மின்னம்பலம் : இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் லெஸ்பியன்ஸ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘காட்ரா’ என்ற இந்தி திரைப்படத்தை திரையிட ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் திரையரங்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
இயக்குநர் ராம்கோபால் வர்மா தற்போது ‘காட்ரா’ என்ற இந்தி படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தெலுங்கில் ‘டேஞ்சரஸ்’ என்ற பெயரிலும், தமிழில் ‘காதல் காதல்தான்’ என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படம் வரும் ஏப்ரல் 8-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தினை திரையிட மாட்டோம் என்று தியேட்டர் அமைப்புகளான ஐநாக்ஸூம், பி.வி.ஆரும் அறிவித்துள்ளன. “இந்தக் ‘காட்ரா’ திரைப்படம் லெஸ்பியன் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டது என்பதால் திரையிட விரும்பவில்லை என்று அந்த தியேட்டர் நிர்வாகங்கள் தெரிவித்திருக்கின்றன.
இது குறித்து டிவிட்டரில் செய்தியை வெளியிட்டிருக்கும் இயக்குநர் ராம்கோபால் வர்மா, உச்ச நீதிமன்றமே சட்டப் பிரிவு 377-ன்படி லெஸ்பியன் பழக்கம் சட்டப்படி குற்றமல்ல என்று சொல்லிவிட்டது. மேலும் சென்சார் போர்டும் இந்தப் படத்தைப் பார்த்து சான்றிதழும் வழங்கிவிட்டது. அதன் பின்பும் லெஸ்பியன்ஸ் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து படத்தைத் திரையிட மறுப்பது எந்த வகையில் நியாயம்?.
லெஸ்பியன் சமூகத்திற்கு எதிர்ப்பாளராக இந்தத் தியேட்டர் நிர்வாகத்தினர் இருக்கிறார்கள் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. லெஸ்பியன் சமூகத்தினர் மட்டுமன்றி அனைத்துத் தரப்பு மக்களும் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் சினிமாஸ் நிறுவனங்களை எதிர்த்து இதற்காகப் போராட வேண்டும். இந்த நிறுவனங்களின் இந்தச் செயல் ஒட்டு மொத்தமாக நமது மனித உரிமைகளை கேவலப்படுத்தியிருக்கும் செயலாகும் என்று இயக்குநர் ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்.
-அம்பலவாணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக