Noorul Ahamed Jahaber Ali - Oneindia Tamil : டெல்லி: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
நாடு முழுவதும் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தேசிய தேர்வு முகமை மூலமாக தேர்வை நடத்தி வருகிறது.
நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது.
அதன்படி, ஜூலை 17ம் தேதி நீட் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் என்றும், ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி மே 7ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக் கட்டணத்தை தேசிய தேர்வு முகமை உயர்த்தி இருக்கிறது.
அதன்படி, பொதுப் பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.1,600-ஆகவும், இதர பிற்படுத்தப்பட்டோர், EWS பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,400 ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல், பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.900-ஆக உயர்த்தப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக