கலைஞர் செய்திகள் : ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாட் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்தது. இதையடுத்து உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதால் 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது.
இதையடுத்து தேர்தல் முடிந்ததும் கடந்த மாதம் மார்ச் 28ம் தேதியில் இருந்து தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. அதேபோல் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோதாது என்று சுங்கச்சாவடி கட்டணங்களையும் ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடும் விலை உயர்வை கண்டித்து தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் இவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் வழக்கம்போல் ஒன்றிய அரசு மவுனம் காத்து வருகிறது. மேலும் நாடாளுமன்றத்தையும் ஒத்திவைக்கிறது.
இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் பா.ஜ.க-வைச் சேர்ந்த சுப்பிரமணியம் சாமி. இது குறித்து சுப்பிரமணியம் சாமி தனது ட்வீட்டர் பதிவில், "தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மக்கள் புரட்சிக்கு வித்திடும்.
நிதியமைச்சகத்தின் அறிவு வறட்சியே இதற்கு காரணம். அதனால்தான் இப்படி தவறான வழியில் போய்க் கொண்டிருக்கிறது. இதுவும் கூட தேச விரோதம்தான் பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்ய இதுபோல பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது என்பது நிர்வாத் திறமையின்மையின் அடையாளம்" என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக