மின்னம்பலம் : தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் நகரும் கூட்டுறவு வங்கி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.
கூட்டுறவு துறைக்கான ஒருங்கிணைந்த பயிற்சி கொள்கைகள் உருவாக்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.12 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும். கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனை செய்வதற்கு ஒரு பொதுவான செயலி உருவாக்கப்படும்.
மாநில அளவிலான பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் இணையம் அமைக்கப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 6970, நியாயவிலை கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் இல்லை. இந்த கடைகளுக்கு படிப்படியாக சொந்த கட்டடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மே 2021 முதல் மார்ச் 2022 வரை 120 பொதுவிநியோகத் திட்ட கடைகளுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் சொந்த கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அமைச்சர் பெரியசாமி கூறுகையில், கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு உட்பட்டு வைக்கப்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 4816 கோடி ரூபாய் மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகை கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்தார்.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக