முன்னாள் ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரது பெயர்களும் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் பேசப்படுகின்றன. இவர்களைத் தவிர தற்போதைய கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பெயரும் உத்தேசப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் எல்லாரையும் தாண்டி கடந்த முறை போல ஆச்சரியப்படுத்தும் முடிவுகளை பாஜக தலைமையும் பிரதமர் மோடியும் மேற்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக